Sunday, March 26, 2006

தமிழக முஸ்லிம்களின் உள்ளக்குமுறல் - 2

தமிழக முஸ்லிம் சமுதாயம் அமைப்பு ரீதியாக தன் பலத்தை வேகமாக உணர்ந்துக்கொள்ளத் தொடங்கியது-காயிதே மில்லத் காலத்திற்கு பிறகு-மிக சமீப வருடங்களில் தான் . அதே வேகத்தில் சைத்தானிய சூழ்ச்சிகளுக்கு பலியாகி 'யார் பெரியவர் நீயா நானா' என்ற போட்டியில் இறங்கியுள்ளவர்களால் சராசரி தமிழக முஸ்லிமுக்கு மனக்கிலேசம் தான் ஏற்பட்டுள்ளது.

இரண்டு தரப்பாக பிரிந்தும் பிரித்தும் கிடப்பவர்கள் 'கூட்டணி தர்மங்களு'க்காக நேற்று வரை குற்றம் சுமத்திய அரசியல்வாதியை புகழவும் எதிர்தரப்பை இகழவுமாக - ஒரு குழப்பகொடை வள்ளல்களாகவும் காட்சியளிக்கின்றனர்.

கொள்கை மாறுபாடோ, சொத்துத் தகராறோ-அவரவர் வழி என்று விட்டுவிடலாம். நாளை அல்லாஹுத்தஆலாவிடம் அவரவர் பதில் சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் இங்கு நடப்பதென்ன?'தலைவர்'களாக 'வெளிச்சம்' விரும்பி ஒற்றுமையை உடைத்தவர்கள் - தன்னை முன்னிலைப்படுத்தி சமுதாயத்தை பின்னால் தள்ளியவர்கள் - ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய இத்தகு காலத்திலும் 'ஈகோ மோதலில்' சிக்குண்டு கிடக்கிறார்கள்.

இரு தரப்பாகப் பிரிந்து இரு அணிகளிலும் இடம் பெறுவதால் 3+3 என்று தொகுதிகள் கிடைக்கிறதே என்று ஒரு சிறு ஆறுதலாவது இருந்தது தான். தி.மு.க அணி முஸ்லிம் அமைப்புகளின் தொகுதி பட்டியல் முதலில் வெளிவந்துவிட அதை எதிர்பார்த்தது போல ஜெயலலிதாவும் அந்த மூன்று தொகுதிகளில் இரண்டை தனது பக்க முஸ்லிம் அமைப்புகளுக்குத் தந்து 'எப்படியாவது அடித்துக்கொண்டு கிடங்களடா' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை எதிரியை விடவும் கூட்டணியினரை முதலில் பலி கொடுப்பவர் என்பதை (பி.ஜே.பி. உட்பட) அனைவரும் அறிந்த பாடமே.

கொள்கை சகோதரனுடன் மோத நேரிடுகிற குறிப்பிட்ட அந்த இரு தொகுதிகளையாவது (வாணியம்பாடி, பாளையங்கோட்டை) மாற்றிக்கேட்கும் திறன் கூட நமது 'ஜெ.சார்பு' சகோதரர்களுக்கு இல்லாமல் போனதேன்? வழக்கம் போல வாதத் திறமையால் இதற்கும் தீர்வு கண்டுவிடலாம் என்று நினைத்தார்களோ?இப்போதும் காலம் கடந்துப் போகவில்லை. அந்த இரண்டு தொகுதிகளையும் திருப்பிதந்துவிட்டு வேறு இரு தொகுதிகளை 'அம்மா'விடம் கேட்டுப்பெறுவார்களா?

அரசியல் காரணங்கள் ஆயிரம் இருக்கட்டும். சமுதாய நலன் என்ற பார்வையுடன் தேர்தல் அரங்கிலாவது ஒன்றுபட்டு போராடக்கூடாதா?

1 comment:

அபூ ஷைமா said...

அட நீங்க வேற,

இந்த 'சமுதாயப் பேரியக்கங்கள்' இறைவனுக்குப் பயந்திருந்தால் இப்படி எல்லாம் செய்வார்களா?

'வாழ்வது எதிரியே எனினும், வீழ்வது சமுதாயமாக இருக்கட்டும்' - இது தான் இந்த கொள்கைச் சிங்கங்களின் புதிய கொள்கை முழக்கம்.