தி.மு.க., முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை
கரூர் மாவட்ட பிரச்சாரத்தில் வைகோ குற்றச்சாட்டு
கரூர்: "தி.மு.க., என்றுமே முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை," என்று தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ கடுமையாக சாடினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர் மொஞ்சனூர் ராமசாமியை ஆதரித்து தென்னிலையில் வைகோ நேற்று (5ம் தேதி) பிரச்சாரம் துவக்கினார்.
பிரச்சாரத்தின் போது வைகோ பேசியதாவது:
வாழ்நாள் முழுவதும் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளின் எழுச்சியை பார்க்கும் போது அரவக்குறிச்சியின் தேர்தல் தீர்ப்பு இன்றே முடிவாகிவிட்டது. ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் இடங்களில் மக்கள் கூட்டம் சாரை, சாரையாக வருகிறது. '71-க்கு பிறகு இத்தகைய கூட்டத்தை காண முடிகிறது. அண்ணன் கருணாநிதி சொல்வதை ஏற்க மக்கள் தயாராக இல்லை.
கலர் "டிவி" தருகிறோம் என்று சொல்வதே மக்களை ஏமாற்றத்தான். பொய் சொல்லாதீர்கள். நான்கு முறை முதல்வராக இருந்த போது ஏன் தரவில்லை?
கருணாநிதி ஆட்சியில் ரேஷன் கார்டு ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேருக்குதான் வழங்கப்பட்டது. ஜெ., ஆட்சியில் ஒரு கோடியே 88 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உழவர் பாதுகாப்பு திட்டத்தை நல்ல திட்டமாக விவசாயிகள் நினைக்கின்றனர்.
கிராம விவசாயிகள், நகரங்களில் வசிக்கும் நடுத்தர, அடித்தட்டு மக்கள் இந்த ஆட்சி தொடர வேண்டும் என நினைக்கின்றனர். நம் குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஜெயலலிதா நினைப்பதாக எண்ணுகின்றனர்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரிசி விலை உயர்வை ஏற்றுக் கொண்ட அமைச்சர் தயாநிதி மாறன், இங்கு வந்து ரூ.2க்கு அரசி வழங்குவோம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்? மத்திய அரசிடம் ரூ.8.30க்கு அரிசி வாங்கி ரூ.3.50க்கு ரேஷனில் விற்பதன் மூலம் ரூ.ஆயிரத்து 300 கோடி மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இவர்கள் எப்படி ரூ.2க்கு அரிசி கொடுக்க முடியும்?
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர்வதையே பெண்கள் விரும்புகின்றனர். அவர் செல்லும் பகுதிகளில் பெண்களின் வரவேற்பு அதிகமாக உள்ளது. அமைதி, பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கை முறை அமைவது ஜெயலலிதா அரசில்தான் என்பதால் தான் பெண்கள் கூடுகின்றனர்.
இவ்வாறு வைகோ பேசினார்.
பள்ளப்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் பேசியதாவது:
கடந்த '98ல் பா.ஜ., மத்திய அரசில் பொது சிவில் சட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டபோது பல கட்சிகள் ஆதரவு அளித்தன. நான் மட்டுமே முதலில் எதிர்த்தேன். பின்னர் தான் தி.மு.க., ஆதரவு அளித்தது. தீர்மானத்தை பார்லிமெண்டில் விவாதத்துக்கு கொண்டு வந்தபோதும் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஓட்டு எடுப்பு கொண்டுவர முயற்சித்தபோது மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். உடனே பிரமோத் மகாஜன், "நீங்களும் அமைதியாக இருந்தால் சட்டம் நிறைவேறும்" என்றார். நான் மறுத்தேன்.
முஸ்லிம்களுக்கு ஆதரவு என்று கூறிவரும் கருணாநிதியின் தி.மு.க., மற்றும் பா.ம.க., தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்தது. அப்போதும் அ.தி.மு.க., எதிர்த்தே ஓட்டளித்தது. ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோதும், பார்லிமெண்டில் எதிர்ப்பு தெரிவித்து நான் பேசினேன்.
தி.மு.க., ஆட்சி காலத்தில் "டிசம்பர் 6" தோறும் சோதனை என்ற பெயரில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டனர். தி.மு.க., என்றுமே முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததேயில்லை.
இவ்வாறு வைகோ ஆவேசமாக பேசினார்.
Courtesy: www.dinamalar.com
Sunday, April 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
1. வைகோ, தன் கட்சி நிர்வாகிகளில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உரிய இடம் அளிக்கவில்லை.
2. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறியாட்டத்தை நியாயப்படுத்தி இந்து வெறியர்கள் போட்ட கூட்டத்தில் வைகோவும், ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸும் கலந்து கொண்டனர்.
3. பொடா சட்டத்தை ஆதரித்து மக்களவையில் வைகோ வாக்களித்தார்.
4. தேர்தல் முடிவுகளுக்குப் பின், வைகோ பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பார். இனி அவரது அரசியல் பாதை இந்துத்துவத்தை நோக்கியே நகரும்.
Post a Comment