Friday, March 18, 2005

தொழுகையின் முக்கியத்துவம் (பகுதி 4)

இத்தொடரின் நோக்கம், மார்க்கத்தின் மீது நல்லெண்ணம் கொண்ட சகோதரர்கள், தொழுகையின்பால் மக்களை ஆர்வமுட்டுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகளையும் (உதாரணம்: சூஃபிச கதைகள்) இல்லாத நன்மைகளையும் (உதாரணம்: ஜக்கரியா அவர்களின் அமல்களின் சிறப்புகள்) சொல்லலாம் என நினைக்கிறார்கள். இதற்கு காரணம் இதன் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்டோ அல்லது பிற்காலத்தில் இவைகள் அறிமுகப்படுத்துப்பட்டு அதன்பால் கவரப்பட்டோ இருக்கலாம். இது ஒருவகை அறியாமையே. குர்ஆனும் சுன்னாவும் நமது தாய்மொழியில் கிடைக்காத கால கட்டத்தில் நம்மீது திணிக்கப்பட்ட அறியாமையாகும்.

நாமும் இச்சூழலில் இருந்திருக்கிறோம். தவறு என்று தெரிந்தப்பின்னர் அத்தவறுகளை விட்டு ஒதுங்கி நல்லதின்பால் நகருவது ஒரு புத்திசாலிக்கு அடையாளமாகும். அதனால்தான் நபி(ஸல்) சொன்னார்கள், "ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறுசெய்பவர்தான். அதில் சிறந்தவர்கள் அத்தவறுகளை நீக்கி பாவமன்னிப்பு கேட்டு மீள்பவரே" என்று.

முந்தைய மூன்று தொடர்களிலும் இபாதத் என்றால் என்ன?, தொழுகை ஏற்படுத்தும் நற்பயிற்சி மற்றும் தொழுகாதவர்களின் மறுமைநிலை எனப் பார்த்தோம். மவ்லானா அபுல்அஃலா மெளதூதி அவர்களின் குத்பா பேருரைகளின் நற்கருத்துகளையும், கூடவே தொழுகையாளியாக இல்லாதவனுக்கு கொடுக்கப்படும் தண்டனைப்பற்றி "ஃபிக்ஹு சுன்னா" ஆங்கில வெளியீட்டிலிருந்து எடுத்து தொகுத்தது ஒருவகையில் எனது எழுத்துப்பயிற்சியாக அந்த ஆரம்பநாட்களில் தெரிந்தோ தெரியாமலோ அமைந்துவிட்டது. மெளதூதி அவர்களின் இக்கருத்துகள், எனக்கு கான்வென்ட் வாழ்க்கையைத்தான் ஞாபகப்படுத்தியது.

சுன்னாவில் இத்தனை நல்லவைகள் இருந்தாலும் ஏனோ சிலர் சூஃபிச தத்துவத்திற்கு போகிறார்கள். சூஃபிச தத்துவங்கள் வேண்டுமானால் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் அதிகமானவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்று புரிந்துக் கொள்ளவேண்டும். சூஃபிச கருத்துகளாக மக்கள் முன் நடமாறுபவை வடிக்கட்டப்பட்டவையே. இதிலும்கூட இத்தனை அபத்தங்கள் நிறைந்திருந்தால், சூஃபிசத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள். இன்னும் அது நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும் அமைந்திருக்கிறது.

பாட்டுகூட இப்படித்தான் சில நேரத்தில் அமைந்துவிடுகிறது. பாட்டு என்றவுடன் ஒரு செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. எனது காரைக்கால் நண்பன் ஒருவன், "ஒரு கையில் தம்ரூட்டு, மறுகையில் பிஸ்கோத்து, இருக்கையில் நமக்கென்ன கலக்கம்ம்ம்ம்ம், இனி, கண்களில் ஏன் இந்த மயக்கம்ம்ம்.. கண்களில் ஏன் இந்த மயக்கம்ம்ம்" என்று விளையாட்டாக பாடுவான்.

ஒருகையில் இறைவேதம் மறுகையில் நபி-போதம் போய், சில மக்களுக்கு தம்ரூட்டு போல சூஃபிச கதைகளும், பிஸ்கோத்து போல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் இனிப்பில் ஏன் இந்த மயக்கமோ தெரியவில்லை.

ஒருவன் ஈமான் கொண்டபின்னர், அந்த நேரத்திற்குரிய தொழுகையை அவன் உடனே நிறைவேற்றவேண்டிய முதல் விஷயமாக ஆகிவிடுகிறது. ஐந்து கடமைகளில் ஈமானுக்கு அடுத்தவிஷயமல்லவா.

கான்வென்டில் சேர்க்கப்பட்ட ஒரு சிறுவன், தினமும் வைகறையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதும், யுனிபார்ம் உடுத்தி அசெம்பிளிக்கு சென்று பள்ளியறையில் அமர்வதும் வாடிக்கையாக்கி கொள்கிறான். கான்வென்ட் பயிற்சியை மனதார ஏற்றுக்கொண்டவன் நல்ல நிலைமைக்கு முன்னேறுகிறான். கான்வென்ட் பயிற்சி திணிக்கப்பட்டவன் பிறகு தனது பயிற்சி தந்த விஷயங்களை செயல்படுத்தாது மது நிலையங்களில் கும்மாளமிடுகிறான்.

ஆனால், படித்துவிட்டு பிற்காலத்திலும் வைகறையில் எழுந்து அதேபோல உடற்பயிற்சி செய்துவிட்டு சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்லும் ஒருவனிடம், அவனின் செயல்பாடுகள் நன்றாக, துள்ளியமாக இருப்பதற்கு காரணம் கேட்டால், கான்வென்ட் பயிற்சி என்பான்.

தொழுகையும் மனிதனுக்கு இத்தகைய பயிற்சியை அளிக்கின்றது. இன்னும் இதைவிட அதிகமாகவே அளிக்கின்றது. ஆனால் கான்வென்ட் போல இயந்திரதனம் இருக்காது. பசித்தவன் அவனுக்கு முன்வைக்கப்பட்ட உணவை முடித்துவிட்டு பள்ளிக்குச்செல்லலாம் என்கிறது இஸ்லாம். இயந்திரத்தனமாக மூர்க்கம் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டில் பார்க்க முடியாது.

ஒரு மனிதன் தொழுதானா இல்லையா என்று பள்ளியின் தலைவரோ, தாய் தந்தையோ அவனை கட்டுப்படுத்த முடியாது. காரணம் நாளின் ஐந்து வெவ்வெறு நேரங்களில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அவன் உடற்பயிற்சியில் இருக்கலாம், மீட்டிங்கில் இருக்கலாம், தொழிற்சாலையில் உற்பத்தியில் இருக்கலாம் அல்லது கணினிக்கு முன்னே உட்கார்ந்து புது நிரலி கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கலாம். இவனுக்கு தொழுகையை அந்தந்த நேரத்திற்கு தொழுக வேண்டுமென்று சொல்வதற்கு சூஃபிச கட்டுக்கதைகள் முக்கியமில்லை அதில் உண்மையும் இல்லை. இவனுக்கு தேவையெல்லாம் இறைவனைப்பற்றிய நம்பிக்கையும் மறுமையைப்பற்றிய பயமும் ஐந்து நேர இறைவணக்க அசெம்பிளிக்கு செல்லவில்லையென்றால், கிடைக்கக்கூடிய மறுமை தண்டனைப்பற்றிய நினைவூட்டலும்தான்.

நண்பர்கள் சிந்திப்பார்களா?

1 comment:

அபூ முஹை said...

நன்கு சிந்திக்கத் தூண்டியுள்ளீர்கள்!