Wednesday, April 12, 2006

தேர்தல் சிந்தனை -Dr T.S.ஜாஃபர் சாதிக்

நன்றி: நாகூர் ரூமியின் தமிழோவியம் வலைப்பதிவு

கண்ணியமிக்க இமாம் / முத்தவல்லி / நகர முக்கியஸ்தர் அவர்களின் மேலான சமூகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும். முஸ்லிம் சமுதாயம் இன்று நல்ல முறையில் வழிகாட்டக் கூடிய ஒரு தலைமைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொள்ளக் கூடிய ஒரு தன்னிகரற்ற தலைமையை யாரால் தர முடியும்?

மஹல்லா அளவிலும் நகர அளவிலும் அதன் தொடர்ச்சியாக தமிழக அளவிலும் ஒருங்கிணையும் மஸ்ஜித் இமாம்களின் கூட்டமைப்பும் சமுதாயத்தின்மீது அக்கறை எடுத்துக்கொள்வதற்காக ஒருங்கிணையும்போது அத்தகைய ஒரு தலைமை உருவாக முடியும். அந்தத் தலைமை மட்டுமே அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரம் பெற்ற / சமுதாயத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமையாக ஆகமுடியும். முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க - சமூக - அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் அந்தத் தலைமையின் மூலமாக மட்டுமே நடக்க வேண்டும். அத்தகைய ஒரு தலைமை தோன்றுவத்ற்காக் அல்லாஹுத்த்ஆலா எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளான். ஆனால் அதற்காக தமிழ்க மஸ்ஜித்களின் இமாம்களும் முத்தவல்லிகளும் நகர முக்கியஸ்தர்களும் இதுவரை ஏதாவது முயற்சியை மேற்கொண்டார்களா? இல்லையெனில், அத்தகைய ஒரு தலைமையை போர்க்கால முயற்சியாக உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அரசியல் களத்தில் இன்று ஒவ்வொரு குழுவும் கோபுர அளவுக்கு உயர்ந்து நிற்கும்போது, முஸ்லிம் அரசியல் தலைமைகள் மட்டும் கைகளில் திருவோட்டை ஏந்தியவைகளாக வாயிற்படிகளில் காத்துக் கிடந்தன என்பதை நாம் வேதனையுடன் பார்த்தோம். பல கோடி மக்களைக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்து ஏங்குவதைப் போல, தாழ்விலும் தாழ்வாக தற்போது முச்சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏனிந்த அவலம்?

அல்லாஹுத்த்ஆலா பொருந்திக் கொள்ளும் அதிகாரப்பூர்வமான முறையில் முஸ்லிம் சமுதாயம் ஒருங்கிணையாததே இந்த அவலத்திற்குக் காரணம். இயலாமையில் விடப்பட்டுள்ள இமாம்களும், அலட்சியமாக இருக்கும் முத்தவல்லிகளும், இதைப்பற்றிய எண்ணமே இல்லாமலிருக்கும் நகர முக்கியஸ்தர்களும் விழிப்புணர்வு பெற்றுத் தமிழக அளவில் துரிதமாக ஒருங்கிணைந்தாலன்றி அவலத்திற்கு மேல் இழிவையும் முஸ்லிம் சமுதாயம் எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டி வரலாம். அல்லாஹுத்த்ஆலா பாதுகாப்பானாக.

இத்துடன் தேர்தல் சிந்தனை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன். உடனடியாக ஆவன் செய்யுங்கள்.

தேர்தல் சிந்தனை

சேவல் சண்டையைப் பார்த்திருப்பீர்கள். ஆக்ரோஷமாக மோதவிடப்படும் இரண்டு சேவல்களும் கத்திக்குத்துப் பட்டு மயங்கி விழும். கத்திகள் அவற்றின் வயிற்றுக்குள் சமாதியாகும். இனி அங்கு சேவல்கள் இருக்காது. சுற்றி நிற்போர் அதைப்பார்த்து ரசித்து கைகொட்டிச் சிரிப்பர்.

நீங்கள் ஒரே சமுதாயத்தினர். நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள். -- இது முஸ்லிம் சமுதாயத்தைப் பார்த்து திருமறை கூறும் இறைவாக்கு.

ஒன்று என்ற இறைக்கோட்பாட்டிற்கு மாறாக, முஸ்லிம் சமுதாயம் பல கட்சிகளாகவோ, அல்லது இரண்டாகவோ பிரிந்துகொள்ள முடியுமா? அது இறைவனிடம் வரம்பு மீறும் செயல். வரம்பு மீறுபவர்களை அல்லாஹுத்த்ஆலா தடயமின்று அப்புறப்படுத்திவிடுகிறான்.

தமிழகத்தில் இன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் பலவாறாகப் பிரிந்திருப்பது அல்லாஹுத்த்ஆலாவிடம் வரம்பு மீறிய செயல். அவர்கள் இரு கட்சிகளுக்குள் பிரிந்து நிற்பது தடயமின்றி அழிந்து போகும் செயல். அந்த இரு சேவல்களைப் போல!

சிந்திப்பதற்குச் சில கேள்விகள்

இரு பெரும் முஸ்லிம் கட்சிகள் இரண்டு எதிர்க்கட்சிகளுக்குள் சங்கமமாகி ஒன்றுக்கொன்று நேர் எதிராக (வாணியம்பாடி) கத்தி கட்டப்பட்ட சேவல்க்ளைப் போல மோதிக்கொள்வதும், சுற்றி இருப்போர் கைகொட்டிச் சிரிப்பதும் முஸ்லிம் சமுதாயத்துக்குப் பெருமையா கேவலமா?

அந்தத் தொகுதியில் வாழும் முஸ்லிம் சமுதாயம் தன்னை அரசியல் கட்சிகள் கேவலப்படுத்துவதை அனுமதித்துக் கொண்டு ஒரு ஏமாளியைப் போல வாளாவிருக்க முடியுமா?

'இவர்கள் மேன்மையான சமுதாயத்தினர்' என்று நமக்கு சான்றிதழ் வழங்கும் அல்லாஹுத்த்ஆலாவின் கூற்றை நாம் நம்புகிறோமா? நிராகரிக்கிறோமா?

மேன்மையான சமுதாயமாக உருவாக வேண்டிய நமது உண்மையான தலைமை எது?

இந்தக் கேள்விகளை மஹல்லாவில் இருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் எண்ணீப் பார்க்க வேண்டும். தம்மீது திணிக்கப்பட்டுள்ள கேவலத்தை அகற்றுவதற்கும், தன் மீது விதிக்கப்பட்டுள்ள மேன்மையான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் முன்வர வேண்டும். அதற்காக அவர்கள் அல்லாஹுத்தஆலா அங்கீகரிக்கும் ஒரே தலைமையை உருவாக்கிக் கொள்வதற்கு விழிப்புணர்வு பெற வேண்டும்.

அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரத்தைப் பெறும் அத்தகையை ஒரே தலைமை எது? அது, ஒவ்வொரு மஹல்லாவிலும் மஸ்ஜித் இமாமும் முத்தவல்லியும் ஒருங்கிணைவதன் மூலமும்,அதனைத் தொடர்ந்து அவர்கள் நகர அளவில், மாநில அளவில் என ஒரே தலைமையின் கீழ் ஒருமைப்படுவதன் மூலமும் உருவாகிறது.

இந்தத் தலைமை மட்டுமே சமுதாயத்தின் மார்க்க, சமூக,பொருளாதார வளர்ச்சிப் பணிகளுக்கும், அரசியல் பணிகளுக்கும் அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரத்தைப் பெறும் தலைமையாகும். அத்தகைய ஒரு தலைமையை உருவாக்கிக் கொள்வதால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் இன்று தனக்கு நேர்ந்துள்ள கேவலத்தை அகற்ற முடியும். மேன்மையான சமுதாயமாக உருவாக முடியும்.

அத்தகைய ஒரு தலைமை இன்று உருவாகியிருக்கிறதா?

இல்லை. எனவேதான் மார்க்கப் பணிகள் பல ஜமாஅத்களிடம் பிரிந்திருக்கின்றன. சமூக,பொருளாதாராப் பணிகள் பல தொண்டு இயக்கங்களிடம் விரிந்திருக்கின்றன. சமுதாயத்திற்கென உருவாக வேண்டிய ஒரே அரசியல் தலைமை பல கட்சிகளிடம் சிதைந்திருக்கிறது.

மேலே விவரித்தது போன்ற ஒரு தலைமையை போர்க்கால அடிப்படையில் வாணியம்பாடியில் உருவாக்க வேண்டிய கட்டாயத்தை அங்கு வாழும் முஸ்லிம்கள்மீது அல்லாஹ் இன்று சுமத்தியுள்ளான். கீழ்க்காணும் தீர்வுகளில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்:

1. நேருக்கு நேர் மோதும் இரண்டு அரசியல் கட்சிகளையும் தொடர்பு கொண்டு உங்கள் வேட்பாளர்களை விலக்கிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட வேண்டும். அவ்வாறு விளக்கிக்கொள்ள வேண்டும் என்ற் சமுதாய உணர்வை அவ்விரண்டு கட்சிகளின் தலைமைகளும் பெற வேண்டும்.அந்த இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் சுயேட்சையாக அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரம் பெற்ற சமுதாயத் தலைமையின் பிரதிநிதியாக களத்தில் நிற்க வேண்டும். இதற்கு அவர்கள் உடன்பட மறுத்தால் --

2. அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரம் பெற்ற முஸ்லிம் தலைமை தமது தொகுதி வாக்குச் சீட்டில் வாக்களிக்க விருப்பமில்லை என்ற கலத்தில் முத்திரை குத்துமாறு மஸ்ஜித்களின் வாயிலாக சமுதாய மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். இதற்குரிய தைரியத்தைப் பெற வேண்டியது அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரத்தைப் பெற்ற சமுதாயத் தலைமையின்மீது காலத்தின் கட்டாயமாகும்.

குறிப்பு : பாளையங் கோட்டையிலும் அரவக் குறிச்சியிலும் சமுதாயம் அங்கு நிற்கும் முஸ்லிம் லீக்கை ஆதரிக்க வேண்டும்.

மீதமுள்ள 230 தொகுதிகளில் முஸ்லிம் சமுதாயம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய தேர்தல் சூழல் ஐந்து முனைப் போட்டியாக வடிவெடுத்திருக்கிறது. இது ஆறு முனைப் போட்டியாக ஆவதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நகரிலும் இமாம் மஸ்ஜித் நிர்வாகிகளைக் கொண்டு அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரத்தைப் பெற்ற தலைமையை போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும். நகரங்களின் தலைமைகள் மாநில அளவில் ஒருங்கிணைய வேண்டும். அந்தத் தலைமை ஒவ்வொரு தொகுதியிலும் தனது வேட்பாளரைக் களத்தில் இறக்க வேண்டும். அதற்குப் பின் அவர்கள் எந்த வேலையையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. களத்தில் வேட்பாளர்க்ள் இறக்கப்பட்ட செய்தியை ஜும்ஆப் பிரசங்கம் மூலம் சமுதாயத்துக்கு அறிவித்தால் போதும். மற்ற வேலைகளை அல்லாஹுத்த்ஆலா பார்த்துக்கொள்வான். அடுத்த சட்ட மன்றத்தில் ஆட்சியிலேயே பங்கு கொடுக்க அவன் போதுமானவனாக இருப்பான்.

நினைவுறுத்தல்

சென்னையில் வசிக்கும் ஒரு விஜயகாந்த தமிழகம் முழுவதும் 234 தொகுதிக்ளில் நிற்கும் தைரியத்தைப் பெற்றுள்ளபோது தமிழகம் முழுவதும் பரவியுள்ள முஸ்லிம் சமுதாயம் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே தலைமையின்கீழ் நிற்கும் தைரியத்தைப் பெற முடியாதா? நீங்கள் 100 பேர் ஒன்று சேர்ந்தால் 200 மலக்குகளைக் கொண்டு உதவி செய்வேன் என்று அல்லாஹுத்த்ஆலாவால் வாக்களிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் நிச்சயமாக அனைத்துத் தொகுதிகளிலும் நிற்கும் தைரியத்தைப் பெற வேண்டும்.

ஒரே தலைமையின்கீழ் சமுதாயம் ஒருங்கிணைய அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புதான் இந்தத் தேர்தல். இதை சமுதாயம் உதாசீனப் படுத்திவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் அருள் புரிவானாக!

முஸ்லிம் சமுதாயத்துக்காக

இறுதியாக முஸ்லிம் சமுதாயத்திற்காகவும், மஹல்லாவின் மஸ்ஜித் தலைமைகளுக்காகவும் சில இறைவசனங்களை நினைவுபடுத்துகிறேன்:

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை மிகைப்பவர் எவருமில்லை. உங்களை அவன் விட்டுவிட்டாலோ உங்களுக்கு உதவி செய்வோர் யார்? விசுவாசிகள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும் (3:160)

மஹல்லா மஸ்ஜித் தலைமைக்காக

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையை நிலைநாட்டி ஜக்காத்தைக் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவருக்கு அஞ்சாதவர் மட்டுமே அல்லாஹ்வுடைய மஸ்ஜித்களை பரிபாலனம் செய்யக் கூடியவர்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் (9:18)

இருவருக்குமாக

நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். உங்கள்மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள் (3:103)

நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மையடைவீர்கள். (3:139)

டாக்டர் T.S.ஜாஃபர் சாதிக்
சாந்தம் பிரச்சார அறக்கட்டளையின்
சமூக நல, சமய நல்லிணக்க, மனிதகுல அமைதி விழிப்பூட்டு இயக்கம்
வாணியம்பாடி.


இப்பதிவை முழுமையாக படிக்க இங்கு சொடுக்கவும்

1 comment:

Abu Umar said...

நாகூர் ரூமி அவர்களின் வலைப்பதிவுக்கு தொடுப்பு மட்டும் கொடுக்கலாம் என்றிருந்தேன். ஆனால் அவரின் பதிவின் இறுதியில் யுனிகோடு எழுத்துகள் படிக்கமுடியாத நிலையில் இருக்கிறது. ஆகவே பதிவின் முக்கிய விஷயத்தை (அதன் ஃபார்மேட்டை நீக்கி) இங்கு பதிகிறேன்.