Wednesday, March 02, 2005

தவற விடும் அழைப்புகள்.

தவற விடும் அழைப்புகள் - என்று அழகிய மொழியில் சொல்வதை விட (மிஸ்டு கால்ஸ்) ‘MISSED CALLS என்று பழகிய மொழியில் சொன்னால் தான் பலருக்கும் பட்டென்று புரியும்.

ஆம்! நம்மில் பலருக்கும் ஆறாவது விரலாகவே ஆகிவிட்ட கைத் தொலைபேசியில்(MOBILE PHONE) ஏதேனும் அழைப்புகளை நாம் தவற விட்டு விட்டால் - அதுவும் நம் உயர் அதிகாரிகளிடமிருந்தோ,நெருங்கிய உறவினர்-நண்பர்களிடமிருந்தோ வந்ததாக இருந்து விட்டால்- அந்த எண்ணிற்கு நாம் மீண்டும் தொடர்பு கொள்ளாதவரை நமக்கு உறக்கமே வருவதில்லை.

ஆனால் விபரம் அறிந்த நாள் முதல் தினமும் 5 வேளை நாம் கேட்கிற அழைப்பான அஃதான் என்கிற தொழுகைக்கான அழைப்பை - மகத்தான ஓரிறையை அவனது இல்லத்தில் சந்திப்பதற்கு விடுக்கப்படுகின்ற அழைப்பை - நம்மில் பலர் முக்கியத்துவமானதாக ஏனோ கருதுவதில்லை. (மகத்தான அந்த பேரிறைவனோ பிடரி நரம்பை விடவும் நமக்கு நெருக்கமானவனாக இருக்கின்றான்)

தனது அழைப்பு அலட்சியப்படுத்தப்படும் போதும்,புறக்கணிக்கப்படும்போதும், அல்லது
உண்மையிலேயே கவனிக்கப்படாத நிலையில் கூட அற்ப மனிதர்கள் கோபத்திலும் அங்கலாய்ப்பிலும் கொந்தளிக்கிறார்கள். ஆனால் எல்லாம் வல்ல ஏகனோ தன் வீட்டு அழைப்பை மதியாதவர்களுக்கும் மீண்டும் மீண்டும் உணவளிக்கவும்-இரட்சிக்கவும்-பரிபாலிக்கவுமே செய்கின்றான்.

ஆம்! இத்தகைய மனிதர்களுக்கு தாம் அடக்கம் செய்யப்படும் வரை (இறை புறத்து அழைப்புகளுக்கு பதிலளிக்க) அவகாசம் இருக்கத்தான் செய்கிறது. இதுவும் இறைவனின் மாபெரும் கருணைகளுள் ஒன்று.

அந்த அவகாசத்தையும் தவற விட்டால்.. அழைப்பை ஏற்காவிட்டால்..
தவற விடும் அழைப்புகள் யாவும் தவறி விட்ட அழைப்புகள் ஆகிவிடும்.
அதன்பின்.. அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் தானே..!

(நிச்சயமாக.. தொழுகையானது விசுவாசிகளுக்கு நேரம் குறிக்கப்பட்டே இருக்கிறது)

.. ..அவர்கள் தம் தவணையை அடைந்து விட்டால் யாதொரு கணப்பொழுதும் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்..(அல்குர் ஆன்)

நன்றி: tamilmuslim.com

No comments: