Thursday, March 03, 2005

நபிவழியில் இடைச்செருகல்.

நபிவழியில் இடைச்செருகல்.
ஹஜ்ரி 40ம் ஆண்டுவரை நபிவழி அறிவிப்புகளில் எந்த இடைச்செருகல்களும் இடம் பெறவில்லை. நபித்தோழர்கள் பொய்யான ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் தூய்மையானவர்களாக இருந்தார்கள்.
ஹதீஸ்களில் எந்தவித கையாடல்களும் 40ம் ஆண்டுவரை இடம் பெறவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவோ, அல்லது சமூகத்தில் ஏற்பட்ட பிரிவினைகளுக்கு ஆதாரமாகவோ யாரும் நபிவழியைப் பயன்படுத்தவில்லை. ஹிஜ்ரி 40ம் ஆண்டு அலி (ரலி) அவர்களுக்கும், முஆவிய (ரலி) அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், போராக மாறி அதன் மூலம் பல உயிர்கள் கொல்லப்பட்டு, இரத்த ஆறு ஓட்டப்பட்டது.

ஆரம்பத்தில் அலி (ரலி) அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரிஜியாக்கள் என்போர் ஒரே நேரத்தில் அலி (ரலி) அவர்களையும், முஆவிய (ரலி) அவர்களையும் எதிர்த்து சதி செய்தார்கள். அலி (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, அஹ்லுபைத்தைச் சார்ந்தவர்களில் (நபி குடும்பத்தாரில்) சிலர் தங்களுக்கும் கிலாஃபத்தில் பங்கு உண்டு என வாதாடினார்கள். இதனால் உமையாக்கள் ஆட்சியில் பிளவு ஏற்பட்டது.

இது போன்ற அரசியல் கருத்து வேறுபாடுகள் முஸ்லிம்களை பல பிரிவுகளாக ஆக்குவதற்குக் காரணமாக அமைந்தன. அதோடு மட்டும் நின்று விடாமல், இந்தப் பிரிவினைகள் மார்க்கத்திலும் தன் பலத்தைக்காட்ட ஆரம்பித்தன. இதனால் இஸ்லாத்தில் மார்க்க அடிப்படையிலான பிரிவுகள் தோன்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் பிரிவின் கொள்கையை ஆதரிப்பதற்காக குர்ஆன், ஹதீஸை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஆனால் குர்ஆன், ஹதீஸ்கள் இவ்விரண்டும் ஒவ்வொரு பிரிவின் கொள்கைக்கும் வளைந்து கொடுப்பது அல்ல என்பதே உண்மை. குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டும் ஏதாவது ஒன்றை ஆதரிக்குமேயல்லாமல், எல்லாப்பிரிவின் கொள்கைகளையும் ஒரு போதும் ஆதரிக்காது.
இதனால் சில பிரிவைச் சார்ந்தவர்கள் குர்ஆனின் வசனங்கள் எந்த நோக்கத்திற்காக இறங்கியதோ அதை விட்டு மாற்றுப் பொருள்கள் கொடுத்து விளக்கலானார்கள். நபிமொழி வாசங்கங்களுக்கு பொருத்தமற்ற வியாக்கியானங்கள் செய்ய ஆரம்பித்தார்கள்.

குர்ஆன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தில் மாறாது பாதுகாக்கப் பட்டிருந்ததின் காரணத்தால் அதில் இடைச்செருகல்களை நுழைக்க இயலாமல் போனபோது, தங்கள் வாதத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்கள் சொல்லாதவற்றைச் சொன்னதாகப் புனைந்து கூற ஆரம்பித்தார்கள்.

உண்மையான நபிமொழியோடு தங்கள் சுய கருத்துக்களையும் இணைத்துக் கூறினார்கள். இதனால் சரியான நபிவழியோடு பொய்யானவையும் கலக்க ஆரம்பித்தன. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் என்பதை நபி (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.

''என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் செல்லுமிடம் நரகம் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களை எச்சரித்து, என்னைப் பற்றிய அறிவிப்புகளை ஏற்றுக் கொள்வதில் மிகக் கவனமாக - ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி விட்டார்கள்.

நபிவழிகள் தொகுப்பு வடிவில் எழுதிப் பாதுகாக்கப்படாமலிருந்த காரணத்தினால் நபிவழியில் இடைச்செருகல் செய்வது மிக எளிதாக இருந்தது. பொய்யாகப் புனையப்பட்ட ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக ஒவ்வொரு பிரிவினரும் நுழைக்க ஆரம்பித்தார்கள். இது ஹிஜ்ரி முதல் இரண்டு நூற்றாண்டுகளில் அதிகம் வளர ஆரம்பித்தது.

1 comment:

Abu Umar said...

நல்ல விபரங்கள். தொடர்ந்து படிக்கிறேன்.

மேலும் தொடருங்கள்.

அன்புடன்
அபூ உமர்