Saturday, March 05, 2005

தொழுகையின் முக்கியத்துவம் (பகுதி 2)

1. அடிமை என்னும் உணர்வு
நாம் எந்நேரத்திலும் இறைவனின் அடிமை என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவேண்டும். ஆனால் ஷைத்தான் நம்மைப் பார்த்து நீ என் அடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான். ஆனால் தொழுகை நாம் இறைவனின் அடிமை என்பதை நமக்கு நினைவுப் படுத்திக் கொண்டிருக்கின்றது. சூரிய உதயத்துக்கு முன்னால் படுக்கையிவிருந்து எழுந்ததும் (பஜ்ர்) தொழுகை இதைத்தான் நமக்கு நினவுபடுத்திக் கொண்டிருக்கின்றது. பகவில் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது மூன்று முறையும் (லுஹர், அஸர், மஃரிப் தொழுகைகள்) இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன் (இஷா தொழுகை) ஒரு முறையும் இப்படி முக்கிய வேளைகளில் முக்கியத் தேவைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் போது அவைகளை சிறிது நேரம் உதறிவிட்டு அவனுக்குக் கட்டுப்பட்டு சிரம் சாய்ந்து நாம் இறைவனுடைய அடிமை என்பதை தொழுகை நமக்கு நினைபடுத்துகின்றது. இத்தகைய கடமையான தொழுகைகளில் ஈடுபட்டு நம்மை இறைவனின் அடிமை என்று நிறூபிக்கவில்லை என்றால் ஷைத்தானின் அடிமையாக மாறிக்கொண்டிருக்கின்றோம் என்றே புரிந்துக் கொள்ள வேண்டும்.

2. கடமையை அறிதல்
தொழுகையே அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட முதல் வணக்கமாகும். அதுவும் (வஹீ மூலம் அல்லாமல்) நபி (ஸல்) அவர்களுக்கு நேரடியாக அருளப்பட்டது.

இதனைப் பற்றி நபித்தோழர் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தின் போது தொழுகை கடமையாக்கப்பட்டது. முதலில் அது ஐம்பது ரக்அத்-லிருந்து பல தடைவை மாற்றப்பட்டு பிறகு ஐந்து ஆகும் வரை குறைக்கப்பட்டது, பின்பு சொல்லப்பட்டது ஓ! முஹம்மதே! இதன் கட்டளை மாற்றப்படவில்லை, இந்த ஐந்தும் ஐம்பதற்கு சமம் என்பதாக.

வாழ்க்கையில் ஒவ்வோர் அடியிலும் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. பல அலுவல்களுக்கு இடையில் தொழுகையை நிறைவேற்றுவது கடமையை உணர்ந்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை நமக்கு உண்டாக்குகின்றது. ஏனென்றால் யார் தனது கடமையை உணர்ந்து முறையாகச் செயல்படுத்தவில்லையோ அவர்களால் எப்படி அவனின் கட்டளைகளை நிறைவேற்ற முடியும்?

3. கீழ்படிவதற்கான பயிற்சி
பாங்கொலி கேட்டதும் எல்லாப் பக்கங்களில் இருந்தும் முஸ்லிம்கள் தன் வேலைகளை விட்டுவிட்டு ஒரே கேந்திரத்தில் வந்து கூடுவது, இராணுவத்தில் இருப்பதுபோன்ற கட்டுப்பாட்டை அவர்கள் பெற்றருப்பதைக் காட்டுகின்றது. இராணுவ வீரர்கள் எங்கே இருந்தாலும் குழலோசை கேட்டதும் தம்முடைய தளபதி அழைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதைத் தெரிந்துக்கொண்டு அவனின் கட்ளைக்குக் கீழ்படிவதற்காக இராணுவ கேந்திரத்தை நோக்கிச் செல்கின்றார்கள். இறைவனின் இராணுவ தளத்திலிருந்து குழலோசையான பாங்கொலி கேட்டதும், முஸ்லிம்கள் தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு இறைவனின் இராணுவ கேந்திரமான பள்ளிவாசலுக்கு விரைகின்றார்கள். இது தொழுகையில் மட்டும் அல்லாது ஏனைய விஷயங்களிலும் இறைவனுக்கு அப்படியே கட்டுபடவேண்டும் என்பதை நமக்கு கற்று தருகிறது.

4. இறையச்சத்தை தோற்றுவித்தல்
"தொழுகை மானக்கேடானவைகளை விட்டும் தடுக்கின்றது" என்று இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான். தொழுகையில் ஓதப்படும் இறைவசனங்களை புரோகித தனமாக அன்றி உளப்கபூர்வமானதாக ஒருவர் சிந்திப்பாரேயானால், அவர் மானக்கேடான விஷயத்தின் பக்கம் நெருங்கவே மாட்டார். ஆனால் நம்மில் பலர் தொழுது கொண்டும் அதே நேரத்தில் மானக்கேடான விஷயத்தில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கின்றார்கள். இதற்கு காரணம் அவர்களின் தொழுகை உயிரற்று இருப்பதுவே ஆகும். தொழுகையில் ஓதப்படுகின்ற இறைவசனத்தில் வரும் எச்சரிக்கைகள் நம் மனதை அடையும் போது இறையச்சம் தானாக பிறக்கும்.

5. இறைச்சட்டங்களை அறிதல்
இறைவனின் சட்டங்களையும் கட்டளைகளையும் அறிந்துக் கொள்வதற்காகவும், ஞாபகப்படுத்துவதற்காகவும் தொழுகையில் திருக்குர்ஆனும் வெள்ளிதோரும் குத்பாவும் ஓதப்படுகிறது. ஆனால் கொடுமை என்னவென்றால் நாம் குர்ஆனை நம் மொழியில் படித்திருக்காத காரணத்தினால், தொழுகையில் என்ன ஓதப்படுகிறது என்பதை நம்மவர்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. அதுமட்டும் அல்லாமல் ஜும்மாவில் பேசப்படும் உரை(குத்பா) வெறும் சடங்காக மாறிவிட்டது, அங்கு அறிவை தட்டி எழுப்புகின்ற உரைகளுக்கு பதிலாக சம்பிரதாய மோகங்களில் தாலாட்டும் ராகங்கள் இசைக்கப்படுகின்றன தவிர இறைவனின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டிதந்த ஜும்மா அல்ல.


இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், காலையிலும் மாலையிலும் எதிரிப்படைகள் உங்களைத் தாக்க வரலாம் என்று எச்சரிக்கை செய்கின்ற இராணுவ தளபதியைப் போன்று ஜும்மா சொற்பொழிவு நிகழ்த்துவார்கள் என ஹதீஸ் நமக்கு கூறுகின்றது.

6. கூட்டு வாழ்க்கைக்கான முயற்சி
பரபரப்பான இந்த உலகத்தில் எந்த முஸ்லிமும் தனித்து நிற்கக்கூடாது. மாறாக எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபட்டு உறுதியான ஒரு சமுதாயமாக உருவாக வேண்டும். இறைகட்டளைகளுக்குப் பணிவதில் இறைசட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருத்தல் வேண்டும்.

உலக வாழ்வில் ஒரு புறம் இறைகட்டளையை ஏற்று செயலாற்றும் முஸ்லிம்கள், மறுபுறம் இறைசட்டத்தைப் புறக்கணித்து ஷைத்தானின் சட்டத்தைச் செயல்படுத்தும் இறைநிராகரிப்பாளர்கள். இவ்விரண்டிற்கும் நித்தம் நித்தம் யுத்தம். இந்த யுத்தத்தில் எந்த ஒரு முஸ்லிமும் பிரிந்து நின்றால் வெற்றி பெற இயலாது. எனவே இறை அச்சமுள்ள அடியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமுதாயச் சக்தியைத் திரட்டிக்கொண்டு துரோகத்தை எதிர்த்து போராடுவதும், புறக்கணிப்பை மேற்கொள்வதும் அவசியமாகும். இந்த சமுதாய சக்தியை திரட்டுவதில் அனைத்தையும் விட முதன்மை வகிப்பது தொழுகையேயாகும். இத்திரட்சி வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை ஜும்மாத்தொழுகையிலும், வருடம் இருமுறை ஈத் பெருநாள் தொழுகைகளிலும் ஏற்படுகின்றது.

ஆக, முஸ்லிம்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான செயல் ரீதியான ஒற்றுமையைத் தோற்றுவிப்பதில் தொழுகையே முதன்மை வகிக்கின்றது.

(தொடரும்)

No comments: