நம் அரசியல்வாதிகளிடம் சில நல்ல அணுகுமுறைகளை நாம் எதிர் பார்ப்பது நியாயமானதே!. நம்மை ஆள்பவர்களும், ஆள விரும்புபவர்களும் எப்படி இருக்க வேண்டும் என நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அரசின் மீதும் கட்சிகளின் மீதும் மக்கள் கட்டுப்பாட்டைச் செலுத்துவதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு. இன்றைய அரசியல்வாதிகளிடம் காணப்படும் தவறான இயல்புகள் களையப்பட வேண்டும். அவர்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படாமல் போனால், அனைத்து தரப்பு மக்களும் கிளர்ந்தெழுந்து மாற்றத்தை கொணர்ந்தாக வேண்டும்.
இப்போது அரசியல் உலகை பற்றியிருக்கும் ஒரு பெரும் நோய் பதவிப் பித்து. ஒரு தலைவரின் பன்முக ஆளுமையையும், வெகுஜனங்களிடம் அவரது செல்வாக்கையும் முன்னிறுத்தியே ஒரு கட்சி உயிர் வாழ்கின்றது. கொள்கைகளைவிட தனிமனிதத் தலைமையே வெகுவாக கொண்டாடப்படுகின்றது. உலகம் முழுவதும் இந்தப் போக்கு வளர்ந்து வருவதைக் காணமுடிகின்றது.
நேர்மையும், நல்லொழுக்கமும், நிர்வாகத் திறனும், சமூகப் பிரச்சனைகளில் தீர்க்கமான தெளிவும் உள்ளவர்களையே பதவி நாற்காலிகளில் அமர்த்த வேண்டும். தகுதி ஒன்று மட்டுமே அளவுகோலாகக் கொள்ளப்பட வேண்டும்.
நெஞ்சுக்குள் நேர்ந்து கொண்ட இலட்சியத்திற்காகவும், சமூக நலன் சார்ந்த கொள்கைகளுக்காக சரியான களம் தேடி அரசியல்வாதிகள் கட்சி மாறிய காலம் பழைய கதை. எந்த நேரத்தில் எங்கே சேர்ந்து எவ்வளவு சுரண்டலாம் என்ற சிந்தனையில் நாளொரு மேடையும், பொழுதொரு நடிப்புமாக, விதவிதமாக வேடமிடும் பச்சோந்தி கச்சி மாறிகளின் களமாக அரசியல் சிறுமைப்பட்டுக் கிடக்கின்றது.
நல்லவர்களின் கூட்டம் ஒதுங்கிக் கொண்டதால் நரிகளின் ராஜ 'சங்'கீதங்கள் பெருகிவிட்டன. நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்று ஒதுங்கி நிற்கும் போக்குத்தான் இன்றைய அனைத்து தீமைகளுக்கும் அடித்தளம். சாக்கடை என்று மூக்கைப் பிடிப்பதால் நாற்றம் போகாது. சுத்தம் செய்வதற்கு நல்லவர்கள் கூட்டம் இன்றே களம் இறங்கியாக வேண்டும். அரசியல் மட்டும் ஆரோக்கியமாக அமைந்துவிட்டால் சமூகத்தின் சகல நோய்களுக்கும் மருந்து தானாக வந்து சேரும்.
அதேவேளை சுத்தம் செய்ய களம் இறங்கும் நல்லவர்கள், எப்போதும் நாங்கள் நல்லவர்களாக இருப்போம் என்ற மனத்துணிவு உடையவர்களாக இருத்தல் அவசியம். காரணம் மிகப் பெரிய மேதைகளைக்கூட தனது சாக்கடையில் சங்கமிக்க வைத்த பெருமையே அரசியலுக்கு அதிகம். குளிக்கப் போய் பின்பு சேற்றைப் பூசிக் கொண்ட கதையாகிவிடக் கூடாது.
- இம்தியாஸ்
நன்றி: புதுயுகம் சிற்றிதழ் - மே, 2006
Monday, May 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment