சொல்-வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தவை. இதன் மூலம் ஒருவரின் உள்ளத்தை கவரவும் செய்யலாம், உலுக்கியும் எடுக்கலாம். வார்த்தைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதன் மூலம் உறவுகளை புதுப்பிக்கவும் வலுப்பெறவும் செய்யலாம். இவ்வார்த்தைப் பரிமாற்றங்களை சுற்றிவளைக்காமல் புரியும்படியாக சொல்வதே சிறந்தது என திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகின்றது. சொல்வதை தெளிவாகவும் நேரடியாகவும் சொல்லுங்கள். (33:20)
சில தவறான சொற்பிரயோகத்தின் மூலம் உணர்வுகளை சீண்டி உறவுகளை முறித்துவிடுகின்றனர். எனவே நல்ல சொற்களையே பயன்படுத்த வேண்டும். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்ன பேசவேண்டும் என்பதை இவ்வாறு கூறுகின்றார்கள். பேசினால் நல்லதையே பேசுங்கள், இல்லையெனில் வாய்மூடி மௌனமாக இருங்கள். (புகாரி)
நாம் பயன்படுத்தும் சொற்கள் யாவும் நமது எண்ணங்களையே பிரதிபலிக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்தவேண்டும். ஏனெனில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் செயல்கள்(சொற்களும்தான்)யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும். ஒருவரது எண்ணம் சரியாக தெளிவாக இருக்குமானால் அதன் வெளிப்பாடாகிய சொல் செயல் சரியானதாகவும் தெளிவானதாகவும் அமையும்.
நம்மிடையே சகதோழர் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ ஒரு சிறு தவறை செய்துவிட்டால் நாம் அவரை காரசாரமாக கடிந்து கொள்வதோடு அவர் மனம் புண்படும்படி சில வார்த்தைகளையும் உதிர்த்துவிடுகின்றோம். இதன் பிரதிபலிப்பு அத்தோழரின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் சிறு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இச்செயல் ஒரு தவறான முன்னுதாரணமாகும். எனவே நம்மின் சகதோழர்களுக்கிடையில் மென்மையான சொற்களை பயன்படுத்துவதோடு அவர்கள்மீது அன்பு கொள்வது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது போன்ற செயல்கள் மூலம் மனம் புண்படுவது தவிர்க்கப்படுவதோடு உள்ளங்கள் ஒன்றுபடுகின்றன. மேலும் அவர் தன்னுடைய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் போது அவரை இடைமறித்து பேசுவது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையல்லவே, மாறாக அவர் பேசும்போது அவரின் கருத்தை முழுமையாக அவதானிப்பது சாலச் சிறந்தது.
நாம் நம்முடைய இலட்சியத்தை ஏனையோருக்கு எடுத்துச் சொல்லிடும் பணியில் அவர்களின் மனங்களை வெல்லவேண்டும், அதுவே புத்திசாலித்தனமும் கூட. விதண்டாவாதங்களை தவிர்த்துவிடுவது ஒரு அழைப்பாளனின் சிறந்த பண்பாகும். எனவே நம்முடைய கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டுமானால் நம்மிடமுள்ள தவறான சொற்பிரயோகம், கோபம், பயம் போன்ற ஷைத்தானின் சுவடுகளிலிருந்து வெளியேறி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒழுக்க விழுமியங்களை முழுமையாக பின்பற்றி வாழும் போது வெற்றிபெற்ற முஃமின்களாக நாம் மிளிரலாம்.
- அமீர்
நன்றி: புதுயுகம் சிற்றிதழ் - மே, 2006
Monday, May 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment