Monday, March 20, 2006

தமிழக முஸ்லிம்களின் உள்ளக்குமுறல் - 1

'இதுதான் இஸ்லாம் ' வலைமனையில் கேட்கப்பட்டதொரு கேள்வியும் அதற்கான பதிலும் தமிழக முஸ்லிம்களின் இன்றைய உள்ளக்குமுறலை அப்படியே படம் பிடித்தாற்போலிருந்தது. நம் வாசகர்களும் அதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில், பதிலளித்த ஆசிரியரின் அனுமதி பெற்று இங்கு தருகிறேன்.

(இதில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அவற்றை தயக்கமின்றி எழுதலாம். ஆரோக்கியமான ஒரு கருத்து ப் பரிமாற்றத்தை நமக்கிடையே உருவாக்குவதும் அதனால் தேவையற்ற குழுப்பங்களை களைந்து சமுதாய ஒற்றுமையை முடிந்த அளவு பேணுவதும் என் விருப்பமாகும்).

கேள்வி:
"இந்தியாவின் அழைப்பாளர் பிஜே பற்றி நாம் என்ன முடிவெடுப்பது அவர் கூறும் கருத்துக்கள் எல்லாம் தவ்ஹீத் கொள்கைக்கு முரணானதா...? "

பதில்:
"ஆம் அப்படித்தான் என்று ஒரேயடியாக நாம் கூறிவிட மாட்டோம். ஏகத்துவ கொள்கை விஷயத்தில் அவரிடம் தீர்க்கமான பார்வை இருந்தாலும் இஸ்லாமிய சட்டங்களை விளங்கும் - விளக்கும் போக்கில் அவரிடம் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இது மனித இயல்புதான் என்றாலும் தவறை சுட்டிக் காட்டினால் ஏற்கும் மனப்பக்குவம் அவரிடம் அற்றுப்போய் விட்டது.

பிறைப்பார்த்தல் - ஜகாத் - முதஷாபிஹாத் பிரச்சனை - சமூகத்தை பிரித்தாலும் இயக்க சிந்தனை - ஏகத்துவம் என்பது முஸ்லிம்களின் கொள்கையாக இருக்கும் போது ஏகத்தவவாதி - தவ்ஹீத்வாதி என்று அடிக்கடி கூறி அவரை பின்பற்றுபவர்களிடம் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி அவர்களை சாராதவர்களெல்லாம் தவ்ஹீதுக்கு எதிரானவர்கள் என்ற மாயையை உருவாக்குவது என்று பட்டியலிடலாம்.

எந்த மெளலவியும் கவனம் செலுத்தாத - கண்டுக் கொள்ளாத - அக்கறை எடுத்துக் கொள்ளாத அரபு நூல்களையெல்லாம் புரட்டி அதன் கருத்தோட்டங்களை மக்கள் மன்றத்தில் வைத்தவர் பிஜே. கடந்தக்காலங்களில் ஏகத்துவ சிந்தனை தமிழக மக்களிடம் மலர்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் அதற்கான உழைப்பும் குறைத்து மதிப்பிட முடியாத அளவிற்கு உயர்ந்ததாகும். 1990களுக்குப் பின் ஏகத்துவத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லத்துவங்கிய யாராக இருந்தாலும் அவர்கள் ஏதோ ஒரு வித்தில் பிஜேயிடமிருந்து பாடம் படித்தவர்கள் என்று அடித்து சொல்லலாம். இதை அவர்கள் மறுத்தாலும் அதுதான் உண்மை.

அரபு மதரஸாக்களில் பாடம் படித்து வெளியேறுபவர்களில் ஒரு சதவிகிதத்ததைத் தவிர மற்றவர்கள் உலகக் கல்வியற்றுப் போய் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் சுமையாக கிடந்த காலகட்டங்களில் அதிலிருந்து தனித்துவத்துடன் வெளிபட்டவர் சகோதரர் பிஜே. தன்நம்பிக்கை, அயராத உழைப்பு என்று அவரிடம் இருக்கும் படிப்பினைகள் பிற மெளலவிகளுக்கு வழிக்காட்டக் கூடியவைகளாகும்.

தமிழகத்தின் மொத்த முஸ்லிம்களும் மீடியாவின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என்றால் சந்தேகமில்லாமல் அது பிஜேயின் மீடியா உத்திதான்.

குர்ஆனும் - சுன்னாவும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்று இன்றைக்கு ஆயிரம் பேர் பேசினாலும் அதை தமிழர்களின் மனங்களில் ஆழமாக பதிய செய்தவர் பிஜே. இறைவன் அவரது உழைப்பின் வழியாகத்தான் மகா கொடியப் பாவமான இணைவைத்தலிலிருந்து நம் அனைவரையும் மீட்டான் என்பதில் நாங்கள் ஆனந்தம் கொள்கிறோம். புகழுக்குரியவன் இறைவன்.

அதே சமயம் ஆரம்பக் காலத்திலிருந்து அவரிடம் உள்ளக் குறைப்பாடுகளை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. அதில் மிக முக்கியமானது தனக்கு பிடிக்காத யாராக இருந்தாலும் அவர்களை குறைக் கண்டு ஒதுக்குவதாகும். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் ஏராளம். ஆரம்பத்தில் அபூ அப்தல்லாஹ், பிறகு ஜாக் என்ற ஒரு இயக்கமும் அதன் நிர்வாகம் முதல் உறுப்பினர்கள் வரை, ஹாமித் பக்ரி, பழ்லுல் இலாஹி, மொய்தின் (முன்னாள் முபீன் ஆசிரியர்) ஸாஜிதா புக் சென்டர் ஜகரிய்யா இவர்கள் அனைவரும் ஏகத்துவ பிரச்சாரத்தில் அவருடன் முன்னணியில் நின்றவர்கள் என்பது மட்டுமின்றி அவருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கியவர்கள். அதன் பிறகு இன்றைக்கு தமுமுக என்ற வலுவான ஒரு மக்கள் இயக்கம், நஜாத்திலிருந்து வெளியேறிய அன்றயை கட்டத்தில் நஜாத் புத்தகத்தை அழிக்க முயற்சி, பின்னர் ஜாக் என்ற இயக்கத்தை துவங்கி அதிலிருந்து வெளியேறி அந்த இயக்கத்தை அழிக்க முயற்சி, அரும்பாடு பட்டு தமுமுக வளர்ந்த பிறகு அதிலிருந்து வெளியேறி இன்றைக்கு அந்த இயக்கத்தை இல்லாமலாக்க தீவிர முயற்சி என்று அவருடைய மனப்பான்மை இதே வழியில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. (அவரால் ஒதுக்கப்பட்ட இதர சமுதாய பிரமுகர்களையும் தனி மனிதர்களையும் நாம் இங்கு குறிப்பிடவில்லை) அவரால் ஒதுக்கபட்ட அனைவரும் அவரால் குறைப்பாடுள்ளவர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்களாவார்கள். அவர் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் தான் குறைப்பாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்று அவர் நினைத்துக் கொள்கிறாரா... தனி மனிதனாக நின்று இவர் பலரை குறைக்காணும் அதே போக்கில் நூற்றுக்கணக்கான கைகள் அவரை நோக்கி குறைப்பாடுள்ளவர் என்று நீள்கிறதே அதற்கு என்ன பதில்? பிறருடைய குறைக்களை சீடிக்களாக போட்டு வெளியிடுபவர் (பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பது குர்ஆன் வசனம்) தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மெளனமாகி விடுகிறார் என்றால் இந்த இரட்டை நிலைப்பாட்டுக்குப் பெயர் என்ன? இன்றைக்கு அவருடன் இருப்பவர்களில் ஒரு நான்கு, ஐந்து பேர்களைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள். அவரை தூரத்தில் நின்று பார்த்தவர்கள் இன்றைக்கு நெருங்கி இருக்கிறார்கள். இவர்களும் நாளைக்கு ஒதுக்கப்படுவார்களோ... இறைவன் தான் அறிவான்.

பிஜே சொன்னால் தான் தவ்ஹீத் - பிஜே சொன்னால் தான் இஸ்லாம் என்று கண்மூடித்தனமாக பின்பற்றும் சிறு அளவிளான ஒரு கூட்டம் உருவாகியுள்ளது நிசர்தனமான உண்மை. இதை நன்கு பிஜே அறிந்த நிலையிலும் கண்டிக்காமல் மேலும் வளர்க்கவே விரும்புகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. 'மனிதன் பகுத்தறிவால் தான் சிறப்புப் பெறுகிறான் அதை என்றைக்கு அவன் இழக்கின்றானோ அன்றைக்கே அவன் தனது நிலையிலுந்து தாழ்ந்து விடுகிறான். எதையும் குர்ஆன் சுன்னாவுடன் உரசிப் பார்த்து சிந்தித்து விளங்குவதே சிறந்த முஸ்லிமுக்கு அடையாளம்" என்ற பாடத்தை பிஜேயிடமிருந்து படித்தவர்களில் ஒரு சாரார் தங்கள் பகுத்தறிவிற்கு பிஜே மூலாம் பூசிக் கொண்டார்கள். குர்ஆன் சுன்னாவை நேரடியாக பார்ப்பதுமில்லை. பிறர் கூறுவது அவர்களுக்கு குர்ஆன் சுன்னாவாக தெரிவதுமில்லை. பிஜே சொன்னால் தான் குர்ஆன், பிஜே சொன்னால் தான் சுன்னா, பிஜே சொன்னால் தான் இஸ்லாம் என்று மத்ஹப் வெறியை விட தீர்க்கமான வெறித்தனத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்கள். அந்த மக்களை நினைக்கும் போது உண்மையிலேயே மனக் கஷ்டமாக இருக்கிறது.

ஓரிறைக் கொள்கை என்ற அந்த ஒரு இறைவனை சார்ந்து நிற்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான தவ்ஹீத் கொள்கையில் பிஜேயின் உறுதிபப்பாட்டைத் தவிர மார்க்கத்தை விளங்குவதில் சில குறைப்பாடுகளும், சமூகத்தை கையாளும் விதத்தில் பெருத்த குறைப்பாடும் அவரிடம் உண்டு. அவரது சமுதாயப்பார்வை மிக பலவீனமானது என்பதற்கு சமீபத்திய உதாரணம் அவர் ஆரம்பித்துள்ள புதிய இயக்கம்.

பிஜேயின் அரசியல் பார்வை ஜீரோவாகி விட்டது என்பதற்கு நிறைய உதாரணம் சொல்லலாம். புதிய உதாரணம். ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வந்ததாகும். ஜெயலலிதா உட்காரும் மேடையில் கூட அவர் இருக்கும் போது உட்கார மாட்டேன் என்று கொள்கை பேசியவர் இன்றைக்கு தேதி கேட்டு போய் சந்திக்கிறார் என்றால் 'ஒண்ணுமே புரியல அவர் போக்கில' "


இது தொடர்பாக.......

தனிநபர் துதியோ மிதியோ இல்லாத கருத்துக்களை மிகவும் வரவேற்கிறேன்.

3 comments:

சுட்டுவிரல் said...

அபூ ஆஃபியா என்றொரு சகோதரர் PDF பைஃல் கடிதத்தில் கோபப்பட்டிருக்கிறார்.
இக்கட்டுரை சொல்லும் உண்மைகளை ஆராய (மனம் இல்லா)மல், பதிலளித்த ஆசிரியரை பழ்லுல் இலாஹி என்பவருடன் தொடர்பு உள்ளவர் என்று குற்றம் சாட்டுகிறார்.

இந்த கேள்வியை கேட்கும் வாசகரின் மின்னஞ்சல் முகவரி உண்மையில்லை. எனவே, கேள்வி இட்டுக்கட்டப்பட்டது என்று குற்றம் சுமத்துகிறார். (நல்லவேளை, பதிலையாவது இட்டுக்கட்டப்பட்டது என்று சொல்லாமல் விட்டாரே, எப்படி சொல்ல முடியும்?).

உண்மையில் 'இது தான் இஸ்லாம்' தள நிர்வாகத்தினர் வாசகர்களின் மின்னஞ்சலை அப்படியே தருவதில்லை. வாசக மின்னஞ்சல் முகவரிகளில் சில எழுத்துக்களை மாற்றித்தான் பிரசுரிக்கின்றனர். இதுபற்றி முறையாக அறிவித்தும் இருந்தனர். எரிதம் அஞ்சல்களை தவிர்க்கும் நோக்கம் தான் இதற்கு காரணம். பல கேள்விகளை இத்தளத்தில் கேட்டு விடை பெற்றவன் என்கிற முறையில் இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

சகோதரர் அபூ ஆஃபியாவுக்கு நாம் சொல்வதெல்லாம் - சொல்லப்பட்டுள்ள பதில் பற்றி பேசுங்கள் என்பதைத் தான். அதைவிடுத்து, குற்றம் கண்டுபிடித்துவிட வேண்டும் என்கிற காரண்த்துக்காக ஏதேதோ சொல்லாதீர்கள்.

இன்னும் சில கேள்விகளை வைத்துள்ளார். எளிய அந்த கேள்விகளுக்கு அவர் விரல் நீட்டியுள்ளவர்களே பதிலளிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த கேள்வி பதில், PJ என்கிற மூத்த மார்க்க சகோதரர் மீதான அக்கறையை, சகோதர பாசத்துடனான அங்கலாய்ப்பைக் காட்டுவதாகவே நான் கருதுகிறேன்.

அருளடியான் said...

நபி மார்கள் தங்கள் தோழர்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எதிர்கொண்டனர். நபித்தோழர்களும் தங்கள் தலைவருக்கு (நபிக்கும், நபிக்குப் பிறகு கலீஃபாவுக்கும்) விசுவாசமாக நடந்து கொண்டனர். தற்போது ஆலிம்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்களில் மிகச் சிலரைத் தவிர அனைத்துப் பிரிவினரும் தங்களை விமர்சிப்பவர்களை ஒரு வழி செய்யாமல் விடமாட்டார்கள். இந்த ஆலிம்களைப் பின்பற்றுபவர்களுக்கும், நடிகர்களின் ரசிகர்களுக்கும் எனக்கு
ஆறு வித்தியாசங்கள் கூட தெரியவில்லை.

சுட்டுவிரல் said...

மீண்டும் சகோதரர் அபூ ஆஃபியா! முன்னிலும் ஆவேசத்தோடு. முகமனுக்குப்பின் கடிதத்தின் முதல் வார்த்தையையே 'பொய்யர்கள்' என்று தான் தொடங்குகிறார்.

கேள்வி கேட்டு வந்த அஞ்சலையே இன்னமும் தாண்ட முடியாமல். அதன் பிறகு தான் தரப்பட்ட பதிலை சிந்திப்பார் போலும்.

ஏன் இத்தனை ஆவேசம்? ஏன் அமைதியாக சிந்திக்க முடியவில்லை?

இந்த பதிலை இன்னின்ன காரணத்தால் ஏற்க முடியவில்லை/ஏற்றுக்கொள்கிறேன் என்று அறிவுப்பூர்வமாக நினைக்காமல்/இயலாமல் ஏன் உணர்ச்சிவசப்படவேண்டும்?

தூங்குபவர்களை எழுப்பி விடலாம். தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப இயலாது என்கிற பழமொழியை நினைவூட்டும் இவ்(வி)வாதம் அலுப்பையேத் தருகிறது. ஆர்வமாகத் தொடர்வதற்கு இது என்ன மார்க்க விளக்கமா? அல்லது 'மையப் பொருளாய் ' அமைந்தவர் தான் இறைத் தூதரா?

'மத்ஹபுகளின் எண்ணிக்கையை மேலும் ஒன்று கூட்டி விடாதே இறைவா! என்று அல்லாஹ்வைப் பிரார்த்தித்தவனாக,

முனாபிஃகுகளுக்கான இறைவசனத்தை சக முஸ்லிம்களாகிய நமக்கு பொருத்திப்பார்க்கும் இவரை நாம் சகோதரராகவே கருதினாலும் (எழுத்தளவில்) தூரமாகிக் கொள்கிறேன், நன்றி. வஸ்ஸலாம்.