Monday, April 24, 2006

விண் "டிவி'க்கு திடீர் தடை

"விண் டிவி"க்கு பல மாவட்டங்களில் திடீர் தடை : வைகோ பேச்சை ஒளிபரப்பியதால் கடும் ஆத்திரம்

திருநெல்வேலி: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெயினுல் ஆபிதீன் ஆகியோரின் பேச்சை ஒளிபரப்பிய விண் "டிவி" சேனல் பல மாவட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் சன் "டிவி', ஜெயா "டிவி', ராஜ் "டிவி', விஜய் "டிவி' என சில பிரதான சேனல்கள் உள்ளன. ஆனால், தற்போது செய்தி ஒளிபரப்பப்படுவது சன் "டிவி'யிலும், ஜெயா "டிவி'யிலும் தான். இவை தவிர விண் "டிவி' போன்ற சிறிய "டிவி'க்களிலும் ஒளிபரப்பாகிறது. தற்போது தேர்தல் பரபரப்பு துவங்கி விட்டதால் சன் "டிவி' தி.மு.க.,விற்கு ஆதரவாகவும், ஜெயா "டிவி' அ.தி.மு.க.,விற்கு ஆதரவாகவும் செய்திகளை ஒளிபரப்புகின்றன. ராஜ் "டிவி'க்கும், விஜய் "டிவி'க்கும் செய்தி வழங்கும் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவை வெறுமனே நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்புகின்றன. இருந்தாலும் விண் "டிவி' செய்தி ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ளதோடு அனைத்து தரப்புச் செய்திகளையும் ஒளிபரப்பி வருகிறது. இதனை பெரும்பாலான நேயர்கள் பார்க்கின்றனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் விண் "டிவி' நேற்று முன்தினம் முதல் தெரியவில்லை. நேற்று இரண்டாவது நாளாக விண் "டிவி' ஒளிபரப்பாகாததால் பலரும் அதனை விசாரித்தனர். இதுகுறித்து கேபிள் "டிவி' ஆபரேட்டர்களிடம் கேட்டால் மாஸ்டர் சேட்டிலைட் ஆபரேட்டர் எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் தான் இந்த ஒளிபரப்பை செய்கிறார்கள். அவர்கள்தான் இதனை நிறுத்தியிருக்கிறார்கள் என கூறப்பட்டது. இதுகுறித்து விண் "டிவி' நிர்வாகத்தினர் சுமங்கலி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அதெல்லாம் சென்னையில் எடுத்த முடிவு. எங்கள் கையில் எதுவும் இல்லை என கூறியுள்ளார்கள்.

விண் "டிவி' உரிமையாளர் தேவநாதன், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர். நெல்லையில் விண் "டிவி' இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், "சன் "டிவி' நிர்வாகம் தங்களை தவிர வேறு யாருமே தமிழகத்தில் "டிவி' நடத்தக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறது. விண் "டிவி' அனுமதிக்காக மத்திய அரசுக்கு 40 கோடி ரூபாய் வரை செலவு செய்து இந்த சேனலை நடத்தி வருகிறோம். நாங்கள் நடுநிலையான செய்தி வெளியிடுவதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக ம.தி.மு.க., தலைவர் வைகோ, தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெயினுல் ஆபிதீன் ஆகியோரின் பேச்சை ஒளிபரப்புவதால் எங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள். விண் "டிவி'க்குப் பிறகு துவக்கப்பட்ட இமயம் "டிவி,' தமிழன் "டிவி' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தனியார் "டிவி'க்களை கேபிளில் வழங்குகிறார்கள். ஆனால், இவர்கள் செய்தி ஒளிபரப்பவில்லை. செய்தி ஒளிபரப்புவதால் விண் "டிவி'யை எதிரியாக பார்க்கிறார்கள். சுமங்கலி கேபிள் விஷன் ஆக்கிரமிப்பு செய்துள்ள மதுரை, திருச்சி,கோவை, தற்போது நெல்லை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் விண் "டிவி' ஒளிபரப்பை தடை செய்துள்ளார்கள். சுமங்கலியின் கட்டுப்பாட்டில் இல்லாத மற்ற மாவட்டங்களில் விண் "டிவி' இணைப்பு வழங்கப்படுகிறது. 100 ரூபாய் 150 ரூபாய் என கேபிள் "டிவி'க்கு பணம் கொடுக்கும் பொதுமக்களுக்கு எல்லா "டிவி"க்களையும் வழங்க வேண்டும். அதை விடுத்து இப்படி துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதைக் கண்டிக்கிறோம். இதுகுறித்து சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுப்போம். தமிழக முதல்வரிடமும், கவர்னரிடமும் இதுகுறித்து புகார் செய்வோம் இவ்வாறு தேவநாதன் கூறினார்.

நன்றி : தினமலர்

3 comments:

Unknown said...

அண்ணே! எங்கே இருக்கிறீங்க! விண் டி.வி விற்கப்பட்டு விட்டதாகவும் ஜெ. குழுமத்தினரால் வாங்கப்பட்டு விட்டதாகவும் அடிபடுகிற பேச்சு உங்களுக்குத் தெரியாதோ!

Anonymous said...

appadi sonnal seitathu sari aahi veduma sultan shahib.

Unknown said...

ஜெ உடையது எனத் தெரிந்தவுடனே மாற்றுவதுதானே அவர்களுக்குத் தெரிந்தது. நாகரீகமான அரசியலெல்லாம் போயே போய் விட்டது தவிரவும் தற்போது எலக்ஷன் டைம்.