Saturday, May 06, 2006

குடந்தைப் பேரணியும் இயக்கவாதிகளும்

உலக முஸ்லிம்களின் மாநாடு என்று வர்ணிக்கப்படுகிற ஹஜ் தினத்தில் உலகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 25 லட்சம் பேர் கூடுகிறார்கள். கருப்பர் வெள்ளையர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை பாராது குழுமுவதை நேரில் பார்த்தவர்களுக்கு புதிய அதிசயமாக தோன்றும். அதனைப்பற்றி அறியாதவர்களுக்கு இது ஏதோ ஒரு மகாமகம் அல்லது பேரணி நிகழ்ச்சிகளின் இரண்டு அல்லது மும்மடங்கு என்று தோன்றும். அதனால்தான் என்னவோ, ஜமராத்திற்கு கல்லெறியப்போகும்போது வரிசையில் போகவேண்டும் என்றும், நாடு வாரியாக பிரித்து அனுப்பவேண்டும் என்றும் உணர்வு வாரஇதழில் கேட்டுக்கொண்டார்கள்.



ஹஜ் செய்வதற்கு முறையாக முத்தவிஃப் முறையில் பணம் செலுத்தி வந்தவர்கள் முத்தவிஃப் ஏற்பாடு செய்து தரும் வாகனங்களில் மினாவிலிருந்து அரஃபாவிற்கு பயணிக்கிறார்கள். (சிலரைத் தவிர). மற்றவர்கள் நடைபயணமாக, காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு (பிறை 9) அரஃபாவை நோக்கி கிளம்புகிறார்கள். நடந்து செல்லும் ஹாஜிகளின் வரிசை மதியம் 12 மணிவரை தொடருகிறது. அதே போல் முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு திரும்பும் நாளிலும் (பிறை 10) இதே கூட்டத்தை பார்க்கலாம். (பார்க்க படம்) படத்தில் மக்கள் கூட்டத்தையும் வாகன நெரிசல்களின் ஒரு பகுதியையும் பார்க்கலாம்.

அரஃபா என்பது ஹஜ் நாட்களில் அதுவும் குறிப்பாக துல்ஹஜ் பிறை 9 ல் மட்டும் கூடும் திறந்த வெளி மாபெரும் திடலாகும். திடல் என்றால் நம்ம ஊர் மைதானத்தை போல் என்று எண்ணிவிடவேண்டாம். பல கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட ஒரு திடலாகும்.

நடந்து செல்வதற்கு பல வழிகளை ஏற்படுத்தியிருப்பதுபோல், வாகனங்கள் செல்வதற்கும் அவ்வாறே பல சாலைகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் எமர்ஜென்ஸிக்காக ஒரு சாலையை ஒதுக்கி அதில் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.

மினாவில் நுழைய வாகனங்களுக்கும் ஹஜ் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். அப்படி அனுமதி வாங்காத வாகனங்கள் மக்காவில் உள்ள மாபெரும் 2 வாகன நிறுத்தங்களிலே விட்டுவிட வேண்டியதுதான்.

இதுபோக, ஹஜ் நாட்களில் மினா, அரஃபா மற்றும் முஸ்தலிஃபா ஆகிய இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் முறையே பல ட்ரிப்கள் அடிப்பதாலும் பல சாலை வழிகள் இருப்பதாலும் வாகன நெரிசல்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் அந்த நேரத்தில் வாகனங்கள் நெரிசல்களில் மாட்டிக்கொள்வதை பார்த்தால் நமக்கே முழிப்பிதுங்கிவிடும்.

ஹஜ்ஜில் எத்தனை பேர் கூடுகிறார்கள் என்று கணக்கெடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது சவுதி அரசாங்கம். ஹாஜிகளுக்கு உரிய வசதிகள் செய்யவேண்டும் என்பதும் வருகிற காலங்களில் புதிய எண்ணிக்கைக்கு தகுந்தமாதிரி வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதும் இதன் காரணமாகும்.

கீழ்கண்ட முறையில் இக்கணக்கெடுப்பு முறைப்படுத்தப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

1) ஹஜ் செய்ய வரும் வெளிநாட்டினர்
2) முறையாக ஹஜ் அனுமதி பெற்றுவரும் உள்நாட்டினர்
3) மினாவில் ஹாஜிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் டெண்ட்களின் எண்ணிக்கை.
4) துல்ஹஜ் மாதம் பிறை 1-லிருந்து 9 வரை மக்காவின் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கணக்கர்கள் மூலமாக.

த.த.ஜ.வின் கும்பகோணம் பேரணி/மாநாடு

கீழே உள்ள படங்களில் நீங்கள் பார்ப்பது த.த.ஜ.வின் கும்பகோணம் பேரணி. நாள் ஜனவரி 29, 2006.

1. பேரணி துவக்கத்தில் மூன்று பேர் கொண்ட வரிசையாக சென்ற போது..


2. நேரம் செல்லச் செல்ல ஐந்து ஆறு பேர் கொண்ட வரிசையாக ஆன போது..


3. பின்னர், சாலையையே அடைத்துக் கொண்டு சென்ற போது..



கீழ்கண்ட படம், மினாவில் துல்ஹஜ் பிறை 12-ல் எடுக்கப்பட்டதாகும். படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யுங்கள்.



25 லட்சம் என்ற (ஹஜ்)ஸ்கேலுக்கு பக்கத்தில் இவர்களால் சொல்லப்படும் 10 லட்சம் என்ற ஸ்கேலை வைத்துள்ளேன். இவர்களின் கூற்றில் உண்மை உள்ளதா? என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.

கும்பகோணத்தில் எத்தனை பேர் கூடினார்கள் என்று கணக்கெடுப்பது நமது நோக்கமல்ல. "பொய் சொல்வதற்கு வெட்கப்படாத ஒரு கூட்டம்" உருவாகிவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு மார்க்கத்தை மக்களுக்கு சொல்ல வந்ததாக கூறிக்கொள்ளும் இந்த கூட்டத்தினரின் மத்தியில் பொய்கள் கணக்கு வழக்கு இல்லாமல் ஆறாக பாய்ந்தோடுகின்றன. இதனை மக்கள் மத்தியில் வைப்பது மட்டுமே நமது நோக்கம்.

குலுங்கியது கும்பகோணம் மற்றும் தஞ்சையும் குடந்தையும் ஓர் ஒப்பீடு ஆகிய த.த.ஜ. தளத்தில் பதியப்பட்ட இரண்டு கட்டுரைகளையும் எனது விமர்சனத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளேன்.

கடந்த காலங்களில் நமது மாநாடுகளில் கலந்து கொண்டதை விட 6 மடங்கு அதிகமான வாகனங்கள் கலந்து கொண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


சுருங்கச் சொன்னால் தஞ்சையில் திரண்ட மக்கள் திரளை விட ஐந்து முதல் ஆறு மடங்கு மக்கள் குடந்தையில் திரண்டனர் என்பதை யாரும் மறுக்க முடியாது
என்று த.த.ஜ.வின் இணைய கட்டுரைகள் சொல்கின்றன.

(படத்தில் உள்ளது த.மு.மு.க.வின் தஞ்சை பேரணி - நாள் மார்ச் 21, 2004) முன்பு த.மு.மு.க. மாநாடுகளில் வருகை தந்ததாகச் சொல்லப்பட்ட எண்ணிக்கைகளும் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

த.த.ஜ.வினரே உங்களின் நோக்கம் ஆள்வோரிடம் உரிமையை கேட்பதா? அல்லது த.மு.மு.க.வை விட நீங்கள்தான் பெரிய இயக்கம் என்று காட்டவேண்டும் என்பதா?

நேரடியாக 10 லட்சத்திற்கு கணக்கு சொல்ல முடியாது என்பதால் நீங்கள் ஒன்றாக இருக்கும்போது சேர்ந்து சொன்ன பொய்யைப் போல ஆறு மடங்கு என்று சொல்கிறீர்களா?

உரிமையை கேட்க ஜனநாயக அடிப்படையில் பேரணி நடத்துவதை அனைவரும் வரவேற்போம். அதே நாளில் இராமநாதபுரத்தில் போட்டி மாநாடு வைத்த த.மு.மு.க.வை கண்டிப்போம். ஆனால் கும்பகோணம் பேரணிக்கு வந்தவர்கள் என்று இவர்கள் சொன்ன பொய் எண்ணிக்கைகள் இவர்களின் சுயரூபத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உலக விஷயத்திலேயே இவ்வளவு பொய்களை சொல்லும் இவர்களை மார்க்க விஷயத்தில் அப்படியே நம்பும் சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்!

இதுபோன்ற பொய்கள், உண்மையான வெற்றியைத் தராது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டாமா!

மாநாடு/பேரணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை
1) உளவுத்துறை மூலம் எடுக்கப்பட்ட கணக்கு. இது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

2) எதிரி இயக்கங்களை கலங்கிடச் செய்ய சொல்லப்படும் கற்பனைக் கணக்கு. (10, 12, 14, 18 லட்சம் என்று சொல்லி பிறகு 10 லட்சம் என்றும் எதிர்ப்பு அதிகமாகவே சில நேரத்தில் சில இடங்களில் சுருதி குறைத்து லட்சக்கணக்கான என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்)

3) மனம்போனபடி சொல்லப்பட்ட பத்திரிக்கைளின் கணக்கு. (சன் டீ.வி. போன்ற சேனல்களாக இருந்தால் அதையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்).

4) போட்டி இயக்கங்களால் சொல்லப்படும் பொறாமை கணக்கு.

5) எத்தனை ஊர்களிலிருந்து எத்தணை பேர்கள் வந்தார்கள் என்று பேரணி/மாநாடு நடத்தும் இயக்க நிர்வாகிகளால் எடுக்கப்பட்ட உண்மை கணக்கு. (இதனை யாரும் வெளியிடுவதில்லை).

எந்த ஒரு விஷயத்தையும் அளக்க வேண்டுமானால் அளவுகோல் முக்கியமானதாகும். அது பொருளுக்கு தகுந்தார் போல மாறுகிறது. தலைவர்கள்/அரசியல்வாதிகள் தன் இஷ்டத்துக்கு கணக்கு சொன்னால் புத்தியுள்ள மனிதனுக்கு கீழ்கண்ட சிந்தனைகள் தோன்றவேண்டும்.

1) 10 லட்சம் பேர் கூடுவதற்கு கும்பகோணம் டவுன் போதுமானதா?

கும்பகோணம் என்பது மிகப்பெரிய மக்கள் எண்ணிக்கையை தாங்கக்கூடிய நகரமல்ல. சாதாரண திருமண முகூர்த்த தினங்களில் கும்பகோணத்தை கடந்து செல்லும் வாகனங்கள் நீந்திக்கொண்டுதான் போகவேண்டும். அப்படிப்பட்ட டவுனில் 10 லட்சம் மக்கள் கலந்துக்கொண்ட பேரணியா? என்பதுதான் நமது கேள்வி.

2) 10 லட்சம் பேர் கூடினார்கள் என்று சொன்னால் ஒரு வாகனத்திற்கு அதிப்படியாக 100 பேர் என்று கணக்கிட்டு 10லட்சத்தில் வகுத்தால் கூட 10 ஆயிரம் வாகனங்கள் வந்திருக்க வேண்டாமா?

கும்பகோணத்தில் 29ந் தேதி அதிகாலை 6 மணிக்கே வெளியூர் வாகனங்கள் வரத் துவங்கியதால் காலையிலேயே கும்பகோணம் 'களை' கட்டியது.


பேரணி துவங்கும் இடமான அசூர் பைபாஸ் ரோட்டில் காலை 11 மணிக்கே வாகனங்கள் வரத் துவங்கியது. மதியம் 2 மணி அளவில் சென்னை பைபாஸ், மயிலாடுதுறை பைபாஸ், தஞ்சாவூர் பைபாஸ் ஆகிய வழித்தடங்களில் வாகனங்கள் வரத் துவங்கின.


மேலும் த.த.ஜ.வின் இணைய கட்டுரை கீழ்கண்டவாறு சொல்கிறது.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநாட்டில் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கண்ட வாசகம் த.த.ஜ.வின் கும்பகோணம் குலுங்கியது கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சாட்சியம். ஆகவே நமது ஊகங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு அவர்கள் சொன்ன வாக்குமூலத்தையே ஆதாரமாக எடுத்துக்கொள்வோம்.

3000 வாகனங்கள் X சராசரியாக 100 பேர்கள்
விடை 3,00,000 (3 லட்சம் பேர்கள்)

ஆக மொத்தத்தில் எப்படி தோராயமாக கணக்கிட்டாலும் 10 லட்சம் வரவில்லை. நான் கும்பகோணத்திற்கு வந்து த.த.ஜ.வினரை கணக்கெடுக்கவில்லை. ஒவ்வொருவராக கணக்கெடுத்து உள்ளே விடவில்லை. த.த.ஜ.வினர் குறிப்பிட்ட வாசகங்களில் இருந்துதான் ஆதாரத்தை எடுக்கிறேன். எனது மதிப்பீடு தவறு என்றால், இவர்கள் குறிப்பிட்டுள்ள 3000 வாகனங்கள் என்ற வாசகத்தில் இருந்து 10 லட்சத்திற்கு கணக்கு கொடுக்கட்டும். "கணக்கில்லா மக்கள் கூட்டம்" என்று சொல்லி 10 லட்சம் என்ற மடைமையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டாம்.

சகோதரர்களே சிந்தியுங்கள். சிந்திக்கக்கூடிய ஆற்றலைக்கொண்டு மனிதனை படைத்திருக்கிறான். தலைவர்களின் முன்னால் ஆட்டுமந்தையாக செல்வதை விட்டும் திருந்துங்கள்.

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்

وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءنَا فَأَضَلُّونَا السَّبِيلَا

"எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.

رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

"எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்). (அல்குர்ஆன் 33:66-68)


சிந்திக்காமல் அப்படியே சென்றீர்களென்றால், உங்களை நாளைக்கு வேறொரு தவறுக்கும் உடன்படுத்துவார்கள். அப்பொழுது எதிர்த்தால், அன்று இனித்தது இன்று கசக்கிறதோ? கேட்க மாட்டார்களா?

நடுநிலையாளர்கள் கவனத்திற்கு:
ஏகத்துவம் முழக்கம் தமிழ்நாட்டில் தொடங்கியதிலிருந்து ஏகப்பட்ட பிரச்னைகள், குழப்பங்கள், குடும்பத்தில் பிளவுகள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு உண்மை என்னவென்பதை ஆராய்ந்து மற்றும் விளக்கம் கேட்டு புரிந்துக்கொண்ட அந்த நெஞ்சங்கள் இன்று அதே இயக்கம் சொல்லும் பொய்களை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டும்போது "குழப்பம்! குழப்பம்!" என்று கூச்சல்போடும் நோக்கமென்ன?

கண்ணை மூடிக்கொண்டு யாரையும் எதிர்க்கவில்லை. ஆதாரத்துடன்தான் எதிர்க்கிறேன் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். எனது கட்டுரைகளில் தவறுகள் இருந்தால், அதனை பின்னூட்டங்களில் சுட்டிக்காட்டுங்கள். நானும் மனிதன்தான் என்பதால் தவறிழைக்க வாய்ப்புண்டு. ஆகவே, என்னை திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

த.த.ஜ. சகோதரர்களுக்கு:
த.மு.மு.க. தவறே செய்யவில்லையா? என்று கேட்கும் த.த.ஜ.வினரே! ஆமாம் தவறு செய்கிறது. எனக்கு தெரிந்த விஷயங்களை தட்டிக்கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்த விஷயங்களை என்னைவிட அதிகமாக தட்டிக்கேட்கிறீர்கள். அதனை வரவேற்கிறேன். உங்களுக்கும் எனக்கும் மறுப்பு தெரிவிக்க முடியாததற்கு வாய்பொத்தி நிற்கிறார்கள். ஆனால் "மார்க்கம் மார்க்கம்" என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறும் உங்களின் பொய்யை தோலுரித்துக்காட்டியதற்காக ஃபித்னா செய்கிறாயா என்பதும், ரசிகர்மன்றங்களாக "என்ன அரிப்போ" என்று கேட்பதும்தான் நீங்கள் செய்யும் அழைப்புப் பணியா?

த.மு.மு.க. பாதைமாறி போகும்போது அது புதிய முஸ்லிம்லீக்-ஆக போகலாம். ஆனால் நீங்கள் வழிகெட்டுப் போனால், புதிய மதம் உருவாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

த.மு.மு.க. சகோதரர்களுக்கு!
உங்களின் எதிரியை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் என்னுடைய கட்டுரையை பயன்படுத்திகொள்ளாதீர்கள். உங்களை நோக்கியும் என்னுடைய கேள்விகள் வந்துள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.

த.த.ஜ. மற்றும் த.மு.மு.க. தலைமைகளுக்கு எனது வேண்டுகோள்:
நீங்கள் 8 அடிகள் பாய்ந்தால் உங்கள் உறுப்பினர்கள் 16 அடி பாய்கிறார்கள். நீங்கள் ஒரு தவறு செய்தால் உங்கள் உறுப்பினர்கள் உங்கள் தவறுகளை மறைக்க தஃப்ஸீர் செய்கிறார்கள். நீங்கள் என்ன சொன்னாலும் உங்களுக்கு ஜால்ரா போடும் கூட்டம் உருவாகி வருகிறது.

உமர்(ரலி) அவர்கள் தனது மக்களிடம் "நான் தவறு செய்தால் என்ன செய்வீர்கள்" என்று கேட்ட போது, கூட்டத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதர் எழுந்து "உமரே இந்த வாள் உன்னை நேர்வழி படுத்தும்" என்கிறார். உடனே உமர்(ரலி) அவர்கள், "எனக்கு இனி கவலையில்லை, எனது தவறினை எனக்கு சுட்டிக்காட்ட ஆட்கள் இருக்கிறார்கள்" என்று சொன்னதாக வரலாறு கூறுகிறது.

ஆனால், உங்களுக்கு ஜால்ரா போடும் கூட்டத்தை இப்படியே நீங்கள் கண்டிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் இயக்க தலைவர்களின் மரணத்திற்கு கூட இவர்கள் தீ குளிப்பார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இயக்கம் சாராதவர்களே:
உங்களை இந்த இயக்கவாதிகள் ஆள்பிடிப்பதற்காக ஓடோடி வருவார்கள். பையத் செய்யும் விடியல் கூட்டம் முதல் த.மு.மு.க., த.த.ஜ. ஆகிய எந்த கூட்டத்திலும் சேர்ந்துவிடாதீர்கள். இயக்கத்தில் சேர்ந்தால்தான் தஃவா பணி செய்ய முடியும் என்று பலர் நினைத்து ஏமாந்து நிற்கிறார்கள். தஃவா பணி செய்ய எத்தனையோ வழிகள் உண்டு. இயக்கம் சாராமல் பலர் அருமையாக தஃவா பணி செய்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த இயக்கங்களில் மூழ்கி காணாமல் போய்விடாதீர்கள்.

அதே நேரத்தில் இந்த இயக்கவாதிகள் தவறு செய்யும்போது ஆதாரத்தின் அடிப்படையில் தட்டி கேளுங்கள். நன்மையான உபதேசம் உங்களிடம் வேண்டி நின்றால் சொல்லிக் கொடுங்கள். நல்ல விஷயங்களுக்கு தோள் கொடுங்கள். கெட்ட விஷயங்களில் தூர நில்லுங்கள்.

சிந்தனைவாதிகளே! இயக்கங்களை விட்டும் வெளியே வாருங்கள்!
ஒவ்வொரு இயக்கமும் நல்ல சிந்தனைவாதிகளுக்கு சில பொறுப்புகளை தலையில் சுமத்தி அவர்களின் கைகளை கட்டிப்போட்டுள்ளார்கள். ஆகவே இந்த சிந்தனைவாதிகள் இயக்கத் தவறுகளுக்கும் தஃப்ஸீர் கொடுத்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

ஜமாத்தே இஸ்லாமி, அபூ அப்துல்லாஹ்வின் ஜமாத்துல் முஸ்லிமீன், ஜாக், விடியல், த.மு.மு.க., த.த.ஜ. ஆகிய எல்லா இயக்கங்களிலும் நல்ல சிந்தனைவாதிகள் உண்டு. ஆனால் அவர்களின் சிந்தனைகளெல்லாம் போட்டி இயக்கத்தினருக்கு எதிராக மட்டுமே கூர் தீட்டப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சிந்தனைவாதிகளே! இயக்கத்தைவிட்டு வெளியே வாருங்கள்!.

ஏன் இயக்கத்தில் இருந்துக்கொண்டே தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாதா என்கிறீர்களா? ஆம், அவ்வாறு சுட்டிக்காட்டினால் நீங்கள் திருட்டுப்பட்டம் சுமந்தவர்களாக துரத்தப்படுவீர்கள் என்பதைத்தான் கடந்த கால பலருடைய படிப்பினைகளில் இருந்து அறிய முடிகிறது.

என்னருமை இஸ்லாமிய சகோதரர்களே!
திடமான ஈமான், தெளிந்த அறிவு, நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை (மார்க்க விஷயத்தில்) அப்படியே பின்பற்றுதல் ஆகிய இந்த மூன்றில் மட்டுமே வெற்றி இருக்கிறது என்பதை உணருங்கள்.

மார்க்கத்தை அறிந்தவர்களாக த.த.ஜ.வினர் இருந்தால் எனது விமர்சனத்தை இறைவனை பயந்து கண்ணியமாக எதிர்கொள்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)

எனக்கும் உங்களுக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

1 comment:

முகவைத்தமிழன் said...

""பிஜேயின் தவ்ஹீத் - பிஜேயின் மார்க்கம் என்ற நிலைத்தான் உருவாகி வருகின்றது. ஒருவேளை பிஜே தமுமுகவில் இருந்து, பாக்கர் மட்டும் பிரிந்து போய் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* என்று ஆரம்பித்திருந்தால் இந்த கூட்டம் பாக்கரின் ஜமாஅத்தான் சரியான தவ்ஹீத் ஜமாஅத் என்று முடிவு செய்திருக்குமா... அவர்களின் ஒருவர் கூட இதை சரிகாண மாட்டார்கள். அப்படியானால் இவர்களின் தவ்ஹீதும் - மார்க்கமும் பிஜேயுடையதுதானே..."""

சகோ. சுடர் அவர்களே , மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா!!

**த.மு.மு.க. பாதைமாறி போகும்போது அது புதிய முஸ்லிம்லீக்-ஆக போகலாம். ஆனால் நீங்கள் வழிகெட்டுப் போனால், புதிய மதம் உருவாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.**

இந்த வரிகளை நான் நேரடியாக அனைத்து த.த.ஜ வினரின் முன்னிலையில் ஜீபைலில் வைத்து (21/04/2006 ) சகோ. பாக்கரிடம் கேட்டபோது , அவர் இதை ஒத்துக்கொன்டார் .. ""இதை நாங்கள் உணர்ந்ததுதான் இருக்கின்றோம் மற்றுமு் இதை தடுப்பதற்காகன ஆலோசனைகளிள் ஈடுபட்டுள்ளதாகவும் தெறிவித்தார்."" ஆனால் நான் இதை கேட்ட மாத்திரத்தில் கூடியிருந்த ரசிகர்களிள் ஒருவர் என்னை அடிக்க பாய்வதுபோல் பாய்ந்துவிட்டார் என்றால் இவர்கள் எந்த அளவிற்கு மதியிழந்து கிடக்கின்றார்கள் என்று பார்த்து கொள்ளுங்கள். அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்வதற்குள் சகோ. பாக்கருக்கு போதும் ...போதும் என்று ஆகிவிட்டது .

இந்த ரசிகர் கூட்டத்தின் நிலையை மிக நன்றாக உணர்ந்த நிலையிலேயே இதன் தலைவர்கள் உள்ளனர். ஆனால் இதை தடுப்பதற்காக எந்த வகையான வழிமுறைகளை கையாலுகின்றார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

இது த.த.ஜ வில் உள்ள சிந்தனைவாதிகளாள் ஒத்துக்கொள்ளபட்ட ஒன்று "பி.ஜே யின் மார்க்கம்" என்ற சிந்தனை இவர்களின் தொன்டர்களிடம் கானப்படுவது. இது இறுதியில் தனி மதம் என்ற முடிவில்தான் போய் முடியும் (அல்லாஹ் வைத்து காக்க வேன்டும்) இதை தடுப்பதற்கான முயற்சிகளிள் கட்டாயம் சகோ. பாக்கர் மற்றும் சம்பந்தபட்ட பி.ஜே போன்றோர் இறங்க வேன்டும் . மிகக் கட்டாயமான முறையில் இந்த இயக்கமே உடைந்து ஒன்றுமில்லாமல் போனாலும் கூட பரவாயில்லை இந்த தக்லீதுகள் பி.ஜே யின் பெயரால் புதிய மார்க்கத்தை தோற்றுவிக்காமல் இருக்கவேன்டும் .இதை செய்வதற்கு துனிச்சலுடன் சகோ. பி.ஜே யும் சகோ. பாக்கரும் முன்வருவார்களா?

த.த.ஜ வில் உள்ள சிந்தனைவாதிகள் இதை தங்களின் தலைமைக்கு எடுத்து சொல்ல வேன்டும் அதை தங்களின் தலைமை கேட்க வில்லையெனில் இந்த இயக்கத்தை விட்டு நீங்கள் வெளியேரி இந்த தக்லீதுகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட வேன்டும் . பி,ஜே ஒரு மாபெரும் மார்க்க மேதை என்பதில் எந்த கருத்து முரன்பாடும் இல்லை ஆனால் இறுதியில் அவரது பணிகள் யாவும் இந்த ரசிகர் கூட்டத்தினரால் பாலடிக்கப்பட்டு புதிய மார்க்கம் உன்டாக்கபட்டு பி,ஜே யே அதன் குருவாக ஆக்கபடக்கூடிய நிலை ஏற்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அபாய மணியை நாங்கள் அடித்து விட்டோம் உறிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்து அப்படி ஒரு நிலை நேராமல் தடுக்க சகோ. பி.ஜே யும் சகோ. பாக்கரும் நேரடியாக களம் கானுவார்கள் என்ற நம்பிக்கையில் முடிக்கின்றேன்.

நன்றி

முகவைதமிழன்