இவ்வருட விடுமுறையில் தமிழ் நாட்டில் இறங்குமிடம் திருச்சியா? சென்னையா? என்ற வழக்கமான சிந்தனையில் இம்முறை திருச்சிக்கு செல்வது என்று வழக்கத்திற்கு மாறாக முடிவெடுத்தேன்.
தோஹா - கொழும்பு - சென்னையை விட, தோஹா - கொழும்பு - திருச்சிக்கு கட்டணம் கூடுதல் என்றாலும் குடும்பத்துடன் பயணிப்பதால், எனது உள்ளூர் வாகன பயண நேரத்தினை கருத்தில் கொண்டு திருச்சிக்கு பயணித்தேன்.
விடிகாலையில் விமானம் தரையை தொட்டதிலிருந்தே தடபுடலான வரவேற்புதான் போங்கள். சுங்க அதிகாரிகள் நாட்டிற்கு மிகவும் தேவையான கேள்விகள் கேட்டார்கள்.
போன முறை எப்போ வந்தீங்க? (பாஸ்போர்ட் கையில் தன் வைத்திருந்தும் நான் தேதி கூறிய பின்பு தான் திருப்தி அடைந்தார்)
தோஹா-வில் எங்கே வேலை செய்றீங்க? கம்பெனி எப்படி?
தோராயமா என்ன சம்பளம் வாங்கறீங்க?
அத்தோடு ஓவர் என நினைக்கையில்,
பெண்கள் அணிந்திருந்த ஒவ்வொரு நகைக்கும் ரசீது எங்கே என்று குடைய ஆரம்பித்தனர்.
இந்தாம்மா...இவ்வளவு நகையும் "உன்துதானா"? என என் மனைவியையும்,
புதிய ஸ்கேனர் மெஷின் வந்திருக்கு. அதனால பொட்டிக்குள்ள என்னன்ன ஐட்டங்க மறைச்சி வச்சிருக்கீங்கன்னு நீங்களே சொல்லிட்டா "மரியாதையா" இருக்கும் என என்னையும்.
அவர் குறிப்பிட்ட அந்த ஸ்கேனர், கார்டூனில் பேக் செய்திருந்த எனது சிறிய டேபிள் டைப் ரைட்டரை டி.வி.டி ப்ளேயராக காட்டியது போலும். கார்டூனின் மேல்புறத்தில் சாக்பீஸால் டி.வி.டி என கொட்டை எழுத்தில் உற்சாகமாக எழுதப்பட்டிருந்தது.
அது டி.வி.டி அல்ல என்று எவ்வளவு கூறியும் மறுத்துவிட்டதால் ("மேற்படி"யை வெட்ட எனக்கும் மனமில்லாததால்) இறுகக் கட்டிய முழு பெட்டியையும் திறந்து காட்டி நிரூபிக்க வேண்டி இருந்தது. வேதனை என்னவென்றால் அது டி.வி.டி அல்ல என்று தெரிந்தும் சிறிய ஒரு சலனமும் இன்றி அம்போவென விட்டு விட்டு அடுத்த பயணியை மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
ஏன்யா...ஒரு ஃபார்ம் கூட சரியா ஃபில்லப் பண்ணத் தெரியல... நீ எல்லாம் எப்படி வெளிநாடு போன?? (என் பின்னால் யாரையோ காய்ச்சிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே, சிதறி கிடந்த எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக்கொண்டு மனம் வெறுத்து வெளியே வந்தேன்)
ஏமாளியாக தெரியும் பல பேரை சில்லறைக்காக, அல்லல் பட வைப்பதை அங்கே கண்கூடாக பார்க்க நேர்ந்தது.
என் மனதில் எழுந்த சில கேள்விகள்:
சுங்க பரிசோதனை சட்டத்தில் அணிந்திருக்கும் நகைகளுக்கு குறுக்கு விசாரணைகள் உண்டா? எனில் வரைமுறை என்ன?
எலக்ட்ரானிக்ஸ் கொண்டு வருவதில் தடை உண்டா? அதன் வரைமுறை என்ன?
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுக்க வேண்டும் என்று எண்ணி அதை செயல் படுத்த முனைவதற்குள் குறுகிய விடுப்பு கழிந்து விட தோஹா திரும்பி விட்டேன்.
சுங்க அதிகாரிகள், தங்கள் கடமைகளை மீறி மனம் புண்படும் விதத்தில் பயணிகளை நடத்துவது, அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? பயணிகளை அநாகரிகமாக இவ்வாறு நடத்துவதை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஊரைப் பிரிந்து, உறவைப் பிரிந்து வாடி வெளிநாடு நாடு சென்று ரத்தத்தை வியர்வை வடிவில் சிந்தி உழைக்கும் பணத்தை, ஏதோ தங்கம் காய்த்த மரத்தை லேசாக உலுக்கி அள்ளி எடுத்து வருவது போல் நினைக்கிறார்கள்.
திருச்சி கஸ்டத்தின் கஷ்டம் தாங்க முடியாமல், திருச்சியிலிருந்து அருகில் உள்ள தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், சென்னையிலிருந்து மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்கிறார்கள்.
பின்னர் விசாரித்ததில் பல பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிய முடிந்தது. உங்களுக்கு இது போல் அனுபவம் ஏதும் இருந்தால் எழுதவும்.
-------------------
இது பரவாயில்லீங்க! இந்த "கஸ்டம்"ல எல்லாம் மாட்டி விழி பிதுங்கி வெளியே வந்து மூச்சு விட்டாக்கா ரோட்டோரம் வண்டியை (டாப் கேரியர்ல பொட்டி கட்டின வெளிநாட்டு பார்ட்டி வருதுடோய்...) ஓரங்கட்டும் காக்கிசட்டை போட்ட திருடர்களுக்கு வேற தனியா வெட்டனும்ல... என்றபோது எம் இழிநிலை புரிந்தது.
Sunday, February 20, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமையான பதிவு.
தமிழ்முஸ்லிம் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை நெருங்கிவருகிறது. இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்துக்கொள்வது வரவேற்கத்தக்கது.
நல்ல கட்டுரைகள் "தமிழ்தஃவா யாஹு மடலாற்குழுவின்" மூலம் மற்ற மக்களுக்கும் தெரிவிக்கப்படுவதால் நூற்றுக்கணக்கானோர் படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்துருவின் அளவு சிறியதாக்கி இருந்தீர்கள். படிப்பதற்கு சிரமமாக இருப்பதால் சாதாரண அளவுக்கே மாற்றிவிட்டேன்.
அன்புடன்
நிர்வாகி
.
அன்பின் சர்தார்,
ECNR தகுதி உடைய பொறியாளருக்கே இந்த கதி என்றால், பாமரர் நிலை மோசம்தான்.
திருச்சியை பொறுத்தவரை 15 வருடத்திற்கு முன்பு சென்னை விமான நிலையம் கடைபிடித்த போக்கை கையாள்கிறார்கள். சில நேரத்தில் திருச்சியிலும் தாராள போக்கை கையாள்வதால், அதனைக் கேள்விப்பட்ட பயணிகள் திருச்சி வழியே செல்லலாம் என்று முடிவெடுப்பது உண்டு. காரணம் அருகாமை ஊர் என்பதால்.
நான் உயர்நிலை கல்வி கற்கும் நேரத்தில், ஹாங்காங்கிலிருந்து கொழும்பு வழியே திருச்சி வந்த எனது ஒன்று விட்ட சகோதரனை அழைக்க போயிருந்தேன். நாங்கள் போய் சேர சற்று தாமதமாகிவிட்டது. அந்த நேரத்தில் அவர் ஒருவரைத்தவிர வேறு யாரும் வெளிநாட்டு பயணி கிடையாது என்பதால் கொண்டுவந்த பெட்டியை சல்லடை போட்டு தடவி விட்டார்கள்.
யோவ் என்னாயா வச்சிருக்கே?
என்று முதலில் கம்பீரமாகவும்
(ஏதும் கைக்கு அகப்படவில்லை என்றால்)
ஏதாவது கொடுத்துட்டுப்போயா!
என்று சற்று கனிவாகவும்
(அப்படியும் மசியவில்லையெனில்)
கொஞ்சம் கவனிச்சுட்டுப் போங்க சார்!
என்று கவுரவ பிச்சை கேட்கும் மத்திய அரசு பணியாளர்களை பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. பல நாட்டு மக்களையும் கலாச்சாரத்தையும் பார்க்கும் சுங்க அதிகாரிகள் திருந்த வேண்டாமா?
வரும் வழியில் போலீஸ் கொள்ளை என்பது முன்பு சென்னையிலும் உண்டு. மீனம்பாக்கத்தை தாண்டி இக்கொள்ளை நடக்கும். இதில் 2 தடவை பாதிக்கப்பட்டிருக்கிறேன். இதையெல்லாம் ஒழிக்க டெகல்கா.காம் வழியை பின்பற்றுவதுதான் உத்தமம்.
முன்பு ஒரு தடவை விமான நிலையத்தில் சந்தித்த ஒரு நண்பர், தான் வைத்திருக்கும் Traveler Bag-ஐ காட்டி, "உடுத்திக்கொள்ளும் துணியைத்தவிர எதையும் நான் எடுத்துவருவதில்லை. என்னை அழைக்கவோ, பயணம் அனுப்பவோ யாரையும் துணைக்கு கூப்பிடுவதில்லை. பையில் கனமிருந்தால்தானே வழியில் பயம்" என்று சொன்னதை நினைத்து பார்க்கிறேன்.
.
இதுபோல் ஒரு அனுபவம் சில வருடங்களுக்கு முன் சென்னையில் எனக்கும் ஏற்பட்டது. கோல்ட் இருக்கிறதா என்று கேட்ட மfப்டி அதிகாரி ஒருவருக்கு 'இரண்டு காயின்கள் உண்டு' என்று உண்மையை சொல்லியும் வேறு எதையோ எதிர்பார்த்தவராக நீன்ட நேரம் அலைக்கழித்தார்.
கடைசியில் நான் வேறு வழி புலப்படாமல் ஒரு தொகை லஞ்சம் அளித்துவிட்டு 'மே ஐ நோ யுவர் நேம்' என்று கேட்டேன். என் கேள்வியால் மிரண்டவர் 'உங்களுக்கு எந்த ஊர்?' என்று கேட்டார்? பதிலை சொன்னாலும் 'உங்கள் முழு உடமைகளையும் சோதிப்பேன்' என்று மிரட்டினார்.(என் பணத்தை திருப்பி தந்து விட்டார்)
நல்ல வேலையாக அந்தப்பக்கமாக வந்த ஒரு உயர் அதிகாரியிடம் (பிராமணர் என்று நினைக்கிறேன்) நானே ஓடி ச்சென்று முழு விபரங்களையும் ஆங்கிலத்திலேயே எடுத்து ச்சொன்னேன். மிரட்டிய அதிகாரியின் சமாளிபிfகேஷன்கள் எடுபடாமல் போய் " நீங்க போங்க சார்" என்று என்னை ப்பார்த்து சொன்ன மேலதிகாரி அந்த மிரட்டிய அதிகாரியை வறுத்து எடுத்து விட்டர் -"திருந்தவே மாட்டீங்களா?"
இது எனக்கு ஒரு நல்ல அனுபவம். தவறிழைக்காதவர்களும் அல்லாஹ்வுக்கு பயப்படுபவர்களும் வெறூ யாருக்கும் பயப்படத்தேவையில்லை தான்.
அன்பு சகோதரர்களுக்கு
திருச்சி விமானநிலையத்தில் நடந்த ஒரு விஷயத்தின் ஊடே சமூகத்தில் நடக்கும் அவலத்தை எடுத்து வைத்ததோடு அதை நீக்குவதற்கான வழிவகைகளையும் பற்றி பேசப்பட்டது. தவிர திருச்சி அல்லது சென்னை விமான நிலையம் செல்பவர்களுக்கு பயம்காட்டுவதற்காக அல்ல.
சென்னை விமான நிலையத்தில் முன்பு இருந்த லஞ்ச லாவன்யங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. மேலும் முன்னேறும் என்று நம்புவோம்.
வெளிநாட்டில் சம்பாதித்துவிட்டு ஆவலோடு பிறந்த மண்ணையும் உறவினர்களையும் பார்க்க வரும்போது விமானநிலையத்திலேயே இங்கு உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டோம் என்று சொல்லாமல் சொல்லும் அரசாங்க ஊழியர்களை (அதாவது மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெறும் அரசாங்க ஊழியர்களை) சற்று கண்டிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்திடம் எங்களின் வேண்டுகோளாக இருக்கும்.
.
Post a Comment