Sunday, March 20, 2005

எங்கே போனது கூச்சம்?

அன்பு, மகிழ்ச்சி, துக்கம், சிரிப்பு, கேபம் என்று மனிதனுக்கு பல உணர்வுகள் இருப்பது போல கூச்சம் என்பதும் ஒரு உணர்வாய் இருக்கிறது. கூச்சம் என்பது வெட்கத்தின் வெளிப்பாடு எனவும் சொல்லலாம். வெட்கத்தைப்பற்றிய

நபி(ஸல்) கூறினார்கள்: வெட்கம், நலவைத் தவிர வேறெதனையும் கொண்டு வராது. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம். அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன்(ரலி))

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி))

கன்னிப் பெண் தன் அறையில் வெட்கப்படும் வெட்கத்தை விட மிக அதிகமாக நபி(ஸல்) வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வெறுப்பான ஏதாவதொரு விஷயத்தை அவர்கள் பார்த்தால், (அவர்களின் வெறுப்பை) அவர்களின் முகத்தில் நாங்கள் அறிந்து கொள்வோம். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரி(ரலி))

வெட்கம் என்ற நல்ல பண்பை அல்லாஹ் என்றும் நம் அனைவருக்கும் அருள்வானாக!

இத்தகைய நல்ல பண்பு இன்று சிதறடிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் பாகுபாடின்றி எல்லாத் தவறுகளும் எல்லோரும் செய்யக்கூடியவர்களாகி விட்டார்கள்.

கூச்சம் என்பது சமுதாயத்தில் சிறிது சிறிதாக எப்படி களையப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணங்களான சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் எப்படிப் பங்களிக்கின்றன, பெண்களின் நவீன உடைக் கலாச்சாரம் எப்படியெல்லாம் சமுதாயத்தில் நச்சு விதைகள் விதைக்கிறது என்பது குறித்து வெ. இன்சுவை(பெண் எழுத்தாளர்) தினமணியில் எழுதியிருந்த "கூச்சம்" - ஒரு மெய்ப்பாடு என்ற கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

- மாலிக் கான்.


'சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சமுதாயத்தின் மேல் தட்டு திருமணம். வழக்கம்போல் பணம் பேசிக் கொண்டிருந்தது. அனைவரின் செவிப்பறையும் இசைக்குழவினர் கிழித்துக்கொண்டிருந்தனர். ஒரு கானாப் பாடலை அவர்கள் பாட ஆரம்பிக்க, அங்கே நான் பார்த்த காட்சியால் அதிர்ந்து போய்விட்டேன். ஓர் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி(பாட்டி!) எழுந்து அந்த பாடலுக்கேற்றவாறு ஆட ஆரம்பித்துவிட்டார். அப்பப்பா! என்ன ஆட்டம்? தான் ஆடியதோடல்லாமல் பக்கத்திலிருந்த சில பேரிளம் பெண்களையும் இழுத்து ஆடவைத்துவிட்டார். இது எப்படிச் சாத்தியம்?

இப்போதெல்லாம் மக்கள் எதற்காகவும், எப்போதும் கூச்சப்படுவது இல்லை. உண்மையில் "கூச்சம்" என்ற மெய்ப்பாடு பலரிடமும் கிடையாது. நான்கு பேர் பார்க்கிறார்களே! என்ன நினைப்பார்கள்? நம்மைப் பற்றித் தவறாக எண்ணுவார்களே! என்றெல்லாம் யாரும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

நாம் தினமும் பேருந்துகளிலும், மின்சார ரயில்வண்டிகளிலும், திரை அரங்குகளிலும் இன்னும் இதுபோன்ற பொது இடங்களிலும் காணும் காட்சிகள் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. பொது நாகரிகம் என்ன என்பதே ஏன் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

பொதுவாக மெத்தப் படித்தவர்கள் கூட மேடை ஏறி பலர் முன்னிலையில் பேசத் தயங்குவார்கள். எல்லோருக்கும் சபைக் கூச்சம் என்பது இருக்கும். அதன் அளவுகோல் வேண்டுமானால் மாறக்கூடும். ஒவ்வொரு மேடைப் பேச்சும் ஒரு பிரசவம் என்பார் நண்பர். ஆனால் இன்று பேச்சுக்கலை பிரமிப்பூட்டும் வண்ணம் வளர்ந்துள்ளது. சிறிது கூட பயம் இன்றி, தயக்கம் இன்றி, சிலசமயம் நாணமின்றிப் பேசுகின்றனர். யார் வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும், எப்படியும் பேசலாம் என்ற நிலைமை வந்து விட்டதால்தான் கண்ணியமும், நாகரிகமும் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன.

மக்கள் எதற்கும் கூச்சப்படுவதில்லை. தவறு செய்யக் கூசுவது இல்லை, பொய் பேசக் கூசுவது இல்லை, புறம் பேசக் கூசுவது இல்லை, பெற்றோரை உதாசீனப்படுத்தக் கூசுவது இல்லை, குற்றம் செய்யக் கூசுவது இல்லை, பிடிபட்டாலும் கூசுவது இல்லை. கைவிலங்குடன் சிரித்துக் கொண்டே செல்லக்கூடிய அளவிற்கு மனநிலை பெற்றிருக்கிறார்கள்.

நிறைய பேர் எதைச் செய்யவும், எப்படிச் செய்யவும் தனக்கு உரிமை உண்டு என்று எண்ணுகிறார்கள். யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டுமே, என்ன கவலை என்ற மனப்போக்கு. இதனால்தான் நாண வேண்டிய செயலுக்குக் கூட அவர்கள் நாணுவதில்லை.

உதாரணமாக உடை விஷயத்தில் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். உடுத்துவது அவரவர் சொந்த விஷயம் என்று வாதிடுபவர்களும் உண்டு. ஆனால் இவர்களின் அரைகுறை உடுத்தல், கண்ணியமில்லாத அலங்காரம் சமுதாயத்தில் தேவையற்ற நச்சு விதையைத் தூவுகிறதே! "சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுத்துவிட்டு" பின்னர் பெண்களைக் கேலி செய்கிறார்கள், அவர்களிடம் தவறாக நடக்க முற்படுகிறார்கள் என்று வெற்றுப் புலம்பல் புலம்பி என்ன பயன்? வசீகரிக்கும் அலங்காரத்தை விட, வணங்க வைக்கும் அழகே ஆராதனைக்குரியது என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்? தனிமனித சுதந்திரம் என்பதையும் உடை அலங்காரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்தச் சமுதாயச் சீரழிவிற்கு நம் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் துணைபோகின்றன. தான் காசு பண்ண, கதாநாயகனை வெட்கமின்றிப் பெண் துரத்தித் துரத்தித் துடுக்காகப் பேசி வலிந்து சென்று கவர்ச்சி காட்டிக் காதலிப்பதாகக் காட்டுகிறார்கள் பல புண்ணியவான்கள். நேசத்தை இப்படியா நிஜவாழ்க்கையில் (ஆணின் மேலே விழுந்து) பட்டவர்த்தனமாக உணர்த்துகிறார்கள். இவர்களின் மிகையை நிஜம் என்று நம்பி, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இது மட்டுமல்ல - அருவருப்பான இரட்டை அர்த்த வசனங்களையும், பாடல்களையும் எழுத கைகள் கூசுவதில்லை. பணத்திற்காப் பண்பை விற்கக் கூசுவதில்லை.

நாகரிகத்தின் உச்சகட்ட சீரழிவு இன்றைய ஆண், பெண் சிநேகம். இருபாலரும் சேர்ந்து படிப்பதாலும், ஒன்றாக வேலை செய்வதாலும் பழக வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் சிநேகிதம் என்ற பெயரில் அவர்கள் பழகுவது பல சமயம் எல்லை மீறிப் போகிறது. பொது இடங்களில் அவர்கள் சிறிதும் நாணமின்றி நடந்து கொள்கின்றனர். பேருந்துகளிலும், திரையரங்குகளிலும், கடற்கரைகளிலும் அவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் நமக்குத்தான் கூச்சமாக இருக்கிறது. கணவன் மனைவியே ஆனாலும், நான்கு சுவர்களுக்கு வெளியே எப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறை வேண்டாமா? இதையெல்லாம் கற்றுக் கொடுக்க பள்ளிக் கூடமா வைக்கமுடியும்?

மற்றவர்களிடத்திலிருந்து வித்தியாசப்படும் போது நாம் கூர்ந்து நோக்கப்படுவோம். அப்போது எப்பேர்ப்பட்டவருக்கும் ஒரு சிறிதாவது கூச்சம் அல்லது தயக்கம் ஏற்படும். ஏற்பட வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறு ஏற்படாததுதான் ஆச்சரியமாக உள்ளது. பெரியவர்களின் இந்த நடவடிக்கையைப் பார்த்து குழந்தைகள் என்ன படிப்பினையைக் கற்றுக் கொள்ளும்? ஐந்து வயதிலேயே அழகிப் போட்டியில் பூனை நடை (Cat Walk) கற்று அரங்கை அசத்தப் பழகிக் கொள்கின்றனவே!

ஆனாலும் இக்காலக் குழந்தைகள் எதற்கும் பயப்படுவதில்லை. சபைக்கூச்சம் என்பது மருந்துக்கும் அவர்களிடம் இல்லை. எத்தனை அழகாகப் பாடுகிறார்கள்! பேசுகிறார்கள்! ஆடுகிறார்கள்! வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதே சமயம் அவர்களுக்கு முன்னிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்லித் தர வேண்டும்.

இயற்கை உபாதையையும் எங்கே வேண்டுமானாலும் கழிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலர். இதற்குக் கூட கூச்சப்படாதவர்களை என்னவென்று சொல்வது?

அடுத்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தவறு செய்பவர்கள் அனைவருமே தாம் செய்யும் தவறு வெளியே தெரியவே தெரியாது! கண்டிப்பாக மாட்டிக் கொள்ளமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கையுடன்தான் துணிச்சலாகச் செய்கிறார்கள். அலுவலகத்தில் கையூட்டு, கையாடல், "சைபர் கிரைம்" போன்ற படித்தவர்கள் செய்யும் குற்றங்கள், கொலை செய்துவிட்டு எதையோ பெரிதாகச் சாதித்ததுபோல் நடந்துகொள்ளும் பாவிகள், அடுத்தவர் பணத்தைத் திருடும் கேவலம்.. இப்படி குற்றங்களில்தான் எத்தனை வகை? ஆனால் செய்த குற்றம் அம்பலமாகி, பிடிபட்டுவிட்டால் முன்பெல்லாம் உறவும், நட்பும் அதைப் பெரிய அவமானமாகக் கருதித் துண்டித்துப் போகும். குற்றவாளியும் அவமானத்தால் சிறுத்துப் போவான். ஆனால் இன்று கைதாகி அழைத்துப் போகும்போது ஒருவித பெருமித சிரிப்புடன்தானே செல்கிறார்கள்? தவறு செய்தவர்களை ஒதுக்கி வைக்காமல் பணமும், அதிகாரமும் இருப்பவர்களை இச் சமூகம் அங்கீகரிப்பதுவும் இத்தகைய மனப்பான்மைக்குக் காரணம் எனலாம்.

சமூகம் எந்தச் சட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ, எதைப் பண்பாடு, கலாச்சாரம் என்று வகுத்திருக்கின்றதோ, "இது இப்படித்தான்" என்று எதற்கு ஓர் எல்லை வகுத்திருக்கிறதோ அதை எந்தத் தனிமனிதனும் மீறக் கூடாது. அப்போதுதான் நம் சமுதாயத்தில் ஓர் ஒழுங்கும், இசைவும், கட்டுக்கோப்பும் ஏற்படும். எதற்கு அச்சப்படவேண்டுமோ அதற்கு அச்சப்படவேண்டும். எதற்கு நாணம் கொள்ளவேண்டுமோ, அதற்கு நாணம் கொண்டால்தான் அழகு. தலைகுனிய வேண்டிய அவச்செயல்களுக்குத் தலைநிமிர்ந்தால் அச்செயல் சரி என்று ஆகிவிடாது.

தான் ஈட்டியுள்ள உயர்வான உணர்வை மனிதன் இழந்துவிடலாகாது. எனவே அவன் செய்ய வேண்டியதெல்லாம் தற்போதைய ஒழுங்கீனத்திலிருந்து மீள வழி காண்பதுதான். வயதுக்கேற்ற நடை உடையும், சிந்தனைகளும் அந்த வயதிற்கே உரிய அழகையும், கம்பீரத்தையும் கொடுக்கும். எப்போதும் மற்றவர் அருவருப்பால் முகம் சுளிக்கக்கூடிய எச்செயலையும் செய்யாமை இனிது.

தவறு செய்ய மனம் கூச வேண்டும், தீயவற்றைக் கேட்கும்போது காதுகளுக்குக் கூச வேண்டும், பொய் பேச வாய் கூச வேண்டும். கெட்டவற்றைப் பார்க்க கண்கள் கூச வேண்டும், இந்தக் கூச்ச உணர்வு தேவையானபோது ஏற்பட வேண்டும்.

நன்றி : தினமணி 11-03-2005.

No comments: