Wednesday, March 02, 2005

தொழுகையின் முக்கியத்துவம் (பகுதி 1)

தொழுகை - அதற்கென பிரத்யேக வார்த்தைகளையும் தனிப்பட்ட அசைவுகளையும் கொண்ட ஒருவகை இறை வணக்கமாகும். அது அல்லாஹ்வுடைய புகழைத் துதிப்பதற்காகவும் அமைதிக்கான தீர்வாகவும் இருக்கிறது. இஸ்லாத்தில் தொழுகைக்கு காட்டப்பட்ட முக்கியத்துவம் போல வேறு எதற்கும் காட்டப்படுவதில்லை என்றாலும்கூட அதனை இன்று நம் முஸ்லிம் சமுதாயம் அலட்சியப்படுத்துவதால் அதன் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

தொழுகையும் இபாதத்தும்
தொழுகையின் முக்கியத்துவத்தை நாம் தெறிந்துக்கொள்வதற்கு முன்னால் "இபாதத்" என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்வது அவசியமாகும். உலகத்து வேலைகளை எல்லாம் துறந்து விட்டு தஸ்பீஃ மணியை கையில் எடுப்பதல்ல இபாதத் என்பது. இபாதத் என்னும் வார்த்தை அப்து என்னும் சொல்லில் இருந்து பிறந்திருக்கிறது. அப்து என்றால் அடிமை என்று பொருள். எனவே இபாதத் என்றால் அடிமைப்படுவது என்று பொருள். அதாவது அனைத்து விதமான அருட்கொடைகளையும் வழங்கிய இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுதலே இபாதத் எனப்படும்.

ஒரு அடிமையின் பண்பு, எஜமானனை எஜமானனாக நினைத்தல்தான். கண், காது, மூக்கு, வாய், மற்றும் கால்களை படைத்து அதற்கு மனிதன் என்னும் உயர்ந்த அமைப்பை அளித்து, உயிர்கொடுத்து மேலும் அந்த உயிர் உலகத்தில் வாழ்வதற்குத் தேவையான காற்று, தண்ணீர், உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றையும் அளித்து அந்த உடல் நோயுற்றால் தேவைப்படும் மருந்துவகைகளையும் உண்டாக்கி வைத்து பரிபாலிக்கின்ற அந்த எஜமானனுக்கு நன்றி செலுத்தி அவனின் கட்டளைகளை அறிந்து வழிப்பட்டு மரியாதையும் கண்ணியமும் செலுத்தி அடிபணிந்து வாழ்வதே இபாதத் ஆகும்.

எப்படி அடிபணிவது?
அடிபணிதல் என்பதுதான் இபாதத் என்னும்போது எந்த நேரத்திலும், எச்சூழ்நிலையிலும் அவனுக்கு அடிபணிவதிலிருந்து மீள முடியாது. அவன்தான் நம்மைப்படைத்து பரிபாலிக்கின்ற எஜமானன் ஆயிற்றே!. அப்படியிருக்கும் போது நான் இந்தந்த நாளில்தான் அவனுக்கு அடிமையா‎‎‎‎க இருப்பேன், இவ்வளவு நேரத்துக்குதான், இந்த சில விஷயங்களில்தான் அடிமையாக இருப்பேன் மற்ற விஷயங்களில் அடிமையாக இருக்கமாட்டேன் என்று எப்படி சொல்லமுடியும்?

சிப்பாய்களுக்கான அழைப்புக்குரல்
இராணுவத்தில் கடமை உணர்ந்து செயல்பட எப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருப்போம். இரவிலும் பகலிலும் பல தடவைகள் குழல் (Siron) ஊதப்பட்டு சிப்பாய்கள் ஓரிடத்தில் கூடுவதற்கான கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. பிறகு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றார்கள். குழல் ஓசை கேட்ட பிறகும் யார் தகுந்த காரணமின்றி பயிற்சி இடத்திற்கு வரவில்லையோ அல்லது பயிற்சியில் இடப்படும் கட்டளைகளை ஏற்று நடக்கவில்லையோ அத்தகையவர்களை சோம்பேறிகள், தகுதியற்றவர்கள் என்று தீர்மானித்து அப்புறப்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே இப்படியெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு பயிற்சிக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு இருமுறைதான் பயிற்சிக்கு வருவேன் என்று அடம்பிடித்தால் அவர்களால் சிப்பாய்களாகத் தொடரமுடியுமா?

இதுபோலவே இறைஇல்லத்தில் (பள்ளிவாசலில்) நாள் ஒன்றுக்கு 5 தடவை குழல் (பாங்கு ஓசை) ஒலிக்கின்றது. இறைவனுடைய சிப்பாய்கள் அதனைக்கேட்டு பயிற்சி இடத்திற்கு வந்து இறைக்கட்டளையை நிறைவேற்ற தயாராக இருப்பதை நிறூபிக்கவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் ஒருவன் இறைஇல்லத்தின் குழல் ஓசை கேட்டபிறகும் அதற்கு மதிப்பளிக்கவில்லை என்றால் அல்லது வாரத்திற்கு ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அல்லது வருடத்திற்கு இருமுறையும்தான் (பெருநாள் நாட்களில்) பள்ளிவாசல் என்னும் இறைவனின் இராணுவ பயிற்சி முகாமிற்கு வருவேன் என்று அடம்பிடித்தால் அவன் எப்படி இறைவனின் இராணுவத்தில் பணியாற்றும் தகுதி பெற்றவனாக முடியும்?

இதன் அடிப்படையில்தான் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள், பாங்கொலி கேட்ட பிறகும் யாரேனும் தம் வீட்டிலிந்து வெளிவரவில்லை என்றால் அவர்களின் வீடுகளுக்கு தீயிட நான் விரும்புகிறேன் என்பதாக.

இன்னுமொரு ஹதிஸ், "தொழுகை என்பது இஸ்லாத்துக்கும் இறை நிராகரிப்புக்கும் (குஃப்ருக்கும்) இடையே உள்ள எல்லைக்கோடு" என்று நமக்கு பறைசாற்றுகிறது.

இன்னும் தொழுகை நமக்கு எத்தகைய உன்னத பலன்களை அளிக்கிறது என்பதைப் பார்போம்.

(தொடரும்)

(தொழுகை என்ற தலைப்பில் சகோதரர் நாகூர் இஸ்மாயில் அவர்கள் எழுதிவரும் தொடரும் இத்தொடரும் வெவ்வேறு பாதைகளில் பயணம் செய்கிறது. செப்டம்பர் 2003-ல் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" என்ற தலைப்பில் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட எனது இக்கட்டுரை உருவாக, ஒரு அறிஞரின் புத்தகம் தூண்டுகோளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.)

No comments: