Saturday, April 08, 2006

முஸ்லிம்கள் யார் பக்கம் ?- ஜூனியர் விகடன்முஸ்லிம்கள் யார் பக்கம்? தேர்தல் விளையாட்டில் இட ஒதுக்கீடு?


திருமணத்துக்குத் தாலி என்பது போல், அரசியல் கூட்டணி என்றால் ஒரு முஸ்லிம் இயக்கம் அதில் இருக்க வேண்டும் என்பது தமிழகத்தில் பலகாலமாகவே வழக்கத்தில் இருக்கிறது. முஸ்லிம்களைத் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக கருதுவதால், முஸ்லிம் இயக்கத்தினர் மீது அரசியல்வாதிகள் தனிப் பாசம் காட்டுவதும், இஃப்தார் விருந்துகளில் வலியப்போய் பங்கேற்று, தொப்பிப் போட்டுக் கஞ்சிக் குடிப்பதும் நடக்கும். எல்லாமே ஓட்டுக்காகத்தான்!

ஆனால், இன்றைய நிலவரப்படி முஸ்லிம் சமூகத்துக்கு முன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே சாயம் வெளுத்து நிற்கின்றன என்பதுதான் உண்மை. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரண்டு கட்சிகளுமே பெரிதாகக் கண்டுகொள்ளாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் தூசு தட்டுவதால், பொதுவாகவே இரண்டு இயக்கங்கள் மீதும் இந்த சமூகத்தினருக்குத் தாளாத கோபம் இருக்கிறது. மேடைபோட்டு அவ்வப்போது அதை அவர்கள் காட்டவும் தவறவில்லை. இதை வைத்தே... த.மு.மு.க. எனப்படும் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழக தவ்ஹீத் ஜமா&அத் ஆகிய இரண்டு அமைப்புகள், தங்கள் பக்கம் முஸ்லிம் மக்களைத் திரட்டி வைத்திருக்கின்றன. தேர்தலில் போட்டியிடாதவை, இந்த இரண்டு இயக்கங்களும். அதனால், இந்தத் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை இந்த இயக்கங்கள் எடுக்கக் கூடும் என்ற பேச்சிருந்தது. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. என்று ஆளுக்கொரு பக்கமாக இந்த இரண்டு இயக்கங்களும் சாய்ந்துவிட்டன. ஏன் ஆதரிக்கிறோம் என்பதற்கு ஏகப்பட்ட காரணங்களை இரண்டு இயக்கங்களுமே தங்கள் சமூக மக்களிடம் பட்டியல் போட்டபடியிருக்கின்றன. இதற்கெல் லாம் எந்த அளவுக்குப் பலன் இருக்கும்? முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்கப் போகி றார்கள்? என்ற கேள்விகளோடு, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களிடமே கேட்டோம்.

முதலில் இஸ்லாமிய எழுத்தாளர் ஒருவரிடம் பேசினோம். அவர், ‘‘அண்ணா காலத்தில் முஸ்லிம் லீக்கின் தலைவராக இருந்த காயிதே மில்லத், தி.மு.க&வோடு கூட்டணி அமைத்துத் தேர்தல்களை சந்தித்தார். அவருக்குப் பிறகு அப்துல் சமதுவும், லத்தீப்பும் முஸ்லிம் லீக்கை வழி நடத்தினார்கள். லத்தீப் தனியாகப் பிரிந்துபோய் தேசிய லீக் கட்சியை நடத்தினார். இருவருமே இரண்டு திராவிடக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ§டன் கூட்டணி அமைத்துத் தேர்தல்களை சந்தித்தனர். பல காலமாக இதுதான் முஸ்லிம் இயக்கங்களின் நிலையாக இருந்தது.

ஆனால், 1991&ல் பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னால் முஸ்லிம் மக்களிடம் ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் முஸ்லிம் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் இருந்தால் போதும் என்கிற நிலை மாறியது. 1999&ல் இட ஒதுக்கீடு கேட்டு சென்னை கடற்கரையில் பிரமாண்டமான வாழ்வுரிமை மாநாடு நடத்தியது, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம். அதன் பின்னரே இடதுக்கீடு விஷயம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து, இன்றைக்கு அரசியல் கட்சிகளுக்கு சரியான நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு இந்த விஷயம் வளர்ந்திருக்கிறது’’ என்றார் அவர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகத்தில் லெப்பை (மரைக்காயர், ராவுத்தர் உட்பட), அன்சார், தக்னி, ஷேக், செய்யது என்ற ஐந்து பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் வருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் 69 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முஸ்லிம்களை மட்டும் தனியாகப் பிரித்து உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கை. தமிழக மக்கள் தொகையில் 13 சதவிகிதம் முஸ்லிம்கள் இருப்பதால், அதே அளவுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.

ஆந்திராவில் 2004 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், முஸ்லிம்களுக்கு தனி இடதுக்கீட்டை அறிவித்தது காங்கிரஸ் (இந்த உத்தரவினை பின்னர் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது). சமீபத்தில் பாண்டிச்சேரியில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சேர்த்து 13 சதவிகித தனி இடஒதுக்கீட்டை அறிவித்தார்கள். இதனால் இப்பொழுது முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்கவே பலம் பெற்றுள்ளது.

இந்தச் சூழலில், தவ்ஹீத் ஜமா&அத்தின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீனிடம் முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பது குறித்துப் பேசினோம். ‘‘முஸ்லிம்கள் இன்றைக் கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் பின்தங் கிய சமுதாயமாகவே இருக்கிறார்கள். அதனால்தான் தனி இட ஒதுக்கீட்டை முன் வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவெடுத்தோம். ஒவ்வொரு தேர்தலிலும் இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்து வருகிறோம். ஆனால், தேர்தல் முடிந்ததும் அரசியல் கட்சிகள் எங்களை ஏமாற்றி விடுகின்றன.
சமீபத்தில் கும்பகோணத்தில் நாங்கள் நடத்திய மாநாட்டில் ‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு செய்வோம் என்று முதலில் யார் அறிவிக்கிறார்களோ அவர்களுக்குதான் எங்கள் ஆதரவு’ என்று தீர்மானம் போட்டோம். அதையடுத்து, இடஒதுக்கீடு செய்வது தொடர்பாக கமிஷனை நியமித்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. அதனால் அவர்களுக்குதான் எங்கள் ஆதரவு’’ என்று சொன்னார்.
‘‘ஆட்சி முடியும் தறுவாயில் கமிஷனை போட்டிருக்கிறது இந்த அரசு. இதன் அறிக்கை வருவதற்கு ஒரு வருடம் ஆகலாம். இதை நம்பி எப்படி ஆதரவு தந்தீர்கள்?’’ என்ற கேள்வியை எழுப்பினோம்.

‘‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடுக்கான அடித்தளமாவது அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. அதற்கான விதை இப்போது தூவப்பட்டிருக்கிறது. அடுத்துவரும் ஆட்சியாளர்கள் இந்த கமிஷனை கிடப்பில் போட்டால் சிறுபான்மையினர் மீது அவர்கள் காட்டும் பாசம் வெறும் வேஷம் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிடும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், இடஒதுக்கீட்டுக்காக மத்திய அரசை அவர்கள் வலியுறுத்த தவறிவிட்டார்கள். அந்தந்த மாநிலங்களே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை நிர்ணயித்துக்கொள்ள வழி செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் என்பதைக்கூட தி.மு.க. வலியுறுத்தவில்லை. சேது சமுத்திரத் திட்டம், தமிழ் செம்மொழி என்று மத்திய அரசிடம் கேட்டு வாங்க முடிந்த கருணாநிதியால் இதைக்கூட செய்ய முடியவில்லைÕÕ என்று குற்றச்சாட்டுக்களை வீசியவர்,
ÔÔபாண்டிச்சேரியில் காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்திருப்பதால், அங்கே தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம்’’ என்று தங்களது நிலைப்பாட்டை எடுத்துவைத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே தி.மு.க. கூட்டணியில் தோழமைக் கட்சியாக இருந்து வருகிறது த.மு.மு.க. இதன் தலைவர் ஜவாஹிருல்லா என்ன சொல்கிறார்? ‘‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அ.தி.மு.க வழங்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்தே செய்தி பரப்பினார்கள். உடனே இடஒதுக்கீடு கோரிக்கையோடு, குண்டு வெடிப்பில் கைதான அப்பாவி முஸ்லிம்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தோம். ‘தேர்தலில் எங்கள் அமைப்பு போட்டியிடுவது கிடையாது. அதனால் உங்களிடம் ஸீட் எதுவும் கேட்கமாட்டோம். கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தால் ஆதரவு தருகிறோம்’ என்று சொன்னோம். அ.தி.மு.க அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, அந்தக் கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரையில் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பின்னால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட சமயத்தில் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடஒதுக்கீட்டை சேர்த்தார்கள். மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் இருக்கிறது. அதற்கான பணிகளை அவர்கள் துவக்கி விட்டார்கள். மத, மொழி சிறுபான்மையினருக்காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ரஜீந்தர் சச்சார் தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்கிறது. அரசுத் துறைகளில் முஸ்லிம்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை இந்த கமிட்டி கணக்கெடுத்து வருகிறது. கமிட்டி தரும் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு விரைவில் சட்டம் நிறைவேற்றும்.

ஆனால், அ.தி.மு.க. சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வந்த நேரத்தில் ஜெயலலிதா, ‘இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டும்தான் சிறுபான்மையினராக இருக்கிறார்களா?’ என்று கேள்வி எழுப்பினார். இதை வைத்தே அவருக்கு முஸ்லிம்கள் மீது அக்கறை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதோடு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தார்... அதை வாபஸ் வாங்கிவிட்டதாக ஜெயலலிதா அறிவித்தாலும், அது இன்னும் நடைமுறையில்தான் இருக்கிறது. அதனால் இந்தத் தேர்தலில் நாங்கள் தி.மு.க&காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவெடுத்தோம். தேர்தலிலும் கடும் பிரசாரம் செய்வோம்’’ என்றார் ஜவாஹிருல்லா.

முஸ்லிம் கட்சிகளில் நூறாண்டு கண்ட இயக்கமான முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது. அதேசமயம் தேசிய லீக் கட்சி, அ.தி.மு.க. கூட்டணியில் களம் காண்கிறது. இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தல் பாதையில் இருக்கும் கட்சிகள். மாநிலம் முழுக்கவே பரவலாக ஆதரவை பெற்றிருக்கும் இந்தக் கட்சிகளின் வாக்குகள் சந்தேகமில்லாமல் சம்பந்தப்பட்ட அணிக்குதான் போகும். அதேசமயம், பொதுவாக இருக்கும் மக்களின் மனநிலை என்ன என்பதுதான் முக்கியம்!

இஸ்லாமிய எழுத்தாளரான உமறு புலவருக்கு மணிமண்ட பம் கட்ட உத்தரவிட்டிருப்பது, ஜெயலலிதாவுக்கு நல்லபெயர் வாங்கிக் கொடுத்தாலும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யாதது, அமைச்சரவையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்காதது போன்ற பிரச்னைகள் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. தேர்தல் நெருங்கும் சமயத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கமிஷன் போட்டதும் ஓட்டுகள் வாங்கதான் என்கிற குரல்களும் கேட்காமல் இல்லை.

இதுபோன்ற விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒவ்வொரு பகுதிகளில் இருக்கும் Ôஜமா&அத்Õ எடுக்கும் முடிவுக்குதான் அந்தப் பகுதி முஸ்லிம்கள் கட்டுப்படுவார்கள். இந்த ஜமா&அத்கள் யாருக்கு வாக்களிக்க முடிவு எடுக்கப் போகிறார்களோ அவர்களுக்குதான் முஸ்லிம்கள் ஓட்டுகள் விழும் என்பது மறுக்க முடியாத உண்மை.

எம்.பரக்கத் அலி
படங்கள்: கே.கார்த்திகேயன், வி.செந்தில்குமார்

நன்றி: ஜூனியர் விகடன்

No comments: