Saturday, March 05, 2005

தனி மனிதர் சிறப்பு.

தனி மனிதர்களின் சிறப்புப் பற்றித்தான் முதல் முதலாக ஹதீஸ்களைப் புனைய ஆரம்பித்தார்கள். ஒவ்வாரு பிரிவினரும் தங்கள் தலைவரைப் பற்றிப் புகழ்ந்து ஹதீஸ்களை தயாரித்து அவற்றை நபி (ஸல்)அவர்கள் கூறியதாகச் சொல்லலானார்கள்.

இதில் முதலில் ஈடுபட்டவர்கள் ஷியாக்கள். பல பிரிவுடைய இவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தலைவரைப் பற்றி புகழ்ந்து பொய்யாக ஹதீஸ்களைச் சொல்வதைக் கண்ட சுன்னத் ஜமாஆத்தைச் சார்ந்தவர்களில் போதிய ஞானமற்றவர்கள் ஷியாக்களை எதிர்ப்பதற்காக இவர்களும் ஸஹாபாக்களில் சிலரைப் புகழ்ந்து ஹதீஸ்களை உருவாக்கினார்கள்.

ஷியாக்கள் பொய்யான ஹதீஸ்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கிறார்கள் என்று அறிந்ததினால்தான் இமாம் அபூ ஹனீபா (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), மாலிக் (ரஹ்) ஷுரைக் பின் அப்துல்லாஹ் (ரஹ்),யஸீது பின் ஹாரூன் (ரஹ்) போன்ற இமாம்கள் ஷியாக்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில்லை.
இடைச்செருகல்களின் ஆரம்பம்.

இஸ்லாத்தின் மூன்றாவது கலீபாவான உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தின் பிற்பகுதியில் முஸ்லிம்களுக்கிடையில் பெரும் பிளவுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன. உதுமான் (ரலி) அவர்களைப் பழிவாங்க வேண்டுமெனத் திட்டம் போட்டு, அதனால் சமூகத்தில் ஒரு சாரார் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர், இறுதியாக உதுமான் (ரலி) அவர்களின் உயிரையே சூறையாடினார்கள்.

இந்நிகழ்ச்சி முஸ்லிம்களுக்கிடையில் பெரும் பரபரப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தியது என்றாலும் இதற்காக நபிவழியை ஆதாரமாகப் பயன்படுத்த எவரும் முன் வரவில்லை. ஒரு சில பொய்யான ஹதீஸ்கள் மட்டுமே பரப்பப்பட்டிருந்தன.

'அப்துர்ரஹ்மான் பின் அத்தீஸ்' என்பவர்தான் முதன் முதலாக பொய்யான அறிவிப்பைப் புகுத்தியவராவார். இவர் உதுமான் (ரலி) அவர்களின் கொலையிலும் பங்கெடுத்துள்ளார். இவர் ஒருமுறை மிம்பரில் ஏறி ''அறிந்து கொள்ளுங்கள் உபைதா என்பவர் தன் வாகனத்தை விட்டும் வழி தவறியதை விட உதுமான் மிகப்பெரிய வழி தவறியாவார். என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்'' எனக் கூறினார்.

இதைச் செவியுற்ற உதுமான் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக இப்னு அத்தீஸ் பொய் சொல்லி விட்டார்'' என்று கூறினார்கள். (தாரிகுத்தபரி)

இதன் மூலம் இப்னு அத்தீஸ் என்பவர்தான் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் முதன் முதலாக பொய்யான ஹதீஸைப் புனைந்து கூறியவர் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இராக் நாடும், இடைச்செருகலும்.
பொய்யான ஹதீஸ்களை உற்பத்தி செய்வதில் இராக் நாடு பிரசித்திப் பெற்றிருந்தது. குறிப்பாக அந்நாட்டின் முக்கிய பட்டணமான கூஃபா இந்த விஷயத்தில் முன்னணியில் இருந்தது. கூஃபாவில் உமையாக்களின் ஆட்சியை எதிர்த்து வந்த ஷியாக்கள், உமையாக்களை இழிவுபடுத்தி பல ஹதீஸ்களை உற்பத்தி செய்தனர்.

'முக்தாருக் தகபி' என்பவர் அன்ஸாரி நபித்தோழர் ஒருவரிடத்தில் ''நான்தான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் கலிஃபாவாக வரவேண்டியவன்'' என்பது பற்றி ஒரு ஹதீஸை உருவாக்கிச் சொல்லுமாறும் அதற்காக பத்தாயிரம் திர்ஹம்களும், ஒரு வீடும், ஒரு வாகனமும், ஒரு வேலைக்காரனும் தருவதாகக் கூறினார். ஆனால் அன்ஸாரி நபித்தோழர் அதை மறுத்து விட்டார்கள். (மீசானுல் இஃதிலால்)

இராக் பொய்யான ஹதீஸ்களை அறிவிப்பதில் முதல் இடம் வகுத்த காரணத்தினால் இராக் அறிஞர்களுக்கு ஹதீஸ் கலை வல்லுனர்களிடத்தில் செல்வாக்குக் குறைந்தது. எனவே இராக்கை சார்ந்தவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை தீர ஆராய்ந்த பின்னரே அதை ஏற்றுக்கொள்ள அறிஞர்கள் முன்வருவார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 'இராக்வாசிகளே' ஷாம் நாட்டுக்காரர்கள் உங்களை விடச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் அங்கு அதிகமான நபித்தோழர்கள் சென்றார்கள், ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையே அறிவித்தார்கள். ஆனால் உங்களிடத்தில் மிகக் குறைந்த நபித்தோழர்களே வந்தார்கள், ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையும் அறியாத பல விஷயங்களையும் எங்களுக்கு அறிவித்தீர்கள். நாங்கள் அறியாத விஷயங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? (தாரீகுல்கபீர்)

இராக்கிலிருந்து ஒரு கூட்டம் மக்காவிலிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் வந்து ''எங்களுக்கு ஹதீஸ்களைச் சொல்லுங்கள்'' என்று சொன்னர்கள். அதற்கு ''இராக்கில் ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்கள் பொய்யான ஹதீஸ்களைச் சொல்லிவிட்டு கேலி செய்வார்கள்'' என்று கூறினார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

மார்க்கத் தீர்ப்புகளுக்கு இராக்கிலிருந்து கொடுக்கப்படும் தீர்ப்புகளை அறிஞர்களும், நாட்டுத் தலைவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. ஷாம் நாட்டிலும், மதீனாவிலும் உள்ள மார்க்க அறிஞர்களின் தீர்ப்பையே ஏற்றுக் கொள்வார்கள்.

இராக்கிலிருந்து உருவாகும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மற்ற நாட்டு அறிஞர்களை இமாம் மாலிக் (ரஹ்) எச்சரித்துள்ளார்கள்.
அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி என்பவர் ஒருமுறை இமாம் மாலிக் அவர்களிடம் ''மதீனாவில் நாற்பது நாட்களாகக் கேட்ட ஹதீஸ்களை ஒரே நாளில் இராக்கிலிருந்து கேட்கிறேன், இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு ''உங்களிடம் உள்ளது போன்ற நாணய உற்பத்தி இயந்திரம் எங்களிடம் எங்கே இருக்கிறது? இரவிலே அச்சடிக்கிறீர்கள், பகலிலே செலவு செய்கிறீர்கள்'' என இமாம் மாலிக் அவர்கள் கூறி இராக்கில் நடக்கும் பொய்யான ஹதீஸ் எவ்வளவு வேகமாகப் பரவியது என்பதற்கு ஒரு உதாரணத்தை முன் வைத்தார்கள்.

பொய்யான ஹதீஸ்கள் இராக் நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும், அவைகளை தரம் பிரித்தறிகின்ற பல மார்க்க மேதைகள் அங்கு இருந்தனர். சுமார் முன்னுறுக்கும் மேற்பட்ட நபித்தாழர்கள் இராக்கின் முக்கிய நகரமான கூஃபாவிற்குச் சென்றுள்ளார்கள். அவர்களில் எழுபது பேர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களாவர். இவர்களில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களும் ஒருவராவார்.

கதாதா, யஹ்யா பின் அபீகதீர், அபூ இஸ்ஹாக், அஃமஷ், அத்தவ்ரிய்யு, இப்னு உயைனா போன்ற பெரும் மேதைகள் கூஃபாவிலும், பஸராவிலும் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே இடைச்செருகல் செய்யப்பட்ட ஹதீஸ்களை மிக எளிதாகக் கண்டுபிடித்து பொது மக்களுக்கு உணர்த்துவதில் இவர்கள் பெரும் சேவை செய்துள்ளனர். இவர்களில் பலர் சரியான ஹதீஸ்களை அறிவிக்கும் நேர்மையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலரின் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற ஹதீஸ்களை இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) தங்கள் ஹதீஸ் தொகுப்புகளில் இடம் பெறச் செய்துள்ளனர். இவர்களில் அப்துர்ரஸாக் அஸ்ஸான் ஆனி, ஜரீர் இப்னு அப்துல்ஹமீத், இஸ்மாயில் இப்னு அஃப்பான், அய்யுப்னுல் ஜஅது போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

No comments: