Sunday, March 13, 2005

ஒட்டகப் பயணம் - 1

ஒட்டகம் என்றாலே நமக்கு எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சவூதிஅரேபியாதான். சவூதி என்றாலே பாலைவனம், வெயில், பெட்ரோல், என்று பலருக்கு சிந்தனையில் ஓடினாலும், நம்மவருக்கு விசா, வேலை, வெளிநாடு என்ற எண்ணக் கோடுகள் சிந்தையில் ஊருவதும் உண்டு...

வயசான தாத்தா, பாட்டி என்றால் அவங்களுக்கு ஒரு ஏக்கம் கூட உண்டு.. நம்ம புள்ளைங்க கூட வெளிநாட்டுல சம்பாதிக்கிறாங்க வார வருடமோ அல்லது அடுத்த வருடமோ எப்படியாவது சவூதிக்கு போய் ஹஜ்ஜு செஞ்சிட்டு பாவத்தை எல்லாம் தொலைச்சுட்டு வந்துடனும் என்ற நினைவில் காலத்தை உருட்டுபவர்களும் இருக்கிறார்கள்...எனினும் என் சிந்தையில் உதிப்பது கீழே..தொடர்ந்து வாசியுங்கள்...தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஒட்டகப் பயணத்தின் மூலம் சவூதியின் இயற்கை அமைப்பு, வளங்கள், வாழ்க்கை முறை என்று பல செய்திகளை தெரிஞ்சுக்கலாம்... வாங்க..

உலக வரைபடத்தில் மத்திய கிழக்குப்பகுதியில் அதிகமான பரப்பளவை தன்னகத்தே கொண்டுள்ளது என்றால் அது அரேபியத் தீபகற்பம்தான். இந்த அரேபியத் தீபகற்பத்தில் உள்ள வளைகுடா நாடுகளிலேயே பெரிய பரப்பளவு கொண்ட நாடும் சவூதிஅரேபியாதான். சவூதி அரேபியாவின் வடக்குப் பகுதியில் ஜோர்டான், ஈராக் மற்றும் குவைத் நாடுகள் அமைந்துள்ளன. கிழக்குப் பகுதியில் கத்தரும், தென்கிழக்குப் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மற்றும் ஓமன் நாடும் அமைந்துள்ளன. இதன் தெற்கே ஏமன் நாடும், இதன் மேற்குப் பகுதியில் செங்கடலும் அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் மொத்தப் பரப்பளவு 2,240,000 சதுர கிலோ மீட்டர் (864,900 சதுர மைல்கள்). இதன் தலைநகர் ரியாத்.

சவூதி அரேபியாவில் நகரங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மக்கா, மதீனா, தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான், மற்றும் தபூக் என்று கூறலாம். சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், மலைகளுமே ஆகும்.

குறிப்பாக சவூதி அரேபியாவின் தென்பகுதியை ரப் அல்-காலி என்று அழைப்பார்கள். அதாவது இப்பகுதியானது 6,50,000 சதுர.கிலோ மீட்டர்கள் தொடர்ச்சியாக வறண்ட மணலை மட்டும் கொண்ட பாலைவனப் பகுதியாகக் காணப்படுகிறது. இதில் 56,980 சதுர.கிலோமீட்டர் சிவப்பு நிற மணலாக உள்ளது. உலகிலேயே தொடர்ச்சியான மணலைக் கொண்ட பெரிய பாலைவனமாக இருப்பது ரப் அல்-காலி என்ற சவூதியின் தென்பகுதிதான். உலக வரைபடத்தில் இதை எம்ட்டி குவார்ட்டர் (Empty Quarter) என்று கூட குறிப்பிட்டிருப்பார்கள்.

சவூதிக்கு வான்வழிப் பயணத்தில் வந்தவர்கள் முதன்முதலில் இந்த மணல் கொண்ட பாலைவனமும், மரம், செடி, கொடி, புற், பூண்டு அற்ற மலைகளும் கண்டு வியக்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.

சவூதி அரேபியாவின் உயரமான மலைப் பகுதி என்றால் ஜபல்-சவ்தா என்ற இடம்தான். 3,133 (10,279 அடி) மீட்டர் உயரம் கொண்டது. இது சவூதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கிழக்குப் பகுதியான அல்-ஹஸா மிகவும் தாழ்வான பகுதியாக அமைந்துள்ளது. அது மிகவும் பெட்ரோல் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. பெட்ரோல் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிப்பது சவூதி அரேபியா என்பது இங்கே குறிப்பிட உகந்தது.

மழை என்பது இங்கே அறிதறிதாய் பொழிவதும் உண்டு. சில சமயம் அது அபாயகரமாய் பெய்வதும் உண்டு.

சவூதியின் தட்பவெட்ப நிலையை எடுத்துக்கொண்டால் உச்சகட்டமான வெயிலும், வரண்ட காற்றுமேயாகும். சவூதியின் தலைநகர் ரியாத்தில் வெப்பநிலையை எடுத்துக்கொண்டால் சராசரியாக ஜனவரி மாதம் முதல் கொண்டு ஜுன் மாதம் வரையிலும் 14.40 செல்சியஸ் முதல் 420 செல்சியஸ் வரையாகும். இருப்பினும் ஜித்தாவில் எடுத்துக்கொண்டால் சராசரியாக 28.80 செல்சியஸ் முதல் 30.60 செல்சியஸ் வரையாகும். இந்திய தட்பவெட்பநிலைக்கு சற்று பொருத்தமாக அமைந்துள்ளது எனில் அது ஜித்தாவின் தட்பவெட்பநிலையே ஆகும். வருடம் முழுவதும் வறண்ட தட்ப வெட்பநிலையே நிலவுவதால் மழையானது வருடத்திற்கு 3 செ.மீட்டருக்கும் குறைவாகவே பொழியும். மற்றபடி சவூதியில் எந்தவிதமான ஜீவநதிகளோ, ஏரிகளோ கிடையாது. நல்ல நீர்நிலைகளோ கிடையாது.

ஒரு இனிய பயணத்தை நோக்கிய ஒட்டகம்... இதுபோன்ற ஒரு சூழலில்... பயணத்தைத் துவங்குமுன், அடுத்த பகுதியில் சவூதியைப் பற்றிய இன்னும் பல செய்திகளைப் பார்த்துவிட்டு தொடரலாம் என்றிருக்கிறேன்.

''நீங்கள் வளமான பகுதியில் பயணம் செய்தால் ஒட்டகம் மேய்வதற்காக அதன் பங்கைக் கொடுங்கள். வறண்ட பகுதியில் பயணம் செய்தால் பயணத்தை விரைவுபடுத்துங்கள் (நீங்கள்) போய்ச் சேர வேண்டிய இடத்தை விரைந்து சென்றடையுங்கள். நீங்கள் பயணத்தில் இரவில் எங்காவது தங்கினால் வழிப் பாதையை விட்டும் அகன்று தங்குங்கள். ஏனெனில் வழிப்பாதை கால்நடைகள், விஷஜந்துகள், தங்கும் இடமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

வாருங்கள்! படியுங்கள்! மகிழுங்கள்! - கருத்துக்களைத் தெரியுங்கள்.
இன்ஷாஅல்லாஹ் - சந்திப்போம் மீண்டும் -

வஸ்ஸலாம்.

மாலிக் கான்.

2 comments:

Abu Umar said...

உங்கள் ஒட்டகப்பயணம் அருமை!

சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களில் ரியாத் விடுபட்டுவிட்டதே என்று நினைத்தேன். பிறிதொரு விஷயத்தில் அதனை குறிப்பிட்டுள்ளீர்கள்.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது சவுதி அரேபியாதான் என்பது சிலருக்கு புது விஷயமாக இருக்கலாம். உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முதலிடம் வகிப்பது சவுதிதான். எண்ணெய் உற்பத்தியில் 12-வது இடத்திலும், ஏற்றுமதியில் 7-வது இடத்திலும் குவைத் தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (According to year 2003)

http://www.eia.doe.gov/emeu/cabs/topworldtables1_2.html


கச்சா எண்ணெய் இருப்பு விஷயத்திலும் (Crude oil reserves) சவுதிதான் முதலிடம் வகிக்கிறது.

வரிசைப்படி. (Crude oil reserves)
1) சவுதி அரேபியா
2) ஈராக்
3) குவைத்
4) ஐக்கிய அமீரகம்
5) ஈரான்
6) வெனிசுலா
7) ரஷ்யா
8) மெக்சிகோ
9) லிபியா
10) அமெரிக்கா

அன்புடன்
அபூ உமர்

Sardhar said...
This comment has been removed by a blog administrator.