Tuesday, March 08, 2005

தொழுகையின் முக்கியத்துவம் (பகுதி 3)

தொழுகையை விட்டவனின் மறுமை நிலை
அஹ்மத், நஸாயி மற்றும் திர்மிதியில் வந்துள்ள நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் தொழுகையைப்பற்றியே மறுமையில் முதலில் விசாரிக்கப்படும் என்று வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு கர்த் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அடியார்களின் செயல்களில் நாளை முதலில் விசாரிக்கப்படுவது தொழுகையாகும். அது சரியாக இருந்தால் மற்ற எல்லாம் சரியாக இருக்கும்.

மற்றொரு ஹதிஸில் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றி சொன்னார்கள்"" யார் தொழுகையைப் பாதுகாத்துப் பேணிக்கொண்டாரோ அது அவர்களுக்கு மறுமையில் ஒளியாகவும் ஆதாரமாகவும், பாதுகாவலனாகவும் இருக்கும். யார் அதனை பேணிப் பாதுகாத்துக்கொள்ளவில்லையோ அது அவர்களுக்கு மறுமையில் ஒளியாகவும் ஆதாரமாகவும், பாதுகாவலனாகவும் இருக்காது. மறுமையில் ஒன்றுக்கூட்டப்படும் அந்நாளில் அவர்கள் காருன், பிர்அவ்ன், ஹாமான் மற்றும் உபை இப்னு கலஃப் ஆகியோர்களுடன் இருப்பார்கள். (ஆதாரம் : அஹ்மத், திர்மிதி, இப்னு ஹிப்பான்)

யார் இந்த காருன், பிர்அவ்ன், ஹாமான் மற்றும் உபை இப்னு கலஃப்? நிச்சயமாக இவர்கள் இஸ்லாத்தின் பெரும் எதிரிகள்தாம் என்பதில் நமக்கு சிறிதுகூட சந்தேகம் இருக்கமுடியாது. இத்தகைய கொடியவர்கள் கொடும் வேதனையை அனுபவித்துக் கொண்டு நரகத்தில் நிரந்தரமாக தங்குவார்கள் என நாம் அனைவரும் அறிவோம். அத்தகைய கொடும் நரகத்தில் தொழுகையை விட்டவர்களும் தங்கவேண்டும் என்றால், அது எத்தகைய ஒரு பாவமான செயல் என்பதை நம்மால் உணர முடிகிறதா இல்லையா?.

சுவர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்; குற்றவாளிகளைப்பற்றி விசாரித்தும் கொள்வார்கள். ''உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது? "" (என்று கேட்பார்கள்.) அவர்கள் (நரகவாதிகள் பதில்) கூறுவார்கள்; ''தொழுபவர்களாக நாங்கள் இருக்கவில்லை"". (அல்குர்ஆன் 74:40-43)

யாராவது கடமையான தொழுகையைத் தொழாமல் அதன் நேரம் முடிந்துவிட்டால் அவர் நிராகரிப்பாளராகிவிட்டார் என்ற விஷயத்தில் எங்களிடையே கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்று உமர், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், முஆத் இப்னு ஜபல், அபூஹ{ரைரா (ரலி) மற்றும் மற்ற நபிதோழர்களைத் தொட்டும்; இப்னு ஹாதம் (ரஹ்) அறிவிக்கிறார்கள். இந்த செய்தி முந்திரி இமாம் தங்களின் அத்தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலில் குறிப்படுகிறார்கள். மேலும் அவர்கள் குறிப்பிட்டார்கள், நபி தோழர்களின் ஒரு குழுவும் அவர்களுக்கு பின் வந்தவர்களும் யாராவது கடமையான தொழுகையை தொழாமல் அதன் நேரம் முழவதுமாக முடிந்துவிட்டால் அவர் காஃபிராகிவிட்டார் என்ற முடிவை நம்பியிருந்தார்கள். இந்த முடிவை எடுத்தவர்களில் உமர் இப்னு கத்தாப், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், முஆத் இப்னு ஜபல், ஜாபிர் இப்னு அப்துல்லாஹ், அபூதர்தா (ரலி) மற்றும் இப்னு ஹன்பல், ஹக்கம் இப்னு உதைபா, அபூ தாவுத் தயாலிசி போன்ற இமாம்கள் பலர் உள்ளடங்கியுள்ளனர்.

தொழுகையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனமே போதுமானதாக இருக்கும்.

இறைவன் கூறுகிறான்,(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்குர்ஆன் 4:102)

(தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்;. (அல்பகரா : 238, 239)

எதிரிகள் நம்மை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற நிலை இருந்தால் கூட தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்கின்றபோது, உண்மையான முஸ்லிம் எப்படி தொழுகையை புறக்கணிக்க முடியும்? தொழுகை என்னும் கடமையை உணர்ந்து கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் போது சுவன வாழ்வு என்னும் கண்ணியத்தை இறைவன் பரிசாக தருகின்றான்.

(ஈமான் கொண்டவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்) மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த நேரத்தில் முறையோடு) பேணுவார்கள். (அல்குர்ஆன் 23 : 9)

ஆகவே முஸ்லீமான ஒவ்வொருவருக்கும் தொழுகை இன்றியமையாதது. மேலும் நாம் முஸ்லீமான தாய் தந்தையருக்கு பிறந்ததினால் எப்படியாவது சுவர்க்கம் சென்றுவிடலாம் என்று எண்ணிவிடக்கூடாது. மாறாக இறைவனின் கடமையை அறிந்து அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும் போதுதான் சுவர்க்கம் என்னும் ஆடையை நமக்கு போர்த்தி இறைவன் நம்மை கண்ணியப்படுத்துவான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

எனவே நாம் தொழுகையை குறித்த நேரத்தில் ஜமாஅத்தோடு நபிவழியில் தொழுது, மறுமை கேள்வி கணக்கில் முதலாவதாக கேட்கப்படும் (தொழுகை பற்றிய) கேள்விக்கு பதிலளிக்க தகுதியுடையோராக ஆக்கி அருள்புரிவானாக ஆமின்.

(தொடரும்)

No comments: