தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு
சென்னை, மார்ச். 28-
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
செயற்குழு கூட்டம் தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்க செயற்குழு கூட்டம் சென்னையில் அதன் தலைவர் காயல் ஆர்.எஸ். இளவரசு தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-
மீண்டும் முதல்-அமைச்சர்
தி.மு.க. ஆட்சியில் தீவிரவாதிகள் என்னும் இழிச்சொல் திணிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் காவல் கேடயமாக விளங்கி, எங்கள் இளைஞர்களுக்கு சுய தொழில் உதவி, பூரண பாதுகாப்பு, இட ஒதுக்கீட்டுக்குத் தேவையான முகாந்திர வேலைகள் என தன் ஆதரவுக்கரம் கொடுத்து காத்து வருபவர், முதல் - அமைச்சர் ஜெயலலிதா. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பேதங்கள் இல்லாமல், எல்லோரும் சமம் என்பதை செயல்வடிவில் செய்து காட்டி அனைவரையும் அரவணைத்து காத்து நிற்கும் முதல் - அமைச்சரை செயற்குழு பாராட்டுகிறது.
குடிநீர் பஞ்சத்தை சாதுர்யமாக கையாண்டு வென்ற பாங்கு; மத்திய அரசு பலமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய போதும் பாமரர்க்கு உதவ பஸ் கட்டணத்தை உயர்த்தாமை; மகளிர் முன்னேற்றத்திற்கான மாண்புயர் சேவைகள்; இலவச சைக்கிள் திட்டம்; வெள்ளம், சுனாமி நிவாரணப்பணிகள்; அன்னதான திட்டம்; கட்ட பஞ்சாயத்து, ரவுடி ராஜ்யம், கந்து வட்டியை ஒழித்து, அச்சமற்ற தமிழகத்தை உருவாக்கிய உன்னத மாண்பு; காலியான கஜானாவை கையிலெடுத்து தன் ஆற்றல் மிக்க செயல்வளத்தால், ஆட்சி செய்து தன்னிறைவு தமிழகமாக மாநிலத்தை தலை நிமிர செய்த வல்லமை; என்றும் நல்லதை செய்வோம் அல்லதை சாடுவோம் என நாடு போற்ற நல்லாட்சி செய்து வரும் ஜெயலலிதா மீண்டும் முதல் - அமைச்சராக பொறுப்பேற்க அர்ப்பணிப்பு உணர்வோடு கடமை ஆற்ற தீர்மானிக்கப்படுகிறது.
பிரசாரம்
இயக்க தலைவர் காயல் ஆர்.எஸ். இளவரசு தலைமையில் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பிரசாரம் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி: தினத்தந்தி 28 மார்ச் 2006
Tuesday, March 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment