அல்லாஹ்வின் திருப்பெயரால் ..
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இதற்கு முன்பு அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய தியாகத்தின் அடிப்படையில் அமைந்த இரண்டு திருமணங்களைப் பார்த்தோம் அதேஅடிப்படையில் அமைத்த மற்றொரு திருமணம்.
அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரலி) அன்ஹா அவர்கள்
அண்ணலார் அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்திலும் அவர்கள் மரணித்து விட்டப் பிறகும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் எவ்வாறு பாடுபட்டார்கள் என்பது இந்த உலகம் அழியும் காலம் வரையிலும் வரலாற்றின் பொண்ணேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக்கொண்ட நற்பேற்றைப் பெற்றவரும், இன்னும் மிகச்சிறந்த இறையச்சம் உடையவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணிக்காலத்தில், மக்கத்துக் குறைஷிகள் சொல்லொண்ணா துயரங்களைத் தந்தபோது, அந்த இக்கட்டான தருணங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து இறைநம்பிக்கையை வெளிப்படுத்தியவரும், இன்னும் தன்னுடைய உயிரை விட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உயிரை மதித்தவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தின்னைத் தோழரும் ஆவார்கள்.
ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், அபுபக்கர் (ரலி) அவர்களையும் குறைஷிக் கூட்டம் முகம் நீலம் பூர்த்து விடுமளவுக்கு நையப் புடைத்துவிடுகிறது எந்தளவுக்கெனில் மண்டை உடைந்து இரத்தம் வடிந்து அது அபுபக்கர் (ரலி) அவர்களுடைய முகம் முழுவதையும் மாற்றி விடுகிறது. அவர்கள் இறந்து விட்டார்கள் என்று விட்டு விட்டு ஓடும் நிலை ஏற்பட்டு விடுகிறது இருவரும் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கும் போது, செய்தி அறிந்து அபுபக்கர் ( ரலி ) அவர்களுடைய தாயார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து தங்களது மகனை மட்டும் அழைத்துச் சென்று விடுகிறார்கள் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு நினைவு வந்ததும் முதலில் அவர்களுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை அய்னா அஷ்ஹாபி எங்கே எனது தோழர் என்பதாகும் இதை செவியுற்ற அவர்களது தாயார் அவர்களின் மீது கோபம் கொள்கிறார்கள் ( அப்பொழுது அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லை ) அவரால் தானே உனக்கு இந்த நிலை என்று கடிந்து கொள்கிறார்கள்.
ஒருமுறை கைபர் யுத்தத்திற்காக நிதி திரட்டும் பொழுது வீட்டில் இருந்த தங்க வெள்ளி நாணயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கைலியில் கட்டி மூட்டையாக சுமந்து கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்கள் வீட்டில் எதுவும் வைத்திருக்கிறீர்களா ? என்று அண்ணல் அவர்கள் கேட்டதற்கு அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் வைத்து விட்டு மீதி அனைத்தையும் கொண்டு வந்து விட்டேன் எனக் கூறினார்கள்.
உடல், பொருள், உயிர் அனைத்தையும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக அர்ப்பானித்தவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களின் மீது உயிரையே வைத்திருந்தவர்கள் தங்களை அவர்களுடைய உறவுக்காரராக ஆக்கிக் கொள்ள விரும்பினார்கள் அதற்கு தங்களது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அவர்களுக்கு திருமணம் செய்துவிக்க எண்ணினார்கள் அண்ணலார் அவர்களால் மறுக்க முடியவில்லை தனது தோழருடைய எண்ணத்தை அறிந்து கொண்டு அதற்கொப்ப இணங்குகிறார்கள்.
அன்னையவர்கள் சிறுவயதையுடையவர்களாக இருந்ததால் திருமண ஒப்பந்தம் மட்டும் நடைபெறுகிறது.
அல்லாஹ் சுப்ஹான ஹூவத்தாலா அறிவு ஜீவியாகிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்ளை தனது தந்தையைப் போன்றே இறையச்சமுடையவர்களாகவும், இஸ்லாத்தில் உறுதியான பிடிப்பு (ஈமான்) கொண்டவர்களாக வார்த்தெடுத்து விடுகிறான்.
அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அன்றைய ஆட்சியாளர்களால் இஸ்லாத்திற்கு சிறு களங்கமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள், அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அன்னையவர்களிடத்தில் ஆலோசனை கேட்கக் கூடியவர்களாகவும் இருந்தனர்.
ஒரு முறை அலி (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் உதுமான் (ரலி) அவர்களை கொலை செய்த கொலைகாரர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டும் கானாமல் இருந்ததற்காக அரசை எதிர்த்துப் போர் பிரகடனம் செய்தார்கள். பெண்களை திரட்டி அரசை எதிர்த்து ஊர்வலம் சென்றார்கள் .
இன்றும் இஸ்லாமிய பெண்களிடையே மார்க்கப்பற்றுடன் கூடிய சமுதாயப்பற்றும் வளர்ந்ததற்கு அன்னையவர்களுடைய இஸ்லாமிய சமுதாயபட பற்று மிகப் பெரும் முன் மாதிரியாகும்.
அண்ணல் அவர்கள் மரணித்தப் பின் அவர்களுடைய உபதேசங்களையும், அவர்களுடைய அப்பழுக்கற்ற வாழ்க்கையின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் மக்களிடத்திலே பல்லாயிரக் கணக்கான அறிவிப்புகளாக அறிவிக்கக் கூடிய நினைவாற்றல் கொண்டவர்களாக இருந்தனர்
அன்பிற்குரிய சகோதரர்களே !
அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரலி) அவர்களுடன் அண்ணல் அவர்களுக்கு நடந்த இந்த திருமணம் தனது ஆருயிர் தோழருடைய ஆவலை பூர்த்தி செய்யும் விதமாகவே அமைந்தது மாறாக அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது மோகம் கொண்டு தாமாக வழியச்சென்று கேட்டு நடத்திக் கொள்ள வில்லை. இதுவும் ஒரு தியாகத்தின் அடிப்படையில் அமைந்த திருமணமேயாகும்.
மேற்கத்தியர்கள் கூறுவதுபோன்று அண்ணல் அவர்கள் பெண்பித்தராக இருந்திருப்பார்களேயானால் அன்னையவர்களுக்கு அப்பொழுது 9 வயதே ஆகியிருந்தது தாம்பத்ய வாழ்க்கைக்காக இன்னும் ஆறு, ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும், இன்னும் ஆறு, ஏழு வருடங்கள் காத்திருந்து ஒரு கன்னிப்பெண்ணை அடைவதற்கு அன்றே வேறொருக் கன்னிப் பெண்ணை அடையக்கூடிய அனைத்து வழிகளும் மிக இலகுவாகவே இருந்தது என்று இதற்கு முந்தைய கட்டுரையில் எழுதி இருந்தோம்.
மேலும் ஆறு, ஏழு வருடங்கள் காத்திருந்து ஆயிஷா (ரலி) அவர்களை அடைவதற்குரிய சுதந்திர பூமியாக அது இருக்கவில்லை. மாறாக போர்மேகங்கள் சூழ்ந்த அபாயகரமான பூமியாகத் திகழ்ந்தது. அந்த மக்களுடைய வாழ்க்கை ஒவ்வொரு நாள் என்பதை விட அவர்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அபாயகரமானதாக இருந்தது என்றால் மிகையாகாது.
மக்காவிலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் மதீனாவில் தங்களுக்கு ஓர் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டதைக் கண்டு வெகுண்டெழுந்த குறைஷிகள் முழு மதீனாவையும் தாக்கி முஸ்லீம்களை அழித்து ஒழித்து விடுவதற்கு மாபெரும் சதித்திட்டம் தீட்டி கொண்டிருந்தனர், மதீனாவில் முந்தைய வேதங்களை படித்து இறுதி நபி வருகைக்காகக் காத்திருந்த யூதர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மதீனா வருகைக்குப் பிறகு ஏராளமான யூதர்கள் இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர். இதனால் சினங்கொண்ட கிருஸ்தவ ரோம, பாரசீக வல்லரசுகள் மதீனாவை தாக்கி தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாபெரும் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர், மதீனாவை சுற்றி நாலாப் புறங்களிலிருந்தும் மதீனாவுக்கு பேராபத்து காத்துக் கொண்டிருந்தது இவ்வாறான பேராபத்துகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்கள் தங்களுடைய எதிர்கால சுகபோகமான வாழ்க்கைக்காக திட்டம் தீட்ட முடியுமா ? போர் கால அபாயம் சூழ்ந்த பூமியில் வாழ்பவர்கள் எதிர் கால சுகபோகத்தை செப்பனிட முடியமா ? என்பது தான் இங்கே கேள்வி, இன்னும் சொல்வதாக இருந்தால் அவர்கள் அடுத்த வேளை சாப்பாட்டிற்குக் கூட உணவை சேமித்து வைக்கக் கூடியவர்களாக இருந்ததில்லை. எவரிடத்திலாவது உணவு கூடுதலாக இருந்தால் அதை அக்கம் பக்கத்து வீட்டாரை அழைத்து வைத்து அப்பொழுதே முடித்து விடுவார்கள். அடுத்த நாளைக்கு எதுவும் இல்லை என்றால் பட்டினியாக கிடந்து விடுவார்கள் அல்லது நோன்பு என்று அறிவித்து விடுவார்கள். இந்த நிலையில் ஆறு, ஏழு வருடங்கள் கழிந்து மெச்சூர் ஆக இருக்கும் ஒருப் பெண்ணுக்காக இன்றே ஆசையை அடித்தளம் அமைக்க மடியுமா ? முடியாது !
ஆனால் இன்று சுகபோக வாழ்க்கை வாழும் மேற்கத்தியர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் என்ன, என்ன வழிகளில் உடல் சுகத்தை அடையமுடியுமோ அவ்வழிகளிலெல்லாம் அடைந்து கொள்கின்றனர், அது அவர்களுக்கு முடிகிறது அதே போல் எதிர்காலத்தில் எவ்வாறு அடைந்து கொள்வது என்றும் திட்டம் தீட்டி அதன்படியும் அடைந்து கொள்கின்றனர்; காரணம் அவர்களுடைய நாட்டிற்கு அண்டை நாடுகள் மூலம் யாதொரு போராபத்தும் ஏற்படுவதில்லை அவர்களுடைய ஆட்சியாளர்கள் தங்களிடம் நேட்டோப் பவரையும் , வீட்டோப் பவரையும் கையில் வைத்துக் கொண்டு தமது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருவதால் இவர்கள் சுகபோகமான எதிர்கால வாழ்வுக்கு சிறப்பான செப்பனிடுதல் சாத்தியமாகி விடுகிறது , ஆனால் அன்றும் இன்றும் என்றும் உலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்;க கூடிய முஸ்லீம்கள் எதிர்கால வாழ்க்கையை செப்பனிட முடியாதவர்களாகவே ஆக்கப் பட்டிருந்தார்கள், இன்றும் உலகம் முழுவதும் இதே நிலை தான்.
இன்று உலகில் ஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட நாடுகளை முஸ்லீம்கள் ஆட்சி செய்கிறார்கள் (இஸ்லாம் ஆட்சி செய்ய வில்லை) அவற்றில் ஒரு நாட்டையேனும் சுட்டிக்காட்டி இந்த நாடு அச்சுறுத்தலற்று இயங்குகிறது என்றுக் கூற முடியாத அளவுக்கு எல்லா இஸ்லாமிய நாடுகளும் மேற்கத்தியர்களின் நெருக்குதலில் வாழ்ந்து வருகிறது என்றால் மிகையாகாது.
இது தான் முஸ்லிம்களுடைய அன்றைய, இன்றைய வாழ்க்கையாக இருந்து வருகிறது முஸ்லீம்களுக்கு பாதுகாப்பான நிலையான வாழ்வு மறு உலகில் மட்டுமே அமையும் மறு உலகை நம்பிவாழும் முஸ்லீம்களுக்கு துனியா ஒரு அற்பமே !
அல்லாஹ் கூறுகிறான் : உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன் 6:32.
அறிவுப் பூர்வமாக சிந்திப்பார்களேயானால் இத்திருமணம் தமது அன்பு தோழர் அவர்கள் தோழர் எனும் அந்தஸ்த்திலிருந்து தம்முடன் இன்னும் நெருங்கிக் கொள்ள எண்ணியதை கருத்தில் கொண்டு அமைந்தவையேயாகும், மாறாக ஆறேழு வருடம் காத்திருந்து அடைந்து கொள்வோம் என்று திட்டம் தீட்டி பலருடைய போட்டிக்கிடையில் தனக்கு வேண்டுமென்று அமைத்துக் கொண்டதல்ல என்பதை மறுமை வாழ்வை நம்பாத உலக வாழ்வின் மீது மோகம் கொண்ட மேற்கத்தியர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
அல்லாஹ் கூறுகிறான் : நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: ''வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்;, அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும் அல்குர்ஆன் : 3:12
அல்லாஹ் நாடினால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய தியாகத்தின் அடிப்படையில் அமைந்த அடுத்த திருமணங்களையும் பார்ப்போம்
- அதிரை ஏ.எம்.பாரூக்
Saturday, May 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment