Saturday, March 05, 2005

கோபம் தவிர்ப்போம்

இன்று தினமணி நாளிதழில் ஒரு நல்ல கருத்துப் படித்தேன். நமது தளத்தின் நேயர்களுடன் அதைப் பகிர்ந்துக்கொள்ள விரும்பி இங்கு அதை அப்படியே தருகிறேன்..
- இப்னு ஹம்துன்


கோபம் தவிர்ப்போம்!

நபிகள் நாயகம் (ஸல்) தம் தோழர்களோடு அமர்ந்து உரையாற்றி கொண்டிருந்தார். அங்கே வந்த ஒரு மனிதர், நபித்தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு எதிராக அவமானம் தரும் வார்த்தைகளைப் பேசினார். இது அபுபக்கர் அவர்களைப் பெரிதும் புண்படுத்தியது. ஆனால் அபுபக்கர் பொறுமை காத்தார். இரண்டாவது முறையும் அம்மனிதர் அபுபக்கருக்கு எதிராகக் கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஆனாலும் அபுபக்கர் பொறுமையுடன் அமைதியாக இருந்தார். மூன்றாவது முறையும் அம்மனிதர் மிக மிக மோசமான வார்த்தைகளால் அபுபக்கர் அவர்களை அர்ச்சித்தார்.

உடனே அபுபக்கர் அந்த மனிதருக்குப் பதிலளிக்க முற்பட்டார். உடனே நபிகள் நாயகம் அந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டார்.

அதிர்ச்சியுற்ற அபுபக்கர், நபிகளைப் பார்த்து, "இறைத்தூதர் அவர்களே! என் மீது அதிருப்தி கொள்கிறீர்களா?' என்று வினவினார்.

அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் "இல்லை' என்று பதில் அளித்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்.

""வானத்தில் இருந்து வானவர் ஒருவர் வந்தார். அவர் அந்த மனிதரின் வார்த்தைகளை மறுத்துரைக்க முயன்றார். ஆனால், நீங்கள் அந்த மனிதரின் வார்த்தைகளுக்குப் பதில் சொல்ல முற்படவே, அந்த வானவர் திரும்பச் சென்று விட்டார். அந்த இடத்தில் ஷைத்தான் அமர்ந்து கொண்டான். ஷைத்தான் அமர்ந்திருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. ஆகவேதான் நான் எழுந்தேன்'' என்று கூறினார்கள்.

இங்கே நபிகள் நாயகம் ஷைத்தான் என அறிவித்தது கோபத்தை. கோபம் ஒரு வியாதி. சற்று நேரம் நம்மை பலம் கொண்டவர் போல் காட்டும். நேரம் ஆக ஆக நாம் சோர்ந்து போவோம். அதன்பின் உங்கள் உடலும், உள்ளமும் சோர்ந்து போகும்.

கோபம் தணியும்போது உடல் வலிமை முழுவதையும் இழந்ததுபோல் உணர்வோம். ஒவ்வொரு முறை கோபப்படும் போதும், அது ஆழ்மனதில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தி விடுகிறது.

கோபம் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்குக் காரணமான சூழ்நிலையை மாற்றிப் பேச்சை திசை திருப்பலாம். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்குமானால், அவ்விடத்திலிருந்து அகன்று விடுவது நல்லது.

""கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே வீரன். உங்களில் ஒருவருக்குக் கோபம் வருமாயின், அவர் நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து கொள்ளவும். இன்னும் கோபம் அடங்கவில்லை எனில் படுத்துக் கொள்ளவும்'' என்று கூறியுள்ளார் நபிகள் நாயகம்.

"இறைவனுடைய நன்றிமிக்க அடியார்கள் யாரென்றால், பூமியில் அடக்கமாகவும், பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களிடம் வாதம் செய்ய நேரிட்டால், உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்று கூறிவிடுவார்கள்.' (திருக்குர்ஆன் 25:63)

ஆகவே, அன்போடு பகைமை பாராட்டும் அநீதிக்கு துணை போகும் அறியாமையில் வீழ வைக்கும் கோபம் தவிர்ப்போம்.

- என்.எம். இக்பால்

No comments: