Friday, May 19, 2006

முஹம்மது நபியின் திருமணங்கள் (பாகம் 1)

டென்மார்க் கார்ட்டூன் விவகாரத்தை தொடர்ந்து சகோ. அதிரை ஏ.எம்.ஃபாரூக் அவர்களால் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட நபியவர்களின் திருமணம் பற்றிய கட்டுரைத் தொடரை யுனிகோடில் மாற்றி இங்கு பதிகிறேன்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான். நிராகரிப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை (முஸ்லீம்களை) ஏளனம் செய்கின்றனர். ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்;. அல்குர்ஆன்: 2:212

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இதற்கு முன்பு டென்மார்க் தயாரிப்புகளை தவிர்க்கும்படி கட்டுரை வடிவமைத்திருந்தோம், மீண்டும் பிராஸ்ஸ், ஜெர்மனி, நெதர்லேண்ட், நியூஸிலான்ட், நார்வே போன்ற நாடுகளும் இறைத்தூதர் விஷயத்தில் டென்மார்க் அத்துமீறிய செயலுக்கு தாங்களும் தோள்கொடுப்பதாக களமிறங்கியுள்ளனர், அதனால் அவர்களை முழுமனதுடன் மனதால் வெறுத்தொதுக்குவதற்காக மேலும் ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதுகிறோம்.

அமைதியே உருவான அண்ணல் நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாக சித்திரிப்பது கண்டு மனம் வெதும்புகிறது, இப்பொழுது இருக்கும் இஸ்லாமிய எதிரிகளை விட அவர்களுடைய சமகாலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய எதிரிகள் கடுமையான தாக்குதல்களை அன்று இஸ்லாத்தில் ஈமான் (நம்பிக்கை) கொண்ட முஸ்லிம்கள் மீது தொடுத்தனர்.

அண்ணலார் மீது பொருளாதாரத் தடை

இஸ்லாத்தின் ஆரம்ப நிலையில் எத்தனை பேர் முஸ்லீமானார்களோ, அவர்கள் அனைவரும் அபூதாலிப் அவர்களின் அரவனைப்பின் கீழ் இருந்தனர், அதனால் நிராகரிப்போர் ஒன்று கூடி ரகசிய சதித்திட்டம் தீட்டி ஓர் அறிவிப்பை அபூதாலிப் அவர்களுக்கு அறிவித்தனர், அத்துடன் அந்த அறிவிப்பை புனித ( கஃபா) ஆலயத்தின் கதவில் எழுதி தொங்க விட்டனர்.

முஹம்மதை எங்களிடம் ஒப்படைத்து விடவேண்டும், அல்லது எங்களுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.; அண்ணல் நபி (ஸல்); அவர்களோடு இஸ்லாத்தின் மீது ஈமான் கொண்ட அனைவரையும் ஊர் நீக்கம் செய்து அவர்களின் மீது பொருளாதாரத் தடையை ஏவினார்கள், நெஞ்சுரமிக்க அபூதாலிப் அவர்கள் தங்களது அரவனைப்பில் வாழும் முஸ்லீம்களை நடாற்றில் விட்டு விடாமல் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நகருக்கு வெளியே உள்ள கணவாய் (பள்ளத் தாக்கிற்கு ) அவர்களை அழைத்துக் கொண்டு இடம் பெயர்ந்தனர். அவ்விடப்பெயர்ச்சி என்பது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல மாறாக மூன்று வருடங்கள் குறைவில்லாமல் நீடித்தன. காய்ந்த இலைகளையும், சருகுகளையும் உண்டு உயிர் குரல்வளையை விட்டு வெளியேறாமல் பிடித்து வைத்திருந்தனர், வயிறுகளில் கல்லை கட்டிக் கொண்டிருந்தனர். பச்சிளங்குழந்தைகள் பாலுக்காக அழுத அழுகுரல் விண்ணை முட்டியது, அண்ணல் நபி (ஸல்); அவர்களின் அன்பு மணைவி கதீஜா (ரலி) அவர்கள் மக்காவின் பணக்காரர்களின் முதல் வரிசையில் இடம் பிடித்து செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள், அவர்களும் அன்று அந்த பள்ளத்தாக்கில் காய்ந்த சருகுகளை உண்டு உயிர் வாழ்ந்தார்கள், இன்று நாம் செவியுறக்கூடிய பொருளாதாரத் தடை என்பதெல்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு அண்ணல் நபி (ஸல்); அவர்கள் மீது குறைஷிகள் ஏவிய பொருளாதாரத் தடைக்கு கால் தூசுக்கு சமமானதாகும்.

தாயிப் நகர வீதிகளில்:

ஒருவழியாக கணவாயிலிருந்து வெளியே வந்ததும், அதே வருடம் அபுதாலிப் அவர்களும், அவர்களது அருமை மணைவி ஹதீஜா(ரலி) அவர்களும் இறந்து விடுகின்றனர், முஸ்லிம்களுக்கென்று உலகில் இருந்த ஒரே ஆதரவும்; வீழ்ந்து விடுகின்றது, முஸ்லிம்கள் நிர்க்கதியாக விடுகின்றனர், எனினும் அல்லாஹ்வுடைய உதவியைத தவிற முஸ்லிம்களின் மீது குறைஷிகளின் தாக்குதல் எல்லை மீறுகிறது, இந்நிலையில் மக்காவை விட்டு வெளியில் இஸ்லாத்திற்கு ஆதரவாளர்கள் வருகிறார்களா ? எனும் நோக்கில் தாயிஃப் நகருக்கு தன்னந்தனியே செல்கிறார்கள். நகரத்தின் முக்கியஸ்தர்கள் குண்டர்களையும் தீயவர்களையும் அண்ணலாருக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் மக்கள் நடமாட்டம் நிறைந்த கடைவீதியில் வைத்து அண்ணலாரைக் கேலியும் கிண்டலும் செய்தார்கள், கல்லால் அடித்தார்கள். இந்த நேரத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு காயமுற்றார்கள் என்றால், அவர்களின் திருமேனியிலிருந்து வடிந்த இரத்தம் அவர்களின் காலணிகளை நனைத்து விட்டது. ஆனால் அந்தக் கொடியவர்களே தொடர்ந்து கல்லால் அடித்தக் கொண்டும் வசைமொழிகள் கூறிக்கொண்டும் இருந்தனர். இறுதியில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டதினுள் சென்று தஞ்சம் புகுந்தார்கள்.

இவ்வேளை ஓர் வானவர் ஜிப்ரயீல் தோன்றி தாயிப் நகரத்தை இருமலைகளுக்கிடையில் வைத்து நசுக்கி விடவா என்று கேட்கிறார்கள். காருண்ய நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் எனக் கூறி விடுகிறார்கள். அங்கிருந்து ஒருவழியாக தடுமாறி, தடுமாறி மக்கா வந்து சேர்ந்து விடுகிறார்கள், மேலும் மக்காவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது,

ஈமான் கொண்டோர் மீது கொலைவெறித் தாக்குதல்

கப்பாப் (ரலி) அவர்கள் என்கிற நபித் தோழர், உம்மு அம்மார் என்பவரின் அடிமையாவார். ஒரு முறை தரையில் கரியைப் பரப்பி அதில் நெருப்பு மூட்டி, அதன் மீது அவர்களைப் படுக்க வைத்தனர். ஒருவன் அவர்களுக்கு மேலிருந்து நெஞ்சின் மீது கால்களை வைத்து அவர்கள் புரண்டு படுக்காத வண்ணம் அழுத்திக் கொண்டான். நெடுநாட்கள் கழித்து கப்பாப் (ரலி) அவர்கள் ஒருமுறை தமது எரிந்துபோன முதுகின் மீது உள்சதை வெள்ளையாகத் தெரிகின்ற வடுவைக் காட்டினார்கள்.

பிலால் (ரலி) அவர்கள் என்கிற நபித்தோழர், உமய்யா பின் கலஃப் என்பவனின் அடிமையாக இருந்தார்கள். ஓவ்வொரு நாள் நண்பகல் நேரத்தில் உமய்யா, பிலால் அவர்களைக் கொதிக்கும் மணலின் மீது படுக்கவைத்து கனமான பாறாங்கல்லை அவர்களுடைய நெஞ்சின்மீது வைத்து ''இஸ்லாத்தைத் துறந்துவிடு, இல்லையெனில் இப்படியே இறந்துவிடு!'' என்று கூறுவான். ஆனால் அந்த வேதனைமிக்க நிலையிலும்கூட பிலால் (ரலி) அவர்களின் நாவிலிருந்து 'அஹத் அஹத் ' (இறைவள் ஒருவனே, இறைவள் ஒருவனே ) எனும் சொற்களே வெளிப்படும். அவர்களுடைய எஜமான் அவர்களின் கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் ஒப்படைத்து விடுவான். அச்சிறுவர்கள் பிலால் அவர்களை நகரின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிவரை இழுத்துக் கொண்டு திரிவார்கள்.

அம்மார் (ரலி) அவர்கள் குறைஷிகள் இவரைத் தரையில் கிடத்தி மூர்ச்சையாகும் அளவிற்கு பலமுறை அடித்துளார்கள், இறந்து விட்டார் என்று விட்டு விட்டு செல்வார்கள், அதன் பின் தடுமாறி தடுமாறி அண்ணல் நபியவர்களிடம் வந்து சொல்லி அழுவார்கள்.

சுபைரா (ரலி) அவர்கள் அபூ ஜஹ்ல் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தார்கள். அபூஜஹ்ல் கடைசி வரை இஸ்லாத்திற்கு மாபெரும் எதிரியாக திகழ்ந்தவனும்;, முதலாமவனுமாவான் அவனுடைய அடிமை முஸ்லிமானால் விடுவானா? கண்ணில் கானும் போதெல்லாம் அடித்தான் ஒருமுறை அவர்களின் கண்கள் குருடாகிவிடும் அளவிற்கு முகத்தில் அடித்து விட்டான், கண் கலங்கி விடும் அளவிற்கு அடித்தான் என்றால் அடி முகத்தில் எவ்வாறு விழுந்திருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.

சுமைய்யா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஓர் அடிமைப்பெண் கொடிய குறைஷிக் கூட்டம் இந்த தியாகச் செம்மலின் மர்ம ஸ்தானத்தில் அம்பெறிந்து கொலை செய்தனர்.

மேற்கத்தியவாதிகளால் தீவிரவாதியாக சித்தரித்து சித்திரம் வரைந்த அண்ணல் அவர்களுடைய செவிக்கு இவைகள் எல்லாம் வரும்போது அழுவார்கள், மனதை திடப்படுத்திக் கொள்வார்கள், முஸ்லிம்களின் மீதான கொலைவெறி தாக்குதல் எல்லை மீறிக் கொண்டே சென்றதால் ஒருசிலரை அபிசீனியாவை நோக்கி அனுப்பி விடுகிறார்கள். இஸ்லாம் மக்காவைக் கடந்து வெளிப்பிரதேசங்களுக்கும் செல்வதை அறிந்த குறைஷிகள் இறுதியில் அண்ணல் நபி (ஸல்); அவர்களையே கொலை செய்து விடுவது என்று முடிவு செய்து விடுகின்றனர், உள்ளங்களை பார்க்கக் கூடிய ரப்புல் ஆலமீன் குறைஷிகளுடைய ரகசிய திட்டத்தை அறிந்து அண்ணலாருக்கு நாடு துறக்கும் படி தனது உத்தரவை அனுப்புகிறான்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களை கொல்வதற்காக முடிவு செய்திருந்த இரவில், அண்ணல் நபி (ஸல்); அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து எனக்கு ஹிஜ்ரத் செய்யும்படி கட்டளை கிடைத்துள்ளது. நான் இன்றிரவு மதீனா நகர் நோக்கிப் புறப்பட்டு விடுவேன். என்னிடம் பலருடைய அமானிதப் பொருட்கள் உள்ளன. அவற்றை நீர் மக்களுக்கு நாளை காலை திருப்பி ஒப்படைத்து விடுவீராக! எதிரிகள் நான் வீட்டில்தான் இருக்கிறேன் என்று எண்ணிக் கொள்வதற்காக நீர் இன்றிரவு என் படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அந்தக் குறிப்பிட்ட இரவில் கொலைக் கும்பல் அண்ணலாரின் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். நன்கு இருட்டியவுடன் அண்ணலார் அல்லாஹ்வின் அனுமதியுடன் தமது இல்லத்தைவிட்டு வெளியேறினார்கள். அப்போது அண்ணலார் திருக்குர்ஆனில் 36 ஆவது அத்தியாயமான யாஸீனின் வசனங்கள் ஓதிய வண்ணமிருந்தார்கள். கைநிறைய மண்ணை எடுத்து 'ஷாஹத்துல் உஜூஹ்' (முகங்கள் சேதமடையட்டும்) என்று கூறிய வண்ணம் இறைமறுப்பாளர்களை நோக்கி வீசினார்கள்.

காலை விடிந்தவுடன் அண்ணல் நபி (ஸல்); அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து விட்டிருந்ததைக் கண்ட இறைமறுப்பாளர்கள் மிகுந்த கவலைக்கும் திகைப்புக்கும் ஆளானார்கள்! அண்ணலாரைத் தேடிய வண்ணம் அங்கும் இங்கும் ஓடினார்கள். அண்ணல் நபி (ஸல்); அவர்களுடன் அபூபக்கர (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த தவ்ர் குகையின் வாயிலுக்கே வந்துவிட்டனர்! தேடிவந்த இறைமறுப்பாளர்களின் காலடி ஓசைகளைக் கேட்டு அபூபக்கர் (ரலி) அவர்கள் கவலைக்குள்ளானர்கள். தம் உயிருக்கு ஆபத்து ஏற்படுமே எனறெண்ணி அவர்கள் கவலைப்பட வில்லை, மாறாக, அல்லாஹ்வின் தூதருக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகத்தான் கவலையடைந்தார்கள். அண்ணல் நபி (ஸல்); அவர்கள் தம் அன்புத் தோழரின் கலக்கத்தைக் கண்டு மிகவும் அமைதியுடன் பின்வருமாறு ஆறுதலளித்தார்கள்.

'கவலைப்படாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கினறான்' (9:40) அல்லாஹ்வின் கட்டளையால் குகைவாயிலில் ஒருசில அடையாளங்கள் உருவாகி விட்டிருந்தன. அவற்றைக் கண்டு இந்தக் குகையில் எவரும் நுழையவில்லை என்று இறைமறுப்பாளர்கள் எண்ணிக் கொண்டனர். இத்துடன் அண்ணலாரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்க்கு நூறு ஒட்டகங்கள் வெகுமதியளிக்கப்படும் என்று குறைஷிக் குல இறைமறுப்பாளர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் பலரும் அண்ணலாரைத் தேடி பல்வேறு திசைகளிலும் புறப்படலாயினர்.

ஆனாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களை மதீனா கொண்டு போய்ச்சேர்த்தான், மதீனாவில் தஞ்சம் புகுந்தவர்களை கொன்றொழித்து விடுவதாற்காக அங்கே புறப்படுகிறார்கள் இப்பொழுது தான் முதன் முதலாக எதிர்க்க முடிவு செய்கிறார்கள் அதுவும் இறை உத்தரவுடன், பத்ரு யுத்தம் உருவாகிறது வெறும் 313 பரம ஏழை முஸ்லீம்கள் மட்டும் நின்று கொண்டு குறைஷிகளுடைய பலம்பொருந்திய ரானுவத்தை எதிர்த்து போரிட்டு வெற்றி கொள்கிறார்கள், அதன் பிறகும் விடாமல் தொடர்ச்சியாக பலமுறை முஸ்லீம்களின் மீது போர் தொடுக்குறார்கள் இறுதியில் மக்காவை முஸ்லீம்கள் வென்றெடுக்கிறார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பு குறைஷிகள் கூட்டம் தலைகுனிந்து நிற்கிறது அவர்கள் அனைவரையும் அண்ணல் அவர்கள் மன்னித்து விடுகிறார்கள், யாரையும் பழி வாங்க வில்லை இந்த மன்னிக்கும் அவர்களுடைய மனப்பான்மையை வைத்தே அவர்களது சமகாலத்து இறை நிராகரிப்போர் ஏராளான பேர் இஸ்லாத்தை தழுவினார்கள். இன்றும் அரபுலகம் முழுவதும் இஸ்லாமிய நாடாக திகழ்வதற்கு அண்ணல் அவர்களுடைய சகிப்புத் தன்மையே மிகப் பெரும் உதாரணமாகும்.

டென்மார்கிகளால் தீவிரவாதியாக சித்திரித்து சித்திரம் வரைந்த அண்ணல் நபி (ஸல்); அவர்கள் தீவிரவாதியாக இருந்திருப்பார்களேயானால், பிலால் (ரலி) அவர்களை சுடுமணலில் கிடத்தி சித்ரவதை செய்த உமைய்யாவை பழி வாங்கி இருப்பார்கள், அவரும் அக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்

கப்பாப் (ரலி) அவர்களை நெருப்பில் புரட்டி எடுத்தவர்களின் மீது தீவிரவாதத்தை ஏவியிருப்பார்கள். அவர்களும் அக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்கள்

சுமைய்யா (ரலி) அவர்களை மர்மஸ்தானத்தில் அம்பெய்தி கொலை செய்தவர்களின் மீது தீவிரவாதத்தை ஏவி இருப்பார்கள். அவர்களும் அக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்கள்

ஹம்ஜா (ரலி) அவர்களுடைய ஈரலை மென்று துப்பிய ஹிந்தாவின் மீது தீவிரவாதத்தை ஏவியிருப்பார்கள் . அவரும் அக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்

தாயிஃப் நகரில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது கடைவீதியில் கல்லால் அடித்தவர்களின் மீது, அதுவும் வானவர் வந்து கேட்கும் போது மறுத்து விடுகிறார்கள், தங்களிடம் வல்லரசை வீழ்த்தக் கூடிய வலிமையான ரானுவம் உருவானபோதும் அதை செய்யவில்லை மன்னித்து விடுகிறார்கள், உயிரோடு வாழ்ந்த காலத்தில் தங்களுக்கும், தங்கள் தோழர்களுக்கு சொல்லொனா துன்பங்களை, துயரங்களையும் தொடுத்தவர்ளை மன்னித்ததாக திறந்த வெளிப் புத்தகமாக வரலாறு இருக்கையில், இவர்கள் யாருடைய வரலாற்றை படித்து விட்டு அமைதியே உருவான அண்ணல் அவர்களை தீவிரவாதியாக சித்தரித்து சித்திரம் வரைந்தார்கள் என்பது தெரியவில்லை.

அன்புச் சகோதரர்களே !
அரபு நாட்டு எண்ணெயை அவர்கள் அதிகம் உறிஞ்சுவதால் அவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டிருக்கலாம் என்று நாம் நினைக்கிறோம், கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டாலே உடல்நலத்தில் கோளாறு ஏற்பட்டு விடுவது சகஜம் என்பதால் அவர்களிடத்தில் கொலஸ்ட்ரால் குறைய நம்மாலான முயற்சிகளை செய்தேயாக வேண்டும், குறைந்த பட்சம் நம்மிடமிருந்து அவர்களுக்கு செல்லும் இலாபத்தை நிருத்தி விட்டால் கொலஸ்ட்ரால் தாமாக குறைந்து விடும்.

அவர்களுடைய நாட்டில் தயாரிக்கப் பட்டு அரபுநாட்டு வணிகச் சந்தையில் விற்கப்படும் பொருட்களை முஸ்லிம்கள் வாங்குவதை நிருத்திக் கொண்டாலே கொலஸ்ட்ரால் தாமாகக் குறைந்து விடும், அது அவர்களுக்கும் மாபெரும் பாடமாக அமைந்து விடும், அவர்களுடைய வழித்தொட்டு நடப்பவர்களுக்கும் அமைந்து விடும்.

செய்ய வேண்டியதை செய்து விட்டு நினைக்க வேண்டியது சாதித்து விட்டு , இறுதியில் அவர்களுடைய உதட்டளவிலான ஓர் எக்ஸ்கியூஸ் நமக்கு தேவை இல்லை, அவர்களுடைய எக்ஸ்கியூஸையும் நாம் ஏற்றாக வேண்டுமெனில் போராட்டங்களை கைவிடுவோம், அவர்களுடைய உறவு இனி நமக்கு தேவை இல்லை,

அவர்கள் கேலிச் சித்திரம் வரைந்தது ஓர் அரசியல்வாதியை அல்ல, ஒரு தடகள வீரரை அல்ல , ஒரு தொழிலதிபரை அல்ல , ஒரு நடிகரை அல்ல மாறாக இறைத் தூதரையாகும்,

அழிவின் விளிம்பில் இருந்த மனித சமுதாயத்தை உயர்வான அந்தஸ்த்துக்கு கொண்டு சென்றவர்களில் நூரு பேரை தேர்வு செய்து அந்த நூரு பேரில் முதல் அந்தஸ்த்தை முஹம்மது நபியவர்களுக்கு வழங்கி கவுரவித்தார் மைக்கேல் ஹார்ட் என்கிற கிறிஸ்தவர். நூறு பேருடைய வரலாறையும் படித்து விட்டுத் தான் அப்புத்தகத்தை அவர் எழுதினார், அவர் படித்த வரலாற்றில் அவருக்கு தெரியவில்லை முஹம்மது நபி தீவிரவாதி என்று, இவர்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது ? எந்த வரலாற்றைப் புறட்டிப் பார்த்தார்கள்?

''வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீ;ங்கள் பின்பற்றாதீர்கள்;. அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 5:77)

- அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

No comments: