Thursday, March 24, 2005

கொள்கையின் பெயரால் இடைச்செருகல்கள்.

கிரேக்க தர்க்கக்கலை முஸ்லிம்களிடம் நுழைய ஆரம்பித்தபோது, இஸ்லாமியக் கொள்கைகளை கிரேக்கத் தத்துவங்களோடு ஒப்பிட ஆரம்பித்தார்கள்.

இதனால் முஸ்லிம்களுக்கிடையில் முஃதஸிலா, கதரிய்யா ஜஹமிய்யா போன்ற பலப் பிரிவுகள் தோன்ற ஆரம்பித்தன. இது இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் கொள்கையை நிலைநாட்டுவதற்காக விவாதங்கள் புரிந்தார்கள். தூய்மையான இஸ்லாமியக் கொள்கையில் களங்கம் ஏற்படுத்தினார்கள்.

ஒவ்வொரு பிரிவினரும் குர்ஆன், ஹதீஸை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்று, தவறான விளக்கங்கள் கொடுக்கலானார்கள். சரியான ஹதீஸ்களில் தங்களுக்கு சாதகமான விஷயங்கள் இல்லாதபோது தங்கள் கொள்கையை வலுப்படுத்த ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூற ஆரம்பித்தனர்.

இப்பிரிவினரிடையில் கொள்கை அடிப்படையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் ஒன்று ஈமான் அதிகரிக்குமா? அதிகரிக்காதா? என்பது. ஒரு சாரார், ஈமான் அதிகரிக்கும் என்றும், மற்றொரு சாரார் ஈமான் அதிகரிக்காது என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு சாராரும் தங்கள் விவாதத்திற்குத் தக்கவாறு ஹதீஸ்களை உற்பத்தி செய்து நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யாகக் கூறினார்கள். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

ஈமான் அதிகரிக்காது என்ற கொள்கையுடையவர்கள் பின்வருமாறு ஒரு ஹதீஸை இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

"ஈமான் என்பது அதிக்கவும் செய்யும், குறையவும் செய்யும் என்று யாராவது கருதினால், அதிகரிப்பது நயவஞ்சகமாகும். அது குறைவது நிராகரிப்பதாகும். இதைச் சொன்னவர்கள் அதற்காக தவ்பா செய்ய வேண்டும் இல்லையென்றால் அவர்களுடைய கழுத்தை வாளால் வெட்ட வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

இது போன்ற பொய்யான ஹதீஸ்களை ஏராளம் உற்பத்தி செய்து கூறியுள்ளனர்.

No comments: