Friday, March 31, 2006

சிறுபான்மையினர் கூட்டமைப்பு முடிவு

ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு!
சிறுபான்மையினர் கூட்டமைப்பு முடிவு!!


சென்ற 22-03-2006 அன்று சென்னை சாந்தோம் உயர்மறை மாவட்ட மேய்ப்புப் பணி மையத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிப் பது என அறிவித்துள்ளது.

கடந்த 5 வருடங்களாக அதிமுக அரசு தன் கொள்கையாலும், செயல்களாலும் சிறுபான்மையினர் நலனுக்கு முரணாகவே நடந்துள்ளது. உதாரணமாக மதமாற்ற தடைச் சட்டத்தை வாபஸ் பெறாதது, தேசப் பிதா காந்தியடிகளைக் கொன்றது ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சேதான் என்ற வரலாற்று உண்மையை பாடக்குறிப்பில் இருந்து நீக்கியது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு அளிப்பதாக 2001 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிறைவேற்றத் தவறியது மற்றும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஜாமீனில் விடுதலை செய்யத் தவறியது என தொடர் சிறுபான்மை மக்களின் உரிமைகளை அதிமுக அரசு பறித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள சிறுபான்மை கூட்டமைப்பு, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு, சமயச் சிறுபான்மையினரின் பிற்பட்ட தன்மையைக் கண்டறிய ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அமைத்தது, இராணுவம் உள்ளிட்டவற்றில் முஸ்லிம்களின் பங்கேற்பைக் கண்டறிய ராஜேந்தர் சச்சார் ஆணையம் அமைத்தது, இனப்படுகொலை கலவரங் களைத் தடுக்க 'மதக்கலவரத் தடுப்புச் சட்டம்' இயற்றியது, மற்றும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கிலிருந்து சென்ற வாஜ்பேயி அரசால் விடுவிக்கப்பட்ட அத்வானியை முறையான விசாரணை மூலம் நீதியின் பிடியில் இருந்து தப்ப விடாமல் நீதியை நிலைநாட்டியது என பல்வேறு வகையில் சிறுபான்மை சமூகம் நாட்டின் இறையாண்மை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் முகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு செயலாற்றுவதால் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதரிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஜெயலலிதாவிற்கு தங்கத் தாரகை விருது அளித்து அதன் மூலமாக சிறுபான்மை மேம்பாட்டு ஆணையத் தலைவரான சில்வா பிரகாஷ், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பஷீர், தாவுத் மியாகான், உமர் பாரூக், தர்வேஸ் ரஷாதி, இனாயத்துல்லாஹ் ஆகியோர் 'நடுநிலை வகிக்க வேண்டும்' என்று கூறினர். ஆயினும் கலந்து கொண்டோரில் பெரும்பான்மையினர் சிறுபான்மை கூட்டமைப்பின் தீர்மானத்தை ஆதரித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

செய்தியாளர் சந்திப்பில் சிறுபான்மை கூட்டமைப்பு தலைவர் பேராயர் பீட்டர் பெர்ணான்டோ, பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பேராயர்கள் எஸ்றா சற்குணம், சேவியர் அருள்ராஜ், சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர், சி.எஸ்.ஐ. திருச்சபை மற்றும் ஈ.எஸ்.ஐ. திருச் சபையைச் சேர்ந்தவர்கள், ஹஸனபர் அலி, ஜிப்ரி காசிம், ஆர்.கே.நூர், கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், வழக்கறிஞர் சிராஜுதீன் மற்றும் கிறிஸ்தவ இயக்கங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.

நன்றி: www.tmmkonline.org

1 comment:

அருளடியான் said...

தி.மு.க கூட்டணியை ஆதரிக்கும் முடிவுக்காக, சிறுபாண்மையினர் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டது வருந்தத்தக்கது. கடந்த தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு எதிரான வலுவான அணிக்கு முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் வாக்களிக்க முடிவு செய்தனர். தற்போதைய நிலை அப்படியில்லை. எனவே, அவர்கள் இத்தேர்தலை உணர்ச்சிபூர்வமாக அணுகத் தேவையில்லை. மிகவும் இயல்பாக வேட்பாளர் தகுதி, உள்ளூர் பிரச்சினைகள் போன்ற பல்வேறு அம்சங்களை அலசி வாக்களிக்கலாம். த.மு.மு.க, தவ்ஹீத் ஜமாஅத் இரு அமைப்பினரது உணர்ச்சிகரமான பேச்சுகளும், எழுத்துகளும் இப்போது பொருத்தமாகத் தெரியவில்லை. சிறுபாண்மையினர் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட காரணமான எஸ்ரா சற்குணம், செ. ஹைதர் அலி (பொதுச் செயலாளர், த.மு.மு.க) இருவருமே கண்டிக்கப் பட வேண்டியவர்கள்.