Wednesday, February 02, 2005

இஸ்லாம் - தவறான புரிதல்களும் விரோத பிரச்சாரங்களும்!

முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடையே இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் பற்றியும் காணப்படும் தவறான கருத்துக்களுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவதாக, இஸ்லாத்தைக் குறித்தும் அதன் தாத்பர்யம், கொள்கை கோட்பாடுகளைக் குறித்தும் அவர்களுக்கு எவரும் எடுத்துச் சொல்லவில்லை; முஸ்லிம்களே சொல்ல மறந்து விட்டனர்.

இரண்டாவதாக, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்ட ஆங்கிலேயர்கள் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தை மேற்கொண்டு தவறான கருத்துக்களை ஆழமாக விதைத்து விட்டனர். அதன் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது.

மூன்றாவதாக, வகுப்புவாதிகளும் பாஸிஸவாதிகளும் தொடர்ந்து இடைவிடாமல், சளைக்காமல் மேற்கொண்டு வரும் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரம்! இவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து தவறான கருத்தை வலிந்து திணித்து வருகின்றனர்.

நான்காவதாக, முஸ்லிம்களின் தவறான செயல்களே இஸ்லாத்துக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் இடையே தடுப்புச்சுவராக எழுந்து நிற்கின்றன. முஸ்லிம்கள் சரியான, உண்மையான இஸ்லாத்தை கடைப்பிடிக்கத் தவறியதும் ஒரு முக்கியமான காரணமாகும்.

இவற்றோடு ஊடகத்தின் பங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். எதிர்மறையான நிகழ்வுகளோடும், குணங்களோடும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இணைத்துச் சொல்வது ஊடகத்தினருக்கு வாடிக்கையாகிவிட்டது. போர், பயங்கரவாதம், கலவரங்கள், ஆள்கடத்தல், விமானக்கடத்தல், ஆடம்பரம், சர்வாதிகாரம், மூட நம்பிக்கை, பின் தங்கிய நிலை போன்ற எதிர்மறையான குணங்களோடுதான் முஸ்லிம்களை ஊடகம் அடையாளங்காட்டுகிறது.

அது மட்டுமின்றி, வரலாற்றுப் பாடநூல்களிலேயே முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துகளும் அரைகுறையான உண்மைகளும் இடம் பெற்றிருப்பதும் சின்ன வயதிலேயே தவறான கருத்துகள் வேரூன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. (1)

இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாம் குறித்து நிலவும் தவறான புரிதல்களை அகற்றி சரியான முறையில் உண்மை இஸ்லாத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

(1) “சத்தியப்பேரொளி” எனும் நூலிற்கு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தலைவர் ஹெச். அப்துர் ரகீப் அவர்கள் எழுதிய பதிப்புரையிலிருந்து..

1 comment:

Abu Umar said...

நல்ல கருத்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.