அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பைக் காட்டியுள்ளார்கள்..
முதலமைச்சர் ஜெயலலிதா சீரமைத்ததாகக் கூறப்படும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினால் முஸ்லிம்களின் வாழ்வு ஒளிரப் போகிறது என சில திடீர் அரசியல்வாதிகள் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஆணையம் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை தெளிந்த நீரோடையாக மக்கள் உரிமைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்த சிறப்பு பேட்டியில் விவரிக்கிறார்.
கேள்வி: மார்ச் 1 அன்று தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான ஒரு ஆணை யத்தை புதுப்பித்திருக்கிறது. இந்த பிற்படுத் தப்பட்டோர் ஆணையம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்துவிடும், முஸ்லிம்களின் நீண்டகால ஜீவாதாரக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பரப்பப் படுகிறது. உண்மையிலேயே தமிழக அரசு புதுப்பித்துள்ள இந்த ஆணையம் முஸ்லிம் சமுதாயத்தின் ஜீவாதார கோரிக்கையை நிறைவேற்றுமா?
கி. வீரமணி: இந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நீதிபதி குமார ராஜரத்தினம் தலைமையில் இன்னும் சிலரை உறுப்பினர்களாகப் போட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் வழங்கிய ஆணையைப் பார்த்தால், அதிலே சிறுபான்மை சமுதாய மக்களால் நீண்டகால இடஒதுக்கீடு எங்களுக்குத் தேவை, எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் இல்லை, எங்கள் சமூகம் கீழாகச் செல்லக்கூடிய நிலை இருக்கிறது என்பதை அவர்கள் வலியுறுத்துகிற நேரத்தில், அழுத பிள்ளைக்கு நிலாவைக் காட்டுவது போல இதை அவர்கள் சொல்கிறார்கள். நான் அந்த ஆணையைப் பார்த்தேன். அதிலே, குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மையினருக்கோ, மற்ற சிறுபான்மையினருக்கோ இடஒதுக்கீடு செய்யப் படும் என்பதற்குரிய Terms of Reference அல்லது குறிப்புகளோ இல்லை.
அடுத்தபடியாக, இந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலமாகத்தான் இதைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. பொதுவாக இதை சொல்ல வேண்டுமானால், தனியே இதை செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. முதலாவதாக இந்த இடஒதுக்கீட்டை சிறுபான்மை சமுதாய மக்களாக இருக்கக்கூடிய இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்காகக் கேட்பது புதிதல்ல. ஏற்கனவே அவர்களுக்கு இருந்த சலுகை இடையிலே பறிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, பறிக்கப்பட்ட அந்த சலுகையை மீண்டும் அவர்கள் கேட்கிறார்கள் என்கிற வரலாறு ஆளுங்கட்சி உட்பட பலருக்குத் தெரியாது.
நீதிக்கட்சியினுடைய ஆட்சியிலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சியிலும் ஏற்பட்ட ஒன்று வகுப்புவாரி உரிமை. இந்த வகுப்புவாரி உரிமைதான் இந்த அரசியல் சட்டத்தில் சமூக நீதிக்கு வித்திட்ட ஒன்றாகும். அந்த வகுப்புவாரி உரிமை என்பதிலேயே எல்லாருக்கும் எல்லாமும் என்பதைப் போல முன்னேறிய ஜாதியினர் என சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் உட்பட சிறுபான்மை சமுதாயமாக உள்ள முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு இருந்திருக்கிறது.
மத்திய அரசுகளிலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே இருந்திருக்கிறது. எனவே இழந்த ஒன்றை, அதுவும் இடையில் இழந்த ஒன்றை தங்களது வாழ்வுரிமைக்காக, நான் ஏன் இந்த சொல்லை திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால், அவர்கள் (முஸ்லிம்கள்) மிகப்பெரிய அளவிலே நாங்கள் ஆள வேண்டும், மற்றவர்களையெல்லாம் (பெரும்பான்மையினரை) கீழே தள்ளிவிட்டு என்றுகூட அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் ஆளட்டும், நாங்கள் வாழ வேண் டும் என்ற அளவிலேயே கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதிலே தவறொன்றும் இல்லை. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழ்நிலை யில்தான் இந்த நியாயமான கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம் இந்த ஆட்சியினருக்கு இருந்திருக்குமா? அப்படி இருந்திருக்குமேயானால் அது ஆட்சிக்கு வந்த ஐந்தாவது ஆண்டு முடியப் போகிற நேரத்திலே, கடைசி மணியடித்த பிற்பாடு நாம் எல்லாம் முடிந்தது என்று சொல்லக்கூடிய நிலையிலே இதைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
1999-ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஜெயலலிதா தெளிவாக இரு விஷயங்களைச் சொன்னார். ஒன்று: பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார். மற்றொன்று: இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி நிச்சயமாக ஆவணம் செய்வேன் என்றார். இந்த இரண்டையும் அவர் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்தாரா? அல்லது மீறினாரா?
ஆங்கிலத்திலே ஒன்றைச் சொல்வார்கள். More observed in bleech can in practice என்று சொல்வார்கள். அதுமாதிரி அதை நடைமுறையில் சிதைத்துதான் இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து பாடம் கற்றார்கள். இப்போது தங்களோடு யாரும் வரவில்லை என்ற உடனேயே இஸ்லாமிய சமூகத்தின் மீது அவர்களுக்கு அக்கறை இருப்பதுபோல் நடிக்கிறார்கள்.
எனவே சொல்லுகிறவர்கள் எந்த சூழ்நிலையிலே, எந்த மனநிலையிலே சொல்லு கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஏமாற்றுகிறவர்கள் முயற்சி செய்யலாம். அது அவர்களுக்குத் தேவையாகவும் இருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் ஏமாறலாமா? காலங்காலமாக தமிழக வரலாற்றிலே சிறுபான்மையாக சமுதாய மக்களாக இருக்கக்கூடிய சிறுபான்மையிலேயே பெரும்பான்மை உள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அமைச்சராக இருந்திருக்கிறாரா இல்லையா? எவ்வளவு காலம் இருந்தார்? இப்போது ஏன் இல்லை?
ஜெயலலிதா ஆட்சியில் சிறுபான்மை சமூகத்திற்கு இடஒதுக்கீடு முதலில் அமைச் சரவையிலேயே இல்லையே. இடையில் போட்டார்கள், பிறகு வெளியே அனுப்பி விட்டார்கள். ஏன் அமைச்சராவதற்குரிய தகுதி இஸ்லாமிய சமுதாயத்தில் வேறு யாருக்கும் இல்லையா? இதையெல்லாம் மறந்துவிட்டு உடனடியாக 'எல்லாம் செய்துவிட்டார்கள்' என்று தங்களைத் தாங்களே ஒருசிலர் ஏன் ஏமாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு விளங்காத ஒன்றாக உள்ளது.
கேள்வி: தங்களுடைய கொள்கை அளவிலே ஏற்றுக் கொண்ட, தங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் ஏற்றுக் கொண்ட ஒரு செய்தியை நிறைவேற்றுவதற்கு ஐந்தாண்டு காலம் முடிந்து ஆட்சியினுடைய அந்திம காலத்திலே ஒரு ஆணையத்தை புதுப்பித் திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டீர்கள். அந்தக் காலத்திலேயே போடப்பட்டு, இப்போது புதுப்பிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் நிலை என்ன? சட்டம் பயின்றவர் என்ற முறையில் அதன் சட்டப்பூர்வமான நிலையை கூறுங்கள்?
கி. வீரமணி: நிச்சயமாக சர்ச்சையை உண்டாக்கும். அதிலே இரண்டு வகையான சர்ச்சை இருக்கிறது. இது தேர்தல் நேரத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒன்று. இந்த ஆணையம் அனைத்து முஸ்லிம்களும் பிற்படுத்தப் பட்டவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொண்டு இது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதா? அதிலே சில வேறுபட்ட வர்களும் இருக்கிறார்களா? எனவே இதுவே சிறுபான்மை நலக் கமிஷன் என்று இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை, அதனுடைய பங்கு பணியாக இது சுட்டிக்காட்டப்படவில்லை, அப்படி இருக்கையில் இதை மட்டும் எப்படி சொல் கிறீர்கள்? என்று இதையே ஒரு சட்டப்பிரச்சினையாக ஆக்கி வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு அதில் (ஆணையத்தில்) ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. எனவே, பசியில் அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பை காட்டுவதைப் போல இந்த ஆணையத்தை அமைத்துள்ளார்கள்.
பசியில் அழுகிற குழந்தைக்குத் தேவை பால்தானே தவிர, கிலுகிலுப்பை அல்ல. ஆகவே அதுதான் மிக முக்கியம். அவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை. ஏனோ அவர்களுக்கு மனமில்லை. ஏன் அவர்களுக்கு மனமில்லை என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறலாம்.
கேள்வி: எந்த வகையான ஆதாரங்களை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?
கி. வீரமணி: பாஜகவோடு அவர்கள் நேரடியாக கூட்டு சேர்ந்திருக்கிறார்களோ இல்லையோ, ஜெயலலிதாவினுடைய சிந்தனையும், செயல்பாடுகளும் அதனை நோக்கி எழுதப்படாத ஒரு உடன்பாடு போல்தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
இந்தியாவிலேயே மிகக் கொடுமையாக இந்துத்துவா என்று சொல்லக்கூடிய தத்துவத்தை ஒரு ஹிட்லரைப் போல நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஒரு இடம் உண்டு என்று சொன்னால் அது குஜராத் தான். குஜராத்திலே, மோடியுடைய ஆட்சியிலே பேக்கரி எரிப்பு வழக்கில் எப்படியெல்லாம் சாட்சிகள் கூட விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்று இன்றைக்கு உலகம் முழுவதும் எள்ளி நகையாடுகிறது. நல்லவேளையாக உச்சநீதிமன்றத்திலே இருந்த நீதிபதிகள் தலையிட்டதற்குப் பிறகு அந்த வழக்கை வேறொரு மாநிலத்திற்கு மாற்றி அங்கு வழக்கு நடந்த பொழுது அந்த வழக்கிலும் கூட சாட்சிகளைக் கலைத்து அவர்களை விலைக்கு வாங்குகிற வேலையெல்லாம் செய்தார்கள். பாவம் அப்பாவியாக இருந்த சாட்சி கள் சிறைச்சாலைக்குப் போயிருக்கிறார்களே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை. அப்படிப்பட்ட மோடி தன்னுடைய அத்துனை தில்லு முல்லுகள், அச்சுறுத்தல்களை செய்து, குந்தகம் விளைவித்து, தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். அதற்காக இந்தியாவிலேயே பிஜேபி அல்லாத ஒரே முதல்வராக ஜெயலலிதா மோடியின் பதவியேற்பில் கலந்து கொண்டு மோடிக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். வேறு எந்த முதலமைச்சரும் மோடியை வாழ்த்தவில்லை. ஆகவே, இதிலேயே ஜெயலலிதா தான் யார் என்பதைத் தெளிவாகக் காட்டிவிட்டார்.
அடுத்தபடியாக போப் இரண்டாம் ஜான்பால் வந்தார். போப்பை பொறுத்தவரையில் அண்ணா அவர்கள் கூட போப்பை சந்தித்தார்கள். எதற்காக வேண்டியென்றால், ஆசிர்வாதம் வாங்குவதற்காக அல்ல, மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய உயர்பதவியிலே அவர் இருந்தார் என்பதற்காகத்தான் அண்ணா அவரை சந்தித்தார். ஆனால் இன்று போப்பை பற்றி பிஜேபி என்ன நிலைப்பாடு எடுத்ததோ அதே நிலைப்பாட்டைத்தான் ஜெயலலிதா எடுத்தார்.
இன்னொரு விஷயம் போப் ஒரு மதத்தலைவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவர். அப்படிப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவரை தேவையில்லாமல் விமர்சனம் செய்தார். அவர் சிறுபான்மை சமுதாயத்தின் மதகுரு என்பதை மறந்துவிடுங்கள். இது நாகரீகமா? இது ஜெயலலிதாவின் மனப்போக்கையே காட்டுகிறது.
அதேபோல் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக இன்றைக்கு பானர்ஜி அறிக்கை வந்து அதைப் பொய்யென்று ஆக்கியுள்ளது. ஆனால் ஜெயலலிதா ரயில் எரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் "சிறுபான்மை மக்களைப் பற்றியே கவலைப்படும் தலைவர்கள் பெரும்பான்மை மக்களை மதிப்பதில்லை" என்றார். உடனே சோ போன்றவர்கள் ஜெயலலிதாவைப் பாராட்டினார்கள். இப்படியாக ஜெயலலிதா, தான் யார் என்பதை தெளிவாகவே உணர்த்தி வந்திருக்கிறார்.
அதேபோல், எங்களைப் போன்றவர்களெல்லாம் கடுமையாக எதிர்த்ததற்குப் பிறகும் 'மதமாற்ற தடைச் சட்ட'த்தைக் கொண்டு வந்தார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் படுதோல்வியை சந்தித்த பின்னரே அச்சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். ஆனாலும் வாபஸ் பெறவில்லை. அவசர சட்டம் நவம் பரில் காலாவதியாகி விட்டது. உடனே என்ன செய்திருக்க வேண்டும்? தெளிவாக சட்டமியற்றி இருக்க வேண்டும். சட்டமன்றத்திலே எத்தனை சட்டங்களை நிறை வேற்றியிருக்கிறார்கள். தங்களுக்கு வேண்டிய தனி நபர்களுக்குத் தேவையான 'ஆயுள் முழுவதும் பதவியில் நீடிக்கலாம்' என்பன போன்ற சட்டங்களை சட்ட மன்றத்திலே இயற்றினார்கள். இது செல்லாது என உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது வேறுவிஷயம்.
கேள்வி: இடைக்காலத்தில் மனமாற்றம் ஏற்படுவதற்கு தோல்வி தந்த பாடம் கூட உதவவில்லையா?
கி. வீரமணி: மனமாற்றம் கிடையாது. ஓட்டு எந்தளவு வந்துள்ளது என்பதில்தான் இந்த மாற்றம். ஒருவரைப் பற்றி அறிய அவருடைய செயல், சிந்தனையைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் சிந்தனை, செயல் எப்படிப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே ஜெயலலிதா ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் பழைய நிலைமைக்குப் போக மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இன்னொரு விஷயம். காந்தியைக் கொலை செய்த கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் என்பது வரலாறு. இதை கோட்சேயே தனது மரண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளான். கோட்சேயின் தம்பி கோபால் கோட்சேயும், தாங்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெளிவாகப் பேட்டியளித்திருக்கிறார். அப்படியிருக்க, கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்ற பிஜேபியினரின் கூற்றை ஜெயலலிதா நியாயப்படுத்தி, அதை தமிழக அரசின் பாடத்திட்டத்திலேயே மாற்றி அமைப்பதற்கு உதவுகிறார்.
அடுத்தபடியாக, பார்ப்பனர்களைப் பற்றி நீதிக் கட்சியின் வரலாறு பாடத்தில் சொல்லப்படுகிறது. வரலாறு சொல்லப்படுவதால் அந்த பாடத்திட்டதையே நீக்க வேண்டும் என பார்ப்பன சங்கம் உயர்கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதுகிறது. அங்கேயும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பார்ப்பன சங்கத்தின் மாநாட்டிலேயே ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். 'இந்த பாடத்திட்டத்தை நீக்கிவிட வேண்டும்' என்று தீர்மானம் போட்டு 'நாங்கள் உங்களை சங்கடப்படுத்தவில்லை' என்று தீர்மானம் போட்டார்கள்.
இதன் பொருள்: 'நாங்கள் உங்களை வலியுறுத்தவில்லை, நீங்களே அதை செய்து விடுங்கள்' என்று கூறுகிறார்கள். எனவே பார்ப்பனர்கள், ஆர்எஸ்எஸ், இந்துத் துவா என இதிலே அத்தனையும் சேர்ந்திருக்கிறது.
இன்னொரு விஷயம் சங்கராச்சாரியாரைக் கைது செய்ததன் மூலம் நாங்கள் எல்லோரையும் சமமாகத்தான் மதிப்போம் என்றார்கள். ஆனால் சங்கராச்சாரியார் கைது பற்றி எந்த பார்ப்பனரும் பேசுவதில்லை. அதில்தான் மர்மம் அடங்கி யிருக்கிறது. தேர்தலின்போது அது வெளிப்படும்.
கடந்த முறை நாங்களும் சேர்ந்துதான் அந்த அம்மையாரை ஆட்சியில் அமர்த்தி னோம். மதவெறி சக்திக்கு மாற்றாக நாம் அன்று எடுத்த முடிவு அது. இப்போதும் கூட நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் ஜெயலலிதாவை விமர்சிக்கிறோம். குன்றக்குடி அடிகளார் அற்புதமாக சொல்லுவார்: "தமிழனிடம் ஒரு குணம் இருக்கிறது. அவன் நேற்று விழுந்த அதே இடத்தில்தான் மீண்டும் விழுவான்" என்று. அதுபோலவே தற்போது ஜெயலலிதாவிடம் சேர்ந்தவர்களின் நிலையும் உள்ளது.
கேள்வி: கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்தவித மதவாத சாதிய மோதல் கள் நடைபெறவில்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்த காரணத்திற்காக இதை ஆதரிக்கலாம் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?
கி. வீரமணி: மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுத்ததற்கு காரணம் நம்மைப் போன்ற இயக்கங்களே தவிர சட்டம் அல்ல. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் கலவரம் நடந்தது. ஆனால் தமிழகத்தில் நடைபெறவில்லை. அதற்குக் காரணம் பெரியார் போன்ற தலைவர்கள் உருவாக்கிய மண். மகாத்மா காந்தி இறந்தபோது கூட பல இடங்களிலே கலவரம் நடந்தது. இங்கேயும் சில விஷமிகளால் வதந்தி பரப்பப்பட்டதே தவிர, கலவரம் நடைபெறவில்லை.
காந்தியை சுட்டுக் கொன்றவர் பார்ப்பனராக இருந்தாலும் இங்கே பார்ப்பனர்களுக் குக் கூட ஏதும் நடைபெறவில்லை. காரணம் இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டிருக் கிறது. எத்தனையோ மாநிலங்களில் மதக்கலவரங்கள் நடைபெறவில்லை. அங்கே யெல்லாம் நாங்கள்தான் ஆளுகிறோம் என்று சொல்ல முடியுமா? எனவே, மதக் கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மதங்களைப் பின்பற்றக்கூடிய மக்கள் காரணமே தவிர சட்டம் அல்ல.
கேள்வி: மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுப்பது இன்னொரு பாகிஸ்தானை உருவாக்கி விடும் என்று பா.ஜ.க. கூறிவருகிறது. இது அறிவுக்கு ஏற்புடையது தானா?
கி. வீரமணி: இங்கே மதத்திற்கு உள்ள உரிமை உண்டு. மதச்சிறுபான்மையினரை அங்கீகரித்திருக்கிறார்கள். எனவே மத உரிமை, மத சிறுபான்மையினர் என்று கூறும்போது அதை கலாச்சார ரீதியாகப் பார்க்க வேண்டும். ஆகவே வெறும் மதம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கொடுக்கக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறார்களே தவிர வேறொன்று மில்லை.
சிறுபான்மை மக்கள் மத்தியிலே அவர்களுக்கு மதம் என்பது ஒரு அடையாளமே தவிர அவர்கள் அந்த மதத்தில் பிறந்து விட்டதினால் இடஒதுக்கீடு கேட்க வில்லை. எங்கள் சமுதாயம் இவ்வளவு படிக்கவில்லை, கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளோம், எங்கள் சமுதாயத்திற்கு பசி இருக்கிறது, எனவே சோறு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு அடையாளமாகப் பயன்படுகிறதே தவிர, அந்த அடையாளத்தையே கொச்சைப்படுத்துவது தேவையற்ற ஒன்றாகும்.
கேள்வி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவிக்கு வந்தவுடன் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலே ஆணையத்தைப் போட்டார்கள், அதேபோல் ராஜேந்திர சச்சார் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவிலே அமைக்கப்பட்ட இந்த ஆணையம் தற்போது ஜெயலலிதா அமைத்துள்ள ஆணையத்தை விட வலிமை குறைந்தது என்று பிரச்சாரம் செய்யப் படுகிறதே?
கி. வீரமணி: இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் பெயரென்ன? அதன் Terms & Conditions என்ன? சிறுபான்மை ஆணையம் என்றுதான் தேசிய அளவில் போட்டிருக்கிறார்கள். அதன் நடவடிக்கையும் தற்போது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆணையம் காய்த்து, கனிந்து, பழம் போல் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா அமைத்த ஆணையம் இப்போதுதான் விதை போடப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் ஜெயலலிதாவை நம்புகிறவர்களை எச்சரிக்கத்தான் முடியும். தூங்குபவர்களைத்தான் எழுப்ப முடியுமே தவிர, தூங்குவதைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஆகவே அதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது? அதிலும் இஸ்லாமியர்களுக்கு கொடுப்பதற்கு இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. இன்னும் சொல்லப் போனால் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கே ஒரு ஆற்றலும் இல்லை, அதற்காக நாங்க ளெல்லாம் போராடிக் கிட்டிருக்கிறோம். இப்படியிருக்கையில், மாநில அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் மதிப்பு என்னவாக இருக்க முடியும்?
கேள்வி: பலமுறை தமிழக அரசை சந்தித்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்கும்பொழுது 69 சதவீததிற்கான இடஒதுக்கீடு வழக்கு இப்போது நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்ததும் அதுபற்றி பரிசீலிக்கலாம் என்ற பதிலை முதல்வர் தந்துள்ளார். ஆனால் இஸ்லாமியர்கள் கேட்பது 69 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பல்வேறு சாதியினரோடும் போட்டிவிட முடியாது என்பதால் அதனுள் உள் இடஒதுக்கீடு தரவேண்டும் எனக் கேட்கிறார்கள். இது சாத்தியமா?
கி. வீரமணி: மற்ற மாநிலங்களில் உள்ளபோது தமிழகத்தில் ஏன் கொடுக்கக் கூடாது? கேரளாவில் எவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை ஜெயலலிதா பார்வையிட வேண்டும். இந்த 69 சதவீத இடஒதுக்கீடு தனி சட்டமாக நிறை வேற்றப்பட்டிருக்கிறது. 9 அட்டவணை பாதுகாப்பிலே வைக்கப்பட்டு 76வது இந்திய சட்ட திருத்தமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம்தான் இதற்கான ஏற்பாட்டை செய்தது. அதனால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. ஆகவே இது சாக்குப் போக்கு ஆந்திராவில் கூட முறைப்படியாக இடஒதுக்கீடு கொடுக்கப் படவில்லை என்றுதான் சொல்ல முடிந்ததே தவிர, கொடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆகவே கொடுக்க நினைத்தால் உடனே கொடுக்க முடியும். அவர்கள் கொடுக்க விரும்பவில்லை.
கேள்வி: இடஒதுக்கீடு கொடுப்பதற்கு மாநில அரசிற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது பற்றி உங்கள் கருத்து?
கி. வீரமணி: இதை திராவிடர் கழகமும் வலியுறுத்துகிறது. இப்போதுள்ள 69 சதவீதம் நாளைக்கு 72 சதவீதமாக மாறலாம். மற்ற மாநிலங்களில் உள்ளது. ஏனென்றால் மண்டல் கமிஷன் தொடர்பாக 9 பேர் கொண்ட நீதிபதிகள் வழக்கு உச்சநீதிமன்றத்திலே நடந்தபொழுது பீஹார் மற்ற மாநிலங்களுக்கு ராம்ஜெத் மலானி வழக்கறிஞராக வாதாடினார். அப்போது நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர். ''நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் 100 சதவீதம் கேட்பீர்கள் போல் தெரிகிறதே'' என நீதிபதிகள் கேட்டனர். ''ஏன் கேட்கக்கூடாது?'' என ராம்ஜெத் மலானி கேட்டார். பல இடங்களில் வாழுகிற மக்கள் தொகை, கலாச்சாரம் மாநிலத் திற்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே, இடஒதுக்கீடு கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிற்கு வழங்குவதுதான் சரியானதாக இருக்கும். ஏனென்றால் இது ரொம்ப நாளைக்கு தேவைப்படுவதாக உள்ளது. இது சமூகநீதிக்கு ரொம்ப முக்கியம். சமூகநீதி சட்டங்களெல்லாம் 9 அட்டவணையிலே வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ, தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ போதிய பிரதிநிதித்துவம் கிடையாது.
மற்றவர்களாவது நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கூட நீதிபதியாக இல்லை. இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரே ஒருவர்தான் இருந்தார். அவர் ரத்தினவேல் பாண்டியன். அவருக்குப் பின்னால் இதுவரையில் யாரும் நீதிபதியாக இல்லை. மாவட்ட அளவிலே நீதிபதியாக இருக்க அனுமதிக்கப்படக்கூடிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றப் பதவிகளிலே அனுமதிக்கப்படுவதில்லை. எனவே இடஒதுக்கீடு என்பதே நீதிமன்ற வளாகத்திலிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்.
கேள்வி: ராஜேந்திர சச்சார் தலைமையிலே உள்ள உயர்மட்டக்குழு ராணுவத்தில் முஸ்லிம்கள் கணக்கெடுப்பு நடத்துகிறது. விமானப்படை, கப்பற்படை கணக்கெ டுப்பை கொடுத்துவிட்ட நிலையில் தரைப்படை அந்த எண்ணிக்கையைத் தர மறுக்கிறது. இதுபற்றி சர்ச்சை எழுந்துள்ளதே.. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
கி. வீரமணி: கணக்கெடுப்பு நடத்துவதால் எந்த விளைவும் வரப்போவதில்லை. இருப்பதைத்தான் கணக்கெடுக்கிறார்கள். இது பெரிய நிகழ்வே அல்ல. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எந்த விதத்திலும் முன்னேறக் கூடாது என்பதால் பதறுகிறார்கள். அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் தான் இதுபோன்ற பதற்றத்திலும், குழப்பத்திலும் ஈடுபடுகிறார்கள். இந்த கணக் கெடுப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது அல்ல. இந்தியா இந்துத்துவா நாடாக வேண்டும் என்ற கோல்வால்க்கரின் கூற்றை ஆதரிப்பவர்கள்தான் கொக்கரிக் கிறார்கள்.
கேள்வி: வரக்கூடிய தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் நீங்கள் அந்த மக்களுக்கு விடுக்கக்கூடிய செய்தி என்ன?
கி. வீரமணி: வரக்கூடிய தேர்தலில் நண்பன் யார்? எதிரி யார்? என்று பிரித்துப் பார்த்து தெளிவாக செயல்பட வேண்டும். முஸ்லிம்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். உங்களை நினைக்காமல் உங்கள் சந்ததியரை நினைக்க வேண்டும்.
சந்திப்பு: ஹாஜாகனி, தொகுப்பு : அனீஸ்
நன்றி: www.tmmkonline.org
Sunday, April 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment