இறைவனின் திருப்பெயரால்
மத்திய சிறையிலிருந்து மகளுக்கொரு மடல்
மத்திய சிறையிலிருந்து மகளுக்கொரு மடல்
எனது பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய அன்பு மகள் ஸல்ஸபீலாவுக்கு,
கொடியவர்களின் பிடியில் அகப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இருக்கும் உனது தந்தை எழுதும் அன்பு மடல் மகளே, நான் இறை அருளால் நலம். மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க இறைவன் அருள்புரிவானாக!
மகளே! நீ கருவறையில் உதயமாகும்போது நான் 1993 முதல் 1997 வரை சிறையில் 'ஷதடா' எனும் கொடிய சட்டத்தின் பேரில் சிறையில் இருந்தேன். நான் மூன்று ஆண்டு கால சிறைவாசத்திற்கு பின்பு 1997-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தேன். மீண்டும் 1998-ம் ஆண்டு சிறைக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகப்போகின்றன. நான் உன்னை உனது தாயாரிடம் விட்டு விட்டு சிறைக்கு வரும்போது உனக்கு 10 மாதம். ஆனால் இன்று நீ 9 வயதை பூர்த்தி செய்யப்போகிறாய். நீ சின்ன வயதில் தந்தைப் பாசத்தையே காணாதவள். தாயின் அரவணைப்பு மட்டுமே உனக்கு உள்ளது.
நீ இரண்டு மாதத்திற்கு முன்பு என்னைக் காண வந்தபோது நான் எப்போது வெளியே வருவேன் என்று அழுது கொண்டு இருந்தாய். மகளே! மனிதர்களாக பிறந்து விட்டோம். துன்ப துயரங்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
என்னுடைய வழக்கில் 1300 சாட்சிகள் விசாரித்து முடிந்து விட்டன. இன்னும் சில மாதங்களில் இந்த வழக்கு முடிந்துவிடும். இந்த வழக்கில் நான் ஆறாவது குற்றவாளியாக இருக்கிறேன்.
எனக்கு இந்த வழக்கில் அதிகபட்சமாக தூக்கு தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன். ஏனக்கு தூக்கு தண்டனை கிடைத்தால் நீ அழக்கூடாது. எனது தாய் அல்லது குடும்பத்தில் உள்ள யார் அழுதாலும் அவர்களை அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இறைவனுடைய நாட்டம் எதுவோ அதுதானே மகளே நடக்கும்.
திருக்கலிமாவான லா இலாஹ இல்லல்லாஹூ என்று மொழிந்தவர்களுக்கும் அதை மொழியாமல் இருப்பவர்களுக்குமிடையில் நடக்கும் யுத்தத்தில் மேலோட்டமாக வேண்டுமானால் இறை நிராகரிப்பாளர்கள் இந்த வழக்கில் வெற்றியடைலாம். ஆனால் மறுமையில் இவர்களுடைய நிலை மிகவும் இழிவாக இருக்கும். மரணத்தைக் கண்டு விரண்டோடுபவர்கள் அல்ல நாம். நமக்கு எங்கு எப்போது அல்லாஹ் மரணத்தை ஏற்படுத்தியுள்ளானோ அந்த மரணம் நமக்கு வந்தடைந்தே தீரும். அது இரும்புக் கோட்டையில் பத்திரமாக இருந்தாலும் மரண நேரம் வந்து விட்டால் ஒரு நொடி பிந்தவும் செய்யாது. ஒரு நொடி முந்தவும் செய்யாது.
உன்னை நினைக்கும்போது என் கண்கள் குளமாகின்றன. இருந்தபோதும் இறைவனுடைய நாட்டம் என்று அமைதி காக்கின்றேன். மகளே! இந்த உலகம் அற்பமானது நாளைய மறுமை தான் நமக்கு சிறந்தது. நீ ஐந்து நேரம் தொழ வேண்டும். தினமும் குர்ஆணை ஓத வேண்டும். இறைவனை அதிகமாக திக்ர் செய்ய வேண்டும். நான் மரணித்துவிட்டாலும் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அல்லாஹ் உனக்;கு உதவி புரிவான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கருவுக்குள் இருக்கும் குழந்தைக்கும் உணவளிக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீனே.
ஏனக்கு இந்த வழக்கில் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு இறைவனுடைய நாட்டப்படி நான் தூக்கில் தொங்கிவிட்டால், உனது தந்தை தூக்குமேடை ஏறும்போது அழுதான் என்று வதந்தி பரப்புவார்கள். மகளே! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், அழமாட்டேன்! நான் இறைவனிடமே செல்கின்றேன் என்ற மன உறுதியோடு எனது இவ்வுலக வாழ்வை முடித்துக் கொள்வேன். மகளே! ஏனக்கு பல ஆசைகள் உன்னைப்பற்றி, இருந்தாலும் அது நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பது நம்மைப் படைத்த இறைவனுக்குத் தான் தெரியும்.
ஒரு வேளை நாம் இவ்வுலகில் சந்திக்க இயலாமல் போனாலும் நிச்சயமாக நாம் மறுமையில் சந்திக்கக்கூடிய நற்பாக்கியத்தை இறைவன் நமக்கு தருவான். நான் மரணித்து விட்டால் நீ உன் தாயாரை நன்றாகப் பார்த்துக் கொள். என்னைத் திருமணம் செய்த ஒரே காணைத்திற்காக கடந்த 13 ஆண்டுகளாக உனது தாயார் மிகவும் கஷ்டப்பட்டு விட்டார். பொறுமைக்கு மறுபெயர் உனது தாயார் தான். இந்த வழக்கின் தீர்;ப்பையிட்டு நான் வருத்தப்படவில்லை. சமுதாயம், அரசியல் அமைப்புகள் என்னை காப்பாற்றும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. படைத்த அல்லாஹ்வை நம்புகிறேன். அவன் நாட்டம் எதுவோ அது நடக்கும்.
இந்த உலகில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை தூக்கிலிட வேண்டும் என்று கூறினாலும் இறைவனின் நாட்டம் இல்லாமல் அது நடக்காது. இந்த உலகில் உள்ள அனைவரும் சேர்ந்து என்னை தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்ற நினைத்தாலும் அதுவும் இறைவன் நாடாமல் நடக்காது. உனக்கு இந்த கடிதம் எழுதக் காரணம் நீ ஈமானிய உறுதியோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
இறைவனுடைய அருளால் நீ எனக்கு மகளாகப் பிறந்தாய். ஆனால் உண் மழலைச் சிரிப்பைக் கேட்க, நீ பள்ளி செல்லும் அழகைப் பார்க்க எதுவுமே முடியாமல் போனதை எண்ணி வருந்துகிறேன். நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ் நம்மை ஒன்றுசேர்ப்பான். நீயும் து.ஆ. செய். நானும் து.ஆ. செய்கிறேன். இந்த கடிதம் கிடைத்தவுடன் நீ பதில் கடிதம் எழுது. உன் கடிதத்தை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்.
உனது அன்புத் தந்தை
அபு ஸல்ஸபீலா
மத்திய சிறை
No comments:
Post a Comment