Sunday, May 28, 2006

எது உண்மை ?


மதமாற்ற தடைச் சட்டம் 2004ம் ஆண்டிலிருந்தே அமலில் இல்லை - ஜெ, விளக்கம்

சென்னை: "எத்தனை முறை நீங்கள் திரும்பத் திரும்ப சொன்னாலும் மதமாற்ற தடைச் சட்டம் 2004ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அமலில் இல்லை", என்று ஜெயலலிதா பேசினார்.

சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத் தொடர் முழுக்க நீக்கி வைக்கப்பட்டதால் நேற்று தனி ஆளாக ஜெயலலிதா மட்டும் சபையில் பங்கேற்றார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:

ஜெயலலிதா: கவர்னர் உரையில் உண்மைக்கு மாறான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 2004-05ம் ஆண்டில் இந்திய அளவிலான பொருளாதார வளர்ச்சி வீதம் 6.90 சதவீதமாக இருந்தது. தமிழகத்தின் வளர்ச்சி வீதம் 8.73 சதவீதமாக இருந்தது. ஆனால், கவர்னர் உரையில் தமிழகத்தின் வளர்ச்சி வீதம் தேசிய வளர்ச்சி வீதத்தை விட குறைவானது என்று குறிப்பிட்டிருப்பது உண்மைக்கு மாறான தகவல். அதேபோன்று 2005-06ம் ஆண்டில் தேசிய அளவில் வளர்ச்சி வீதம் 8.1 ஆகவும் தமிழகத்தில் 8.46 ஆகவும் இருந்தது. அதுவும் தேசிய சதவீதத்தை விட அதிகம் தான். அதேபோன்று இலவச சைக்கிள் திட்டத்துக்கு மத்திய அரசு 20 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் இரண்டாம் ஆண்டு ஆறு கோடி ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இலவச சைக்கிள் திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி வருவாயில் இருந்து செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். மாநில அரசுகள் சிறப்பாக செயல்படும் போது மத்திய திட்டக் கமிஷன் அதை பாராட்டி 100 கோடி ரூபாய், 50 கோடி ரூபாய் வழங்குவார்கள். அப்படி வழங்கப்பட்ட தொகையில் இருந்து மாநில அரசு 20 கோடி ரூபாயை செலவழித்தது.

சபாநாயகர்: சீக்கிரம் முடியுங்கள்.

ஜெயலலிதா: எத்தனை முறை குறுக்கீடுகள் இருந்தன.

சபாநாயகர்: உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரைமணி நேரம் முடியப் போகிறது.

ஜெயலலிதா: நான் கடிகாரத்தை பார்க்கவில்லை. மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி தேர்தல் நேரத்தில் முதல்வர் கருணாநிதி ஒரு கருத்தைச் சொல்லி அதற்கு நான் விளக்கம் சொல்லி அந்த பிரச்னை அப்போதே முடிந்து விட்டது. ஆனால், தற்போது கவர்னர் உரையில் மீண்டும் அதே விஷயத்தை குறிப்பிட்டுள்ளனர். இது எப்படி இருக்கிறது என்றால் இறந்து போன ஒருவரை புதைத்து அடக்கம் செய்தாகி விட்டது. அவரை மீண்டும் வெளியில் எடுத்து இறந்து விட்டாரா என்று பார்த்து புதைப்பது போல் இருக்கிறது.


முதல்வர் கருணாநிதி: சாவில் சந்தேகம் இருந்தால் தோண்டிப் பார்த்து மீண்டும் புதைப்பதில் தவறில்லை.

சி.ஞானசேகரன்(காங்கிரஸ்): ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தால் அதை சட்டசபையில் வைத்து வாபஸ் பெறுவது தான் நடைமுறை.

ஜெயலலிதா: சட்டசபை அனுமதி பெறப்படாமல் ரத்தான சட்டத்தை மீண்டும் சட்டசபையில் வைத்து ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று 85-ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.


முதல்வர் கருணாநிதி: சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருந்தாலும் சட்டசபையில் வைத்து வாபஸ் பெற்று சந்தேகத்தை போக்குவதில் தவறல்ல.

சி.ஞானசேகரன்: ஆடு, கோழி சட்டத்திற்கு மட்டும் சட்டசபையில் வைத்து வாபஸ் பெற்றீர்களே? அது ஏன்? மதமாற்ற சட்டத்தை ஏன் விட்டுவிட்டீர்கள்?

ஜெயலலிதா: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே குறை கூறுவது வினோதமாக இருக்கிறது.

முதல்வர்: அப்படியெல்லாம் கற்பனை செய்யக் கூடாது. நான் அப்படி சொல்லவில்லை. இதுமாதிரி சொன்னால் நீங்கள் வகித்த பதவிக்கு அழகல்ல.

ஜெயலலிதா: தேர்தலின் போது மதமாற்ற தடைச் சட்டம் தொடர்ந்து அமலில் இருப்பதாக பிரசாரம் செய்தீர்கள். இப்போது, அதை சமாளிப்பதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வருகிறீர்கள். சட்டசபை அனுமதி பெறாவிட்டாலும் மதமாற்ற தடைச் சட்டம் ரத்தானது ரத்தானதாகவே இருக்கும்.

பொன்முடி: 85-ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உள்ளது என்று சொன் னீர்கள். அப்படியெல்லாம் மற்ற சட்டங்களை சட்டசபையில் வைத்து வாபஸ் பெற்றது ஏன்? இந்த சட்டத்தை சபையில் வாபஸ் பெறாதது ஏன்?

ஜெயலலிதா: கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் 2004ம் ஆண்டில் இருந்தே அமலில் இல்லை. நீங்கள் எத்தனை முறை சொன்னாலும் அந்த சட்டம் அமலில் இல்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நன்றி : தினமலர்

No comments: