Sunday, March 13, 2005

இடைச்செருகல்களில் ஷியாக்களின் பங்கு.

நபி(ஸல்) அவர்கள் மீது பொய்களை துணிந்து சொல்வதில் அரசியல் பிரிவுகள் முன்னணியில் நின்றன. இப்பிரிவினரில் ஷியாக்கள் அதிகமாக பொய்களை பரப்பியவர்களாவர். இவர்களில் மிக மோசமானவர்கள் அவர்களில் ஒரு பிரிவான ''ராபிழா'' என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் தான்.
"ராபிழாக்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்" என மாலிக்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது,

"அவர்களிடம் பேசாதீர்கள், அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறிவிக்காதீர்கள், அவர்கள் பொய்யர்கள்" என்று கூறினார்கள. (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)

"நாங்கள் ஒன்று கூடும்போது எதையாவது ஒரு செயலை நல்லது என நாங்கள் நினைத்தால் உடனே அதை ஹதீஸ் என்று கூறிவிடுவோம்" என்று 'ராபிழா' பிரிவினர் ஷைகுகளில் ஒருவர் கூறியதாக பிரபல ஹதீஸ் கலை மேதை 'ஹம்மது பின் ஸலமா'(ரஹ்) அவர்கள் கூறினார்கள், (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)

"தாங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி கூட்டங்களில் 'ராபிழா' பிரிவினரைவிட அதிகமாக பொய் சொல்லக்கூடிய எந்த கூட்டத்தையும் நான் பார்க்கவில்லை" என இமாம் ஷாஃபி(ரஹ்) கூறியுள்ளார்கள். (உலூமுல்ஹதீஸ்: இப்னுகஸீர்)

தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு பல ஹதீஸ்களை ராபிழாக்கள் உருவாக்கிக் கூறியுள்ளனர். அவைகளில் பின்வரக்கூடிய செய்திகள் குறிப்பிடத் தக்கவையாகும்.

நபி(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது "கதீர்ஃகம்" என்ற இடத்தில் சஹாபாக்களை ஒன்றுசேர்த்து, எல்லா நபித்தோழர்களையும் பார்க்கும்படி அலி(ரலி) அவர்களின் கையை பிடிக்து "இவர் தான் என்னால் வசிய்யத்துச் செய்யப்பட்டவர், எனது சகோதரர், எனக்குப் பின்னால் கலீபாவாக வர வேண்டியவர், எனவே இவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு வழிபடுங்கள், என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அவர்கள் மீது ஒரு பெரும் பொய்யைக் கூறியுள்ளனர்.

"யாரும் ஆதம்(அலை) அவர்களுடைய அறிவையும், நூஹ்(அலை) அவர்களுடைய தக்வாவையும், இப்ராஹீம்(அலை) அவர்களுடைய பொறுமையையும், மூஸா(அலை) அவர்களுடைய கம்பீரத்தோற்றத்தையும், ஈஸா(அலை) அவர்களுடைய வணக்கத்தையும் பார்க்க விரும்பினால், அவர்கள் அலி(ரலி) அவர்களைப் பார்த்துக் கொள்ளட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டி கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

''நான் அறிவின் தராசு, அலி அதன் இருதட்டுகள். ஹஸன், ஹுஸைன் இவ்விருவரும் அத்தராசின் கயிறாக இருக்கிறார்கள். ஃபாத்திமா அத்தராசின் தொடர், எங்களிலிருந்து வரும் இமாம்கள் அத்தராசின் தூண்கள், அத்தராசில் தான் எங்களை நேசிப்பவர்களுடையவும், எங்களை வெறுப்பவர்களுடையவும் செயல்கள் எடைப் போடப்படுகின்றன. அலி (ரலி) யை நேசிப்பது நற்செயலாகும், அந்நேசத்தோடு எத்தனை பாவங்கள் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட மாட்டான், அவர்களை வெறுப்பது பாவமாகும்.
அவ்வெறுப்போடு செய்யப்படும் எந்த நற்செயல்களும் பயனளிப்பதில்லை'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)
இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியம், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்துக் கொண்டு வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் அமீராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார். அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.

இதை அறிந்த சுன்னத் ஜமாத்தில் உள்ள சில அறிவிலிகள் ஷியாக்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக சில ஸஹாபாக்களைப் புகழ்ந்து இட்டுக்கட்டி சில ஹதீஸ்களைக் கூற ஆரம்பித்தார்கள். பொய்யை, பொய்யைக் கொண்டே எதிர்க்கும் மோசமான பழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.

''சுவர்க்கத்தின் மரத்திலுள்ள ஒவ்வொரு இலையிலும் லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்றும் அபூபக்கர், உமர், உதுமான் என்றும் எழுதப்பட்டிருக்கும்'' என்று ஒரு ஹதீஸைப் புனைந்து கூறினார்கள். (தன்ஸீஹ்)

இவ்வாறே முஆவியா (ரலி) அவர்களது அணியைச் சார்ந்தவர்கள் தங்கள் அணிக்குச் சாதமாகப் பல ஹதீஸ்களை உண்டாக்கிக் கூறலானார்கள். சத்தியத்தைச் சொல்பவர்களும், அசத்தியத்தைப் பரப்புபவர்களும் தங்கள் கொள்கைகளை வலுப்படுத்துவதற்காக தாங்களாகவே ஹதீஸ்களை உற்பத்தி செய்து கொண்டார்கள்.

1 comment:

Abu Umar said...

நன்றி:
உங்கள் கட்டுரைகள் தொடராக இருப்பதுபோல் தெரிந்தாலும் ஒவ்வொரு பதிவும் அருமை.

அன்புடன்
அபூ உமர்