Monday, April 03, 2006

தவறுக்கு மேல் தவறு செய்யும் த.மு.மு.க















1. சில நாட்களுக்கு முன் த.மு.மு.க தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தி.மு.கவின் தேர்தல் பிரச்சார மேடையில் நின்று கொண்டு, அ.இ.அ.தி.மு.கவை ஆதரிக்கும் முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் லெட்டர் பேடு அமைப்புகள் என்று பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத் தக்கது. முஸ்லிம் லீக்கை விமர்சித்த தாவூது மியாகானின் பேட்டியை மக்கள் உரிமையில் வெளியிடும் போதும், த.மு.மு.க கணக்கு காட்டும் நிகழ்ச்சியில் அவர் முன்னிலை வகித்த போதும், அது லெட்டர் பேடு அமைப்பு என்று பேராசிரியருக்குத் தெரியாதா?

2. சர்ச்சைக்குரிய மவ்லவி பி.ஜெ கூட, பிற அமைப்புகளுடன் இணைந்து சென்று முதல் அமைச்சரைச் சந்திக்க சம்மதிக்கிறார். ஆனால் அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் தாங்கள் தான் பிரதிநிதி என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பிற முஸ்லிம் அமைப்புகளுடன் எந்த ஒரு பொதுக்காரியத்திலும் இணைந்து செயல்பட மறுப்பது ஏன்?

3. தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளுக்கு முன்பே உள்ள கோரிக்கை. அக்கோரிக்கை ஏற்கப்பட்டது சமீபத்தில் தான். அது போலவே, முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கை த.மு.மு.க தோன்றுவதற்கு முன்பே உள்ள கோரிக்கை. முஸ்லிம் லீக் மாநாடுகளில் இது தொடர்பாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, த.மு.மு.க மட்டும் தனிப்பெருமை தேடுவதில் என்ன நியாயம்?

4. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மவ்லவி பி.ஜெ, முதல்வரிடம் பேசும் போது, இந்திய தேசிய லீக்கிற்கு அதிக இடங்களைக் கொடுங்கள் என்று கேட்டார். ஆனால், தி.மு.க கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு அளிக்கப் பட்ட பாளையங்கோட்டை தொகுதியை த.மு.மு.க, மவ்லவி ஃபழ்லுல் இலாஹிக்காக கேட்டதாகவும், அதனால் அத்தொகுதியை முஸ்லிம் லீக், த.மு.மு.க ஆகிய இருவருக்குமே இல்லாமல் தி.மு.கவே எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுவது உண்மையா? இச்செய்தி உண்மையென்றால், த.மு.மு.க செய்தது ஒரு சமுதாயத் துரோகமே.

5. மவ்லவி பி.ஜெ அவர்களிடம் எனக்கு மார்க்கம் தொடர்பாகவும், அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் பல கருத்துகளில் வேறுபாடு உண்டு. எனினும் அதே போன்று சர்ச்சைக்குரிய மவ்லவி ஃபழ்லுல் இலாஹியை த.மு.மு.க முன்னிறுத்துவது ஏன்? த.மு.மு.க எது செய்தாலும் சமுதாயம் எந்தக் கேள்வியும் கேட்காது என நினைக்கிறார்களா?

6. தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுப்பதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைக்காக சிறுபாண்மையினர் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட பேராயர் எஸ்ரா. சற்குணமும், த.மு.மு.கவும் தானே காரணம்? சிறுபாண்மையினர் கூட்டமைப்புக்கு தேர்தல் நிலைப்பாடு எடுப்பது தவிர வேறு எந்த வேலையும் கிடையாதா?

7. சுனாமி கணக்கை தனி கூட்டம் நடத்தி பொது மக்கள் முன் சமர்ப்பித்த த.மு.மு.கவைப் பாராட்டுகிறோம். எனினும், விமர்சனம் என வந்த பிறகு முஸ்லிம் சமாதானக் குழுவிடம் கணக்கு காட்டச் செல்லாததும், அக்குழுவில் இடம் பெற்ற அமைப்புகளையெல்லாம் விமர்சித்து அதன் தலைவருக்கு களங்கம் கற்பித்ததும் இஸ்லாமிய வழிமுறை அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது உள்ள அளவு கடந்த வெறுப்பு த.மு.மு.கவின் கண்ணை மறைத்து விட்டது.

2 comments:

அருளடியான் said...

'முத்துப்பேட்டை' என்ற வலைப்பதிவில் 'இறையடியான்' என்பவர் என் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி! அந்தப் பதிவின் இணைப்பு:


http://muthupettai.blogspot.com/2006/04/blog-post_03.html

அருளடியான் said...

என் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அளித்த சகோதரர் இறையடியானுக்கு நன்றி! ஆனாலும் சிறுபாண்மையினர் கூட்டமைப்பு பற்றிய என் ஆறாவது கேள்விக்கு பதில் இல்லையே? பள்ளி, கல்லூரி தேர்வுகளில் சாய்ஸில் விடுவது போல விட்டு விட்டீர்களா?