Saturday, February 26, 2005

தொழுகையில் தன்னிலை மறக்க முடியுமா?

தன்னிலை மறந்து இறைவனைத் தொழ வேண்டும். தொழுது கொண்டிருக்கும்போது தொழுகையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது, தொழுகையில் நிற்கும்போது எதிரே தெரியும் எதையும் பார்க்க முடியாத அளவிற்கு மெய்மறந்த நிலையில் தொழுகை என்ற இறைவணக்கத்தில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தில் இஸ்லாம் ஒரு போதும் உடன்பட்டதில்லை.

இது பற்றி இஸ்லாத்தின் நிலை என்னவென்பதை தெரிந்து கொள்வதற்கு முன் செயல் ரீதியாக மெய்மறந்த நிலை தொழுகையில் மனிதருக்கு சாத்தியப்படுமா? என்பதை பார்ப்போம்.

தொழுகையில் முதல் நிலை.
ஒருவர் தொழுகைக்காக தம்மைத் தயார்படுத்திக் கொண்டு முதல் தக்பீர் (தஹ்ரிமாவைக்) கூறி தொழுகையில் நுழைந்து தன்னிலை மறந்து - அதாவது மெய்மறந்த நிலையை அடைந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம், அதன் பின் ருகூவு, ஸஜிதா இந்நிலைகளுக்குச் சென்று மீண்டும் திரும்பி தொழுகையிலிருந்து விடுபடுவதுவரையுள்ள அடுத்தடுத்த நிலைகளைச் செய்து முடிப்பது சத்தியப்படுமா?

தொழுகையில் நுழைந்தவுடன் மெய்மறந்து இவ்வுலக வாழ்க்கை பற்றிய துளி சிந்தனை கூட இல்லாத மனிதர் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க முடியுமா? தொழுகையில் தான் ஓதவேண்டியதை ஓத முடியுமா? இவையெல்லாம் நடந்தேற நாம் தொழுகையில் இருக்கிறோம், இந்நிலை முடிந்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்... பின் தொழுகையிலிருந்து விடுபடுவதுவரையுள்ள ஒவ்வொன்றையும் தொடர வேண்டும் என்றால் அவர் தன்னிலை மறக்காமல் இருந்தால்தான் சாத்தியப்படும்.

எனவே தொழுகையில் நிற்கும்போது இவ்வுலகத்தை மறக்க இஸ்லாம் சொல்லவில்லை. அது எவருக்கும் இயலாது.

இஸ்லாத்தைப் பற்றி.
இஸ்லாத்தின் வட்டத்திற்குள்ளிருந்தே இஸ்லாத்தைப் பற்றி எழுத வேண்டும். ''மஜ்னூன்'' கதை இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு புனைக்கதை. இறைவணக்கமாகிய தொழுகைக்கு ''மஜ்னூன்'' கதையிலிருந்து முன்னுதாரணம் சொல்லியிருப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.

தன்னிலை மறக்க முடியுமா?
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் வீட்டிற்குள் சென்று வீட்டிலிருந்தத் தங்கக்காசை எடுத்து தர்மம் செய்தார்கள். அந்தக்காசு வீட்டில் இருந்தது தொழுகையில் நினைவு வந்து அவர்களின் சிந்தனையை சிதறச் செய்ததாகக் கூறினார்கள் (நபிமொழியின் கருத்து)

தொழுகையில் நிற்கும்போது சில விஷ ஜந்துக்களைக் கண்டால் தொழுகையை விட்டு அவற்றை அடித்துக் கொல்லலாம் அதனால் தொழுகை முறியாது என்றும் நபிமொழி கூறுகிறது.

தொழுகையில் நிற்கும்போது இவ்வுலக சிந்தனைகள் ஏற்படலாம், ஏற்படும், தொழுகையில் நிற்கும்போது கண்னை மூடிக்கொண்டு உலகை மறந்து விடாமல், கண் திறந்து தமக்கு முன்னால் உள்ளவற்றைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம். இவைகள் தவறு என்று இஸ்லாம் சொல்லவில்லை.
(தவறு என்றால் திருத்துங்கள்)

No comments: