Monday, January 17, 2005

வருத்தம் நீங்கியது

போன வாரம் ஒழுங்காக வாசிக்க முடியாமல் போனதற்கு வருத்தமாக இருந்தது. தற்போது அவ்வருத்தும் நீங்கியது.

அவ்வருத்தத்தை நீக்கிய பெருமை பி.கே.எஸ் அவர்களின் சொன்னார்கள்.. சொன்னார்கள்.. திண்ணை கட்டுரையைச் சேறும்.

யுனிகோடில் இங்கு

நன்றி: திண்ணை - மின் வாரஇதழ்
http://thinnai.com/pl0113059.html

சொன்னார்கள்... சொன்னார்கள்...
பி.கே. சிவகுமார்

ஆற்காடு வீராசாமி: இந்த மைல்கல் ஹிந்தி எழுத்துப் பிரச்னையிலே ஜெயலலிதா சொல்றதுதான் எடுபடுது. நம்ம பேச்சு 'வீக்'கா இருக்குது. ஒண்ணு செய்யுங்களேன். முன்னே தண்டவாளத்துலே தலை வெச்சுப் படுத்தமாதிரி...

மு.கருணாநிதி: இப்பவும் செய்யணுமா? விளையாடறிங்களா? அப்போ ரயில் வண்டியை தொலைவிலேயே நிறுத்துவான்னு தெரியும். தலையை வெச்சோம். இப்ப ஓடறது லாலு பிரசாத் ரயிலு! பிரேக் பிடிக்காம ஓடி வந்தாலும் வந்துரும்... தைரியம் இருந்தா நீங்க போய் வையுங்க தலையை.

- மேற்சொன்ன இருவரும் பேசிக்கொள்வதாக, ஜனவரி 5, 2005 துக்ளக் இதழில், வெளியிடப்பட்ட அட்டைப்பட கார்ட்டூன்

**** ****'

கொலையுண்டவர் ஒரு பிராமணர்; கைது செய்யப்பட்டிருப்பவரும் ஒரு பிராமணர்; கைது செய்தவரும் பிராமணர்; இதில் பிராமணரல்லாதார் எங்கே வந்தனர்' என்று கேட்கப்படலாம். சங்கராச்சாரியாரின் அதிகார அழிப்பால் பலன் பெறப்போவது அவர்கள்தான். தீண்டாமையை வலியுறுத்திய, சாதியைக் கட்டிக் காத்த சங்கராச்சாரியாரின் வீழ்ச்சி தலித்துகளுக்கு மகிழ்ச்சியளிப்பதுதான். ஆனால், சங்கராச்சாரியாரின் மீதுகூட சட்டம் பாயும், சாதி வெறியர்களை அது ஒன்றும் செய்யாது என்னும் கசப்பான உண்மையையும் சாதிப் பெரும்பான்மை மதப் பெரும்பான்மையைவிட ஆபத்தானது என்னும் தத்துவத்தையும் உணர்ந்ததால் பிராமணரல்லாதாரோடு சேர்ந்து தலித்துகள் கூத்தாட முடியாது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறி வைக்கலாம்.

- ஜனவரி 2005 காலச்சுவடு இதழில் தொல்பதி நரகர் என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில் ரவிக்குமார்

**** ****

பகுத்தறிவுப் பாசறைகள் கட்டித் தமிழகத்தை உய்விக்கத் திருவுள்ளம் பூண்டிருக்கிற கலைஞர் கருணாநிதி தன் ஆப்த நண்பர் சாவியை ஆசிரியராகக் கொண்டு 'குங்குமம்' பத்திரிகையைத் தொடங்கியபோது முதல் இதழின் அட்டைப்படம் என்ன தெரியுமா? ஒரு பெண் கண்ணாடியில் முகம் பார்த்துக் குங்குமம் இட்டுக் கொள்கிறார்; கண்ணாடிக்குப் பக்கத்தில் சுவரில் ஒரு படம் தொங்குகிறது. பரமாச்சார்யாள் படம்.

- ஜனவரி 2005, காலச்சுவடுக்கு அளித்த நேர்காணலில் தீம்தரிகிட இதழின் ஆசிரியர் ஞாநி.

**** ****

பொதுவுடைமைக் கட்சியின் தொடக்க காலத்தில் ஏகாதிபத்ய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு என்னும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். நேரடியாக ஆதிக்க-அதிகார சக்திகளை எதிர்ப்பதில் பொதுவுடைமைவாதிகளைவிடப் பெரியார் பின்தங்கித்தான் இருந்தார்.

- ஜனவரி 2005, காலச்சுவடு வாசகர் கடிதத்தில் ரவி சேகரன், மதுரை - 6.

**** ****

காலச்சுவடை சங்கர மட, ஜெயேந்திரர்களை ஆதரிக்கும் பத்திரிகையாக நீங்கள் மாற்ற நினைத்தால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே? எதற்கு இந்தப் பூசிமெழுகல்?- ஜனவரி 2005 காலச்சுவடில் பிரசுரமான பிரபஞ்சனின் கடிதத்திலிருந்த சில வரிகள்தலையங்கத்தை 'ஊன்றிப் படித்துப்' பிரபஞ்சன் கண்டுபிடித்துள்ளவை அவருக்குள் இருப்பவைதானே தவிர தலையங்கத்தில் இருப்பவையல்ல. அவர் ஒரு படைப்பாளியென்பதால் (இந்துவாக இருந்தாலும்கூட) அந்தப் பிரதியின்மீது தனது கற்பனைகளை எழுதவும் செய்துவிட்டார் போலும். எங்களிடம் பிற்போக்குத்தனத்தைக் கண்டுபிடித்துச் சீறியிருக்கிறார் பிரபஞ்சன். கிணற்றுக்குள் தெரிவது தனது பிம்பம்தான் என அறியாமல் பாய்ந்த சிங்கத்தின் கதைதான் நினைவுக்கு வருகிறது.

- ஜனவரி 2005 காலச்சுவடில் ஆசிரியர் குழு பிரபஞ்சனுக்கு அளித்த பதிலிலிருந்து சில வரிகள

்**** ****

உடுப்பி மடத்தைச் சேர்ந்த பேஜாவர் சாமி ஒருவர் இருக்கிறார். அயோத்திப் பிரச்னையில் அவரும் ஈடுபட்டுள்ளார். அதில் அவருடைய நிலைப்பாட்டை நான் ஒப்பவில்லை. ஆனால் அவர் புரட்சிகரமான ஒரு காரியத்தைச் செய்தார். அவர் அரிஜனங்களின் சேரிக்குச் சென்றார். அதைக் கேட்டு முதலில் அம்மா தத்தளித்துப் போனார். பின்னர் அரிஜனங்களும் நம் எல்லோரையும் போன்ற மனிதர்களே என்னும் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அந்தச் சுவாமிகளுக்கு ஐம்பது வயதானபோது, நான் அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய முற்போக்கு நண்பர்கள் அதற்காக என்னை விமர்சித்தார்கள். பேஜாவர் சுவாமி மாற்றத்தை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்ததால், என் அம்மாவும் ஓர் அடி எடுத்து வைத்தார். ஆனால், நான் நூறு அடி எடுத்து வைத்தாலும் என் அம்மா ஓர் அடி எடுத்து வைப்பது சந்தேகம். நம்முடைய புரட்சிகரச் செயல்பாடுகள் எல்லோரையும் சென்று அடைவதில்லை. ஆனால், பேஜாவர் சுவாமிகள் போன்ற ஒருவர் செய்யும் ஒரு புரட்சிகரமான காரியம் எல்லோர் கவனத்திற்கும் வருகிறது. அவர்மீது எனக்குப் பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரிடம் நம்பிக்கை இருக்கிறது. சமூக மாற்றங்களுக்கு நம்மைப் போன்றவர்கள் முதல் காரணர்களாகிறோம். சுவாமிஜியைப் போன்றவர்கள் அடுத்த கட்டக் காரணர்களாகிறார்கள். என் அம்மாவும் அந்த வழியில் வந்தவர்.

- ஜனவரி 2005, காலச்சுவடில் "அம்மா காட்டிய வீடு" கட்டுரையில் யு.ஆர்.அனந்தமூர்த்தி

**** ****

கேள்வி: நீங்கள் முதல்வராக இருந்தால், ஜெயேந்திரர் மீது நடவடிக்கை எடுத்திருப்பீர்களா?

மு.கருணாநிதி: நான் முதல்வராக இருந்திருந்தால் இந்தக் குற்றச்சாட்டுகளே எழாமல் இருந்திருக்கலாம் அல்லவா?

கேள்வி: அரசியல் அனுபவத்தில் ஜூனியரான தயாநிதி மாறனுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் மற்ற தி.மு.க. அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

மு.கருணாநிதி: அப்படியா? தி.மு.க. அமைச்சர்களில் நான் தனியாக ஒருவருக்கு முக்கியத்துவம் இதுவரையில் தரவில்லை. இனியும் இல்லை. தயாநிதி மாறன் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால் திருஞான சம்பந்தன் என்று பாராட்டியிருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே!

- டிசம்பர் 29, 2004 தேதியிட்ட தமிழ் இந்தியா டுடேக்கு மு.கருணாநிதி அளித்த நேர்காணலிலிருந்து எடுத்த இரு கேள்வி பதில்கள

்**** ****

சில மாதங்களுக்கு முன்புவரை ஏ.பி.வாஜ்பாயுடன் அவர் இருந்த புகைப்படங்கள் போய் இப்போது அவர் சோனியாகாந்தி மற்றும் மன்மோகன் சிங்குடன் இருக்கும் படங்கள் வீட்டுச் சுவரை அலங்கரிக்கின்றன.

- திரு. மு.கருணாநிதி வீட்டைப் பற்றி இந்தியா டுடேவின் எடிட்டர் பிரபு சாவ்லா, டிசம்பர் 29, 2004 இதழில் வெளியான கருணாநிதியின் நேர்காணலின் முன்னுரையில் சொன்னது.

**** ****

கேள்வி: மத்தியில் ஆளும்கட்சியுடன்தான் எப்போதும் கூட்டணி வைத்து வந்தீர்கள்?பரூக் அப்துல்லா: பிழைத்திருக்க அதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

- ஆஜ் தக் சேனலின் சீதி பாத் நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா சொன்னதாக டிசம்பர் 29, 2004 இந்தியா டுடே தமிழ் இதழில்.

**** ****

கேள்வி: கண்காட்சியில் வருகையாளர் எண்ணிக்கை போலவே விற்பனையும் அதிகரிக்கிறதா?

BAPASI தலைவர் இரா.முத்துக்குமாரசாமி: அதிகரிக்கிறது என்றே நினைக்கிறேன். பல்வேறு காரணங்களால் பதிப்பகங்கள் விற்பனை விவரங்களை ஒளிவுமறைவின்றி கூறுவதில்லை. ஸ்டால்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டதால் பதிப்பகங்களின் வருமானம் பகிர்ந்தளிக்கப்பட்டு விடுகிறது.

- டிசம்பர் 29, 2004 தேதியிட்ட இந்தியா டுடே இதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து

**** ****

இவ்வளவு பெரிய நிறுவனத்திற்குத் தொந்தரவு தருவதில் அர்த்தமில்லை.

- ரிலையன்ஸ் பற்றி கம்பெனி விவகார அமைச்சர் பிரேம் சந்த் குப்தா சொன்னதாக, டிசம்பர் 29, 2004 தேதியிட்ட இந்தியா டுடேவில

்**** ****

கேள்வி: தமிழ்ச் சூழலில் உங்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறீர்களா?

அசோகமித்ரன்: வெளிமாநிலங்களில், வெளி மொழிகளில் எனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தோடு ஒப்பிட்டால் இங்கு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு அங்கீகாரம் கிடைத்திருந்தால் இன்னும் உற்சாகமாக இயங்கியிருப்பேன் என்று தோன்றுகிறது. என்னுடைய எந்தப் புத்தகத்திற்கும் வெளியீட்டு விழா நடந்ததில்லை. அதை யாருடைய குற்றமாகவும் சொல்ல முடியாது. நானும் அதற்கு முயற்சி செய்யவில்லை.

- டிசம்பர் 29, 2004 தமிழ் இந்தியா டுடேவுக்கு அசோகமித்ரன் அளித்த நேர்காணலில்

**** ****

காயம்பட்ட நீச்சல் வீரர் சோபினி ராஜன் மருத்துவ கடன் அதிகமானதால் தற்கொலை.- ஜனவர் 5, 2005 இந்தியா டுடேவிலிருந்துஅதைக் குடிக்கிறவன்தான் குற்றவாளி. கொடுக்கிறவன் இல்லை.

- ஊக்க மருந்துப் பிரச்னையில் பயிற்சியாளர்களுக்குத் தண்டனை கிடையாதா என்பது பற்றி விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் தத் சொன்னதாக ஜனவரி 2005, தமிழ் இந்தியா டுடேவில்

**** ****

வீரப்பன் என் கனவில் வந்தபோதெல்லாம் அவனது கதையை நான் முடிப்பேன் என்று சொல்லியிருக்கிறேன்.

- சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார் சொன்னதாக ஜனவரி 5, 2005 இந்தியா டுடேவில்

மரணத்தை அதன் நுனிவரை சென்று ருசித்ததுண்டு.

பி.எஸ்.எஃப்பில் இருந்த காலத்தைப் பற்றி கே.விஜயகுமார் சொன்னதாக ஜனவர் 5, 2005 இந்தியா டுடேவில்

**** ****

கேள்வி: உங்களுடைய நிறுவன விளம்பரங்களில் தயாரிப்புகளின் படங்களைக்க்காட்டிலும் உங்களுடைய படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஏன்?

வசந்த் & கோ எச்.வசந்தகுமார்: எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் என்னுடைய புகைப்படம் வருவதால் மக்கள் என்னைச் சந்திக்கும்போது அறிமுகமான, பழக்கமுள்ள நபர் போல என்னிடம் பழகுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அது உதவுகிறது.

- ஜனவரி 5, 2005 தமிழ் இந்தியா டுடேவிலிருந்து

**** ****

ஊகிக்க முடியாத இடங்களிலிருந்தெல்லாம் தரகர்கள் வெளிப்படுவார்கள். ஜெயேந்திரர் 1987-இல் மடத்தைவிட்டு வெளியேறியது பற்றி 1991-இல் தான் வெளியிட்ட கதையால் எரிச்சலடைந்து ஜெயேந்திரர் தனக்கு மிரட்டல் அனுப்பியதாக அண்மையில் நக்கீரனில் எழுத்தாளர் ம.வே.சிவகுமார் எழுதியிருக்கிறார். அப்போது மடத்தின் சார்பாகத் தன்னை அச்சுறுத்தியது, பின்னர் சமரசம் பேசியது எல்லாமே சக எழுத்தாளர் பா.ராகவன் என அவர் சொல்லியுள்ளார்.

- ஜனவரி 2005 காலச்சுவடுக்கு அளித்த நேர்காணலில் இதழாளர் தீம்தரிகிட ஞாநி

**** ****

ஒருமுறை சந்திப்புக்குப் பின் வெளியில் அமர்ந்திருந்த சதாசிவத்திடம் கேட்டேன்."சுப்புலக்ஷ¢மியின் தனிப்பட்ட சிறப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?""அவளுடைய அடக்கம்" என்றார்.

- ஜனவரி 2005 காலச்சுவடில் எம்.எஸ். பற்றிய கட்டுரையில் வாஸந்தி.

**** ****

பெரியாரை விமர்சிக்கிறவர்கள் எல்லாம் பாசிஸ்டுகள், பார்ப்பன அடிவருடிகள் என்றால் இடதுசாரிகள் உட்பட இங்கு ஒருவரும் மிஞ்சப் போவதில்லை.

- ஜனவரி 2005 காலச்சுவடில் பெரியார் பற்றிய தன் கருத்துகளுக்காக ரவிக்குமார் வசைபாடப்படுவது பற்றி, பாணர் எழுதிய கடிதத்திலிருந்து

**** ****

முழுக்க முழுக்க சதிகாரர்களால் நடிக்கப்படும் ஒரு நாடகத்தில் நாம் உண்மையைத் தேடி அலைவதை முதலில் நிறுத்தலாம்.

- டிசம்பர் 2004 உயிர்மை தலையங்கத்தில் வீரப்பன் சுடப்பட்டது, ஜெயேந்திரர் கைது ஆகியவற்றைப் பற்றி எழுதியபோது மனுஷ்ய புத்திரன் சொன்னது.

**** ****

புதைகுழியில் கிடைத்த ஒரு எலும்புத்துண்டை வைத்துக் கொண்டு பிரம்மாண்டமான ஒரு டினோசாரை உருவாக்குவது போன்றதே பத்திரிக்கையாளரின் வேலை.

- கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் மேற்கோளாகத் தன் கட்டுரையின் முகப்பில் டிசம்பர் 2004 உயிமமையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது.

**** ****

கேள்வி: பா.ம.க. இப்போது புதிதாகக் கையில் எடுத்துள்ள தமிழ் என்ற ஆயுதம், அவர்களுக்கு எந்த அளவுக்கு உதவும்?

சோ ராமசாமி: மேடைப் பேச்சுக்கு உதவும். கருணாநிதியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள உதவும். அவ்வளவுதான். ஓட்டுக்கு உதவாது.

கேள்வி: கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர, ஸ்ரீ சாய்பாபாவின் முயற்சி முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறதே? உண்மையா?

சோ ராமசாமி: கால்வாயின் ஒரு பகுதி, அவருடைய முயற்சியினால் சீரமைக்கப்படவில்லை என்றால் - வருகிற தண்ணீரில் பெரும்பகுதி 'எவாபரேட்'டாகி (ஆவியாகி) விடுகிற ஆபத்து இருந்திருக்கும். இது குறிப்பிடத்தக்க அளவில் தவிர்க்கப்பட்டது, அவருடைய முயற்சியினால்தான். பணத்தையும் செலவிட்டு, பணியையும் சீராக முடித்து வைத்த அவருடைய உதவிக்கு நன்றி சொல்லக்கூட, தமிழக அரசுக்கும் மனம் வரவில்லை. எதிர்க்கட்சிகளும் முன்வரவில்லை. கழகங்களுக்கு உள்ள 'காம்ப்ளெக்ஸின்' விளைவு இது.

- ஜனவரி 5, 2005 துக்ளக் கேள்வி - பதிலில் சோ

**** ****
நன்றி: காலச்சுவடு, உயிர்மை, துக்ளக், தமிழ் இந்தியா டுடே.

No comments: