Tuesday, February 01, 2005

குர்பானி!

கேள்வி:-
தமத்து நிய்யத்தில் ஹஜ்ஜுக்கு வந்த ஹாஜிகளில் சிலர் உம்ரா செய்து விட்டு ஹஜ்ஜுடைய 10 வது நாளில் கொடுக்க வேண்டிய குர்பானியை இப்பொழுதே கொடுத்து விட்டர்கள். 10ஆம் நாளில் கொடுக்க வேண்டியதில்லை என்கிறார்கள்.

இதற்கான விளக்கம் குரான், ஹதீஸ் ஒளியில் தரவும்.

விளக்கம்:-
உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியபின், மக்காவில் தங்கியிருந்து ஹஜ்ஜூடைய நாள் வந்ததும் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது இதுவே ''ஹஜ் தமத்துவ்'' எனப்படும்.

ஹஜ் பத்தாம் நாளில் மினாவையடைந்து முதல் வேலையாக ''ஜம்ரத்துல் அக்பா'' விற்கு கல்லெறிந்து விட்டு, பின் அறுத்து பலியிட்டு, பின் தலைமுடியைக் களைய வேண்டும். இதுவே நபிவழியாகும். நாமறிந்து உம்ராவை நிறைவேற்றியவுடன் குர்பானி கொடுக்க எவ்வித ஆதாரத்தையும் காணவில்லை.

ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'தல்பிய்யாவை உரத்த குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து பலியிடுவதும்," என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ பக்ர் (ரலி) ஆதாரம்: புகாரி (757)

அறுத்து பலியிடுவதே ஹஜ்ஜின் சிறந்த செயலாக நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

...யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழி - புகாரி)

ஹஜ் கடமையில் இல்லாதவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்பு அறுத்தால் அது குர்பானியின் நன்மையில் சேராது என்ற சட்டத்தை ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு பொருத்த முடியுமா? என்பது தனி விசயம். ஹஜ் என்பதே அரஃபா நாள்தான் என வலியுறுத்துகிறது இஸ்லாம். ஹஜ் கிரியைகளில் ஒன்றாகிய அறுத்து பலியிடுதலை ஹஜ்ஜூடைய நாட்களில் நிறைவேற்றாமல் அதற்கு முன்போ, பின்போ நிறைவேற்ற தெளிவான வழிகாட்டல் வேண்டும்!

அல்லாஹ் மிக அறிந்தவன்.




No comments: