Saturday, May 27, 2006

முரண்பாடுகளைத் தெரிந்தது எப்படி?

பிஸ்மில்லாஹ்

அன்புச் சகோதரர் காதர் சுல்தான் (துறைமுகம் ஜித்தா) அவர்கள் கவனத்துக்கு,

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தாங்களின் 18-05-2006 நாளின் முரண்பாடுகள் ஏன்? ஏதற்கு? என்ற தலைப்பிட்ட ஈ மெயில் செய்திகளையும் அது இயக்கமே சாராத ஒருவராகிய உங்களால் தொகுக்கப்பட்டு இயக்கம் சாராத முக்கியஸ்தர்களுக்கு(?) அனுப்பப் பட்டதையும் கண்டேன். உண்மை நிலையை உணர்ந்து கொண்டேன்.

சகோ.பீ.ஜே. அவர்களை சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் விமர்சிக்கிறார் என்று கூறும் உங்களின் நிலைபாடு; நீங்கள் சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களை விமர்சிக்கும் போது உண்மை என்ன பாடுபடுகிறது? என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள்.

PRO P.J. (P.J. யின் ஆதரவு) நிலையை மிக ஆழமாகச் சிந்தித்து வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள் என அறிகிறேன். மேலும் சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்களுடன் நெருக்கத்தையும் பிரியத்தையும் வைத்துக் கொண்டு அவரிடம் காணும் குறைகளை நேரில் கூறுவதன் தயக்கம் உங்கள் மீது இயக்கச் சாயம் பட்டுவிடும் என்ற தூர நோக்கு சிந்தனை மிக அற்புதம்.

மேலும் சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களின் தஃவாவினால் பாதிப்படைந்தவர்களில் தாங்களும் ஒருவர் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். மேலும் சகோ.முஜீபுர் ரஹ்மான் அவர்களுக்கு நான் என்ற அகந்தை கூடிக்கொண்டு வருவதையும் ஒரு சாராரை ஒழிக்க அவர் கையாளும் முயற்சிகளைக் காண்பித்து அவர் எப்படி ஒரு நல்ல இஸ்லாமிய அழைப்பாளராக ஆக முடியும்? ஏன்ற அறிவுப்பூர்வமான கேள்வியை தொடுத்துள்ளது மிக மிக அற்புதம்.

மனங்களைப் புண்படுத்தாத மாசற்ற முரண்பாடுகளை உங்கள் மேலான கவனத்துக்கு தருகிறேன்.

துறைமுக நூலக பொறுப்பாளர் சகோ.சுல்தான் அவர்கள் தஃவா கமிட்டியை உடைக்கப் பார்க்கிறார் என்று அன்று சொன்னவர்கள் இன்று அவர் தஃவா செய்கிறார் அவரையும் தஃவா கமிட்டியில் சேர்க்கவேண்டும் என்ற செய்தியை அமானிதம் பேணி உங்கள் போன்ற இயக்கம் சாராத நல்லவர்கள் தமிழுலகுக்கு நெட்டில் தந்திருக்கும் நேர்த்தியை எண்ணி உங்களின் திறந்த மனமும் பரந்த உள்ளமும் பளிச்செனத் தெரிந்தது.

மேலும் இவ்விஷயத்தில் சகோ.முஜீபுர் ரஹ்மான் அவர்களை சம்மந்தப்படுத்தி இயக்கம் சாராதோருக்கு இனிப்புச் செய்தி வழங்கிய உங்களின் திறமையே திறமை. சகோ. சுல்தான் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை இயக்கச் சாயம் கொஞ்சம் கூட உங்கள் மீது பட்டுவிடாமல் பக்குவமாகச் சொல்லி நிலைமாறி விட்ட சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களின் தரத்தைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள்.

விடியல் வெள்ளி கூட்டத்தார் அன்று சென்டருக்கு வரத்தடை. இன்று பயான்களுக்கு கூட்டமில்லாத சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் யார் வேண்டுமானாலும் வாருங்கள். கொள்கை ஒரு பிரச்சினையே இல்லை என்றதுடன் விடியல் கூட்டத்தை தஃவா கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் அவரின் முரண்பாடு. இந்த சத்தியத்தை உலகுக்கு வெளிக்கொண்டு வந்த எல்லா திறமையும் உங்களையே சாரும்.

சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களை துறைமுகப் பகுதி தவிர எங்கும் பேச அனுமதி இல்லை என்று அன்று சொன்ன சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் இன்று விழுந்தடித்துக் கொண்டு சகோ. கோவை அய்யூப் அவர்கள் சகோ.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஆகியோர் நிகழ்ச்சிகளை நான் முன்னின்று நடத்துகிறேன் என்று சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்கள் தடம் புரண்டது. இயக்கம் சாராத உங்கள் கண்களில் ஜாக் என்ற இயக்கம் குர்ஆன் ஹதீஸை விட்டுத் தடுமாறியதைச் சரியாக கண்டுபிடித்து தமிழுலகுக்கு தந்த திறமை அற்புதமே.

ஜின்களை வசப்படுத்தக் கிளம்பிய டாக்டர் நுபார் அவர்கள் சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களை வசப்படுத்திய விந்தையையும் சென்டரில் பயான் செய்யும் பொறுப்பைப் பெற்றதையும் விளக்கி முரண்பாட்டின் மொத்த நிலையும் சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களிடம்தான் உள்ளது என்பதை கலை நயத்துடன் இக்குவலயத்துக்குத் தந்த சிறப்பு நிச்சயம் உங்களுக்கே.

தமிழ் வாழ் மக்களால் நடத்தப்படும் மெப்கோ அமைப்பை அன்று விமர்சித்த சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்கள் இன்று அவ்வியக்கம் நடத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பரிதாப நிலை. இப்படி முரண்பாடுகளைப் பட்டியலிட்டு உங்கள் இயக்கம் சாரா தன்மையை இப்பூவுலகோர்க்கு எடுத்துக்கூறியிருக்கிறீர்கள். உண்மையிலேயே இயக்கம் சாராத உங்கள் போன்றோர் நிலை பிறரை சிந்திக்கத்தூண்டுகிறது. அத்துடன் ஒவ்வொரு முரண்பாட்டுக்குப் பின்னரும் உண்மை நிலை என்று நீங்கள் தந்திருக்கும் விளக்கம் - மாறாத மக்களும் மாறி விட்ட மனிதரும் என்று கோர்வையாக முரண்பாடுகளைத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

இனி இந்த முரண்பாடுகள் இயக்கம் சாராத அதன் வாடையே பிடிக்காத உங்களுக்கு எப்படி தெரிய வந்தது என்பதைப் பார்ப்போம்.

சகோ. முஹம்மது நவ்ஃபர் அவர்கள் (ஜித்தா) சனாயா இஸ்லாமிக் சென்டரில் உரையாற்றும் போது சகோ. கமாலுத்தீன் மதனீ அவர்கள் சகோ. இக்பால் மதனீ அவர்கள் சகோ.பீ.ஜே.அவர்கள் ஆகியோர் மார்க்கத்துக்கு கடந்த 25 வருடங்களாக ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து அவர்களின் உழைப்பை தியாகத்தை யாரும் கொச்சைப் படுத்தலாகாது என்று கூறியதை சகோ. பீஜே.அவர்களை மாத்திரம் சொன்னது மட்டும் உங்கள் மனதில் பதிந்தது அதியற்புதம்.

அன்புச் சகோ.காதர் சுல்தான் அவர்களே சகோ. பீ.ஜே. அவர்கள் பற்றி சகோ.முஜீபுர் ரஹ்மான் அவர்கள் விமர்சிக்கும் செய்திகள் யாவும் மார்க்க அடிப்படையில் ஆனவையே. மார்க்கத்தில் ஆய்வுகளில் ஏற்படும் குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஒவ்வொரு மார்க்கம் அறிந்தவரின் கடமையே. பிறருக்கு அஞ்சாது அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் கற்றறிந்த மார்க்க அறிஞர்களே என்பது வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறும் அறிவுரை.

மார்க்கத்தில் விளக்கம் தருகிறேன் என்று கூறிக் கொண்டு தன் சுய விளக்கங்களை குர் ஆன் ஹதீஸூக்கு முரணாகச் சொல்வது யாராக இருந்தாலும் மாற்றுக் கருத்துக்களை விமர்சனங்களை எதிர் நோக்கித்தான் ஆக வேண்டும். இதில் நாம் விமர்சிக்கும் நபர் மார்க்க அறிஞர் மிகச்சிறந்த சிந்தனையாளர் அழைப்பாளர் ஆசிரியர் ஊர்க்காரர் உபகாரம் புரிந்த உறவுக்காரர் எழுத்தாளர் அறிவு ஜீவி ஆற்றல் மிக்கவர் என்றெல்லாம் பார்க்க கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த அன்ஸாரி நபித்தோழர்கள் ஹூனைன் போர் வெற்றிப் பொருள் பங்கீட்டில் நபி(ஸல்) அவர்களை விமர்சித்தது அதற்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த விளக்கத்தால் கண்ணீர் வழிந்தோட அன்ஸாரி நபித்தோழர்கள் அண்ணலாரின் அறிவுரையைப் பொருந்திக் கொண்டது- ஏகத்துவத்தை போதித்த ஏந்தல் நபிகளாரை குறைஷிய இணைவைப்பாளர்கள் குதர்க்கமான விமர்சனங்களைக் கொண்டு தூற்றிய போது நபி(ஸல்) அவர்கள் அதனை கையாண்ட முறை அல்லாஹ்வை யூதர்கள் விமர்சித்த போது அல்லாஹ்வின் அணுகுமுறை எப்படியிருந்தது? போன்ற விளக்கங்களை சனாயா சென்டரில் நிகழ்ந்த அதே நிகழ்ச்சியில் சகோ. பிஸ்மில்லாஹ்கான் ஃபைஜி அவர்கள் ஆற்றிய உரை உங்களுக்கு உணர்த்தவில்லையா?

சகோ.பீ.ஜெ.அவர்களைப் பற்றிய புகழாரம் மட்டும்தான் எனக்குப் பிடிக்கும். விமர்சனம் செய்வது பெரும்பாவம் எனக் கருதும் நீங்கள்தான் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் இயக்கம் சாராத மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறீர்கள். மார்க்க அடிப்படையில் நிகழக்கூடிய தவறுகளை யாரும் சுட்டிக்காட்டுவதாகயிருந்தால் விமர்சிப்பவர் விமர்சனத்துக்குறியவரை நேரில் கண்டு விமர்சனத்தைக்கூறி அவரைத் திருத்தி அவருடைய நன்றியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உங்களின் உத்தியைத்தான் சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் கடந்த காலங்களில் கடைபிடித்து வந்திருக்கிறார்கள் என்பதை துறைமுகம் குளோப் கேம்பில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மார்க்க விஷயங்களில் இவ்வாறு செயல்படுவதை மாற்றுத் தரப்பு எவ்வாறு எதிர்கொள்கிறது? என்பதை நன்கு உணர்ந்த பின்னரே பொதுமக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததை விளக்கினார்கள்.

இந்த நியாயமான எண்ணம் உங்களின் இயக்கம் சாரா நோக்கத்துக்கு இடையூறாக இருக்கலாம். இருப்பினும் சகோ. பீ.ஜே. அவர்களும் அவரைச் சார்ந்தோரும் யாரைப் பற்றி கீழ்த்தரமாக தரம்தாழ்ந்து விமர்சித்தாலும் பரவாயில்லை. சுகோ.பீ.ஜே. அவர்களை (தனிப்பட்ட முறையில் அல்ல) அவரின் மார்க்க விளக்கங்கள் தவறாக இருப்பின் விமர்சித்தால் உங்கள் போன்ற இயக்கம் சாராதோர் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் குதிப்பது வழக்கமாகி விட்டது.

தாங்களின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்ட எந்த முரண்பாட்டிலும் மார்க்கத்துக்கு முரணான எந்த செய்தியையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தந்து இது இப்படி தவறு எனச் சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்வதில் நியாயமிருக்கிறது. ஆனால் அன்றைய விரோத நோக்கம் என்றென்றும் இருக்க வேண்டும் என்பது மார்க்கத்துக்கு முரணானதாகும்.

இயக்க வெறியில் உழல்பவர்கள் கூறுவது போன்று அன்று வேண்டாதவர்கள் என்றால், என்றும் வேண்டாதவர்கள்தான் என்ற நிலைபாடு மார்க்க அடிப் படையில் முழுக்க முழுக்க தவறாகும். உங்களில் ஒருவர் தன் விசுவாசியான சகோதரருடன் பிணக்கம் கொண்டு 3 நாட்களுக்கு மேல் பேசாதிருக்க வேண்டாம். அவ்விருவரில் (பிணங்கியவர்களில்)எவர் மற்றவருக்கு முதலில் ஸலாம் சொல்லிவிடுகிறாரோ அவரே அவர்களில் சிறந்தவர் என்று நபி மொழிகள் நமக்குணர்த்தும்போது நீங்கள் குறிப்படும் முரண்பாட்டை எப்படி சரி காண்பது?. நம் சகோதர இயக்கத்தவர்களைக் கூட சராசரி முஸ்லீம்களாகப் பார்க்காமல் சண்டைக்காரர்களாகப் பாவிக்க மார்க்கத்தில் ஏதேனும் ஆதாரமுள்ளதா?. சற்று சிந்தியுங்கள்.

மேலும் மார்க்க ஆய்விலுள்ள சகோ.பீ.ஜே. அவர்களின் குறைகளை சென்னையிலுள்ள அவரிடம் சென்று பேசாமல் இங்கு மார்க்கம் அறியாத மாணவர்களிடம் விளக்கம் கூறி குழப்பத்தை ஏற்படுத்துவதாக குமுறியிருக்கிறிர்கள். மார்க்கத்தை அடிமுதல் நுனிவரை முற்றாக விளங்கி இயக்கம் சாராத உங்கள் கண்களுக்கு மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிய ஹதீஸ்களில் சிலவற்றை ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுடன் மோதுகிறது என்று கூறி மறுத்து வெளியிட்டுள்ள குறுந்தகடுகளை இங்குள்ள பாமர மக்களிடம் அறியாத மக்களிடம் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைப் பாய்ச்சும் நாசகார வேலையில் ஒருசாரார் ஈடுபட்ட போது உங்களின் இயக்கம் சாரா கண்களில் தென்படாமல் போன மர்மம் என்ன?.

நீதி பேணுதல் பற்றிய அருள்மறையின் வசனம் நன்றாக விளங்கித்தான் குறிப்பிட்டிருக்கிறீர்களா? என்று ஒருமுறை நன்கு சிந்தியுங்கள். எங்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பிற இயக்கத்தார் பேசும் மேடைகளில் பேச மாட்டார்கள் என்ற நிலைபாட்டை மார்க்கத்தில் ஒருபுறம் சொல்லிக் கொண்டு மத்ஹபுகளைப் பின்பற்றும் சாதாரண மார்க்க அறிஞர்களை விடத் தரம்தாழ்ந்து போய்விட்ட நபிவழிக்கு மாற்றமான ஒரு கூட்டத்தார்க்கு நீங்கள் போடும் பக்கவாத்தியம் உங்கள் இயக்கம் சாரா தன்மையையும் நீதி பேணும் மாண்பையும் வல்ல அல்லாஹ் உங்களுக்கு சரிவர உணர்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என எண்ணுகிறேன்.

மார்க்க அடிப்படையிலான சகோ. பீ.ஜே. அவர்களின் குர்ஆன் ஹதீஸூக்கு முரணான கருத்துக்களை நானும் விளக்கி மக்களிடம் எடுத்துக் கூறிவருகிறேன். அதுசம்மந்தமான விளக்கங்கள் உங்களுக்குத் தேவைப் பட்டால் எனது இந்த விளக்கத்துக்குப் பதில் தாருங்கள். முரண்பாடுகளை முறையே குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக உங்கள் மேலான கவனத்துக்கு தருகிறேன்.

ஓர் அன்பான வேண்டுகோள்!
குர்ஆனுடன் மோதும் ஹதீஸை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்களுடன் தொடர்பு படுத்தி அவரின் தாயார், மனைவி போன்றோரை மிகத் தரம் தாழ்ந்து பேசி தஃவா செய்கிறேன் என்று காழ்ப்புணர்வைத் தீர்த்துக் கொண்டது போல் வேறு யாரையும் பதம் பார்த்து விட வேண்டாம் என்று இயக்கம் சாரா உங்களையும் உங்களின் சகாக்களையும் கேட்டுக் கொள்கிறேன். (இங்குள்ள இயக்கம் சாரா தோழர்கள் அந்த அருவருப்பான விளக்கங்களை மக்கள் மத்தியில் பரப்பாமல் குறுந்தகடுகளை எடிட் செய்தது பாராட்டுக்குரியது.)

வல்ல அல்லாஹ் என்னையும் உங்களையும் நேர்வழி செலுத்தி சத்தியத்தை சரியாக உணர்ந்து அதன்படிச் செயல்பட்டு மறுமையில் சுவனப் பயனையடையும் பாக்கியவான்களாக ஆக்கி அருள் புரிவானாக.(ஆமீன்)

உங்களின் அன்புச் சகோதரன்,

நெல்லை இப்னு கலாம் ரசூல்
ஜித்தா, சவுதி அரேபியா
மொபைல் : 0562405948
மின்னஞ்சல்: haji7a@hotmail.com
வலைப்பதிவு: http://luluwalmarzan.blogspot.com

No comments: