Monday, March 28, 2005

இஸ்லாம் ஓர் அறிமுகம்

உலக மக்கள் சமுதாயம் ஆன்மீக நெறிகளுக்கு ஒவ்வொரு மதத்தைச் சார்ந்துள்ளனர். அவை போதிக்கும் வணக்க வழிபாட்டு முறைகளைக் கலாச்சார நெறிகளைப் பின்பற்றி வாழ்கின்றனர். நாம் வாழும் பாரத நாட்டில் பல்வேறு மொழியினர் வாழ்வது போல் பல்வேறு மதத்தவர்களும் வாழ்கின்றனர். பெரும்பான்மை சமுதாய மக்கள் பின்பற்றுகின்ற இந்து மதம் முதல் சிறுபான்மையோர் பின்பற்றுகின்ற இஸ்லாமிய மார்க்கம், கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், பௌத்த மதம் ஆகியவையும் உள்ளன. இம்மதங்கள் தங்களுக்கென வேதங்களைக் கொண்டுள்ளன. இவ்வேதங்கள் அதனைப் பின்பற்றும் சமுதாயத்தவர்களுக்கு ஆன்மீக நெறிகளைப் போதிக்கின்றன. இம்மதங்கள் நீங்கலாக யூத மதமும் உள்ளது. மேலும் எம்மதத்தையும் சாராமல் வாழும் நாஸ்திகர்களும் உள்ளனர். இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கம் குறித்த ஓர் அறிமுகத்தை சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்வடைகிறோம்.

ஒவ்வொரு மதமும் தங்களுக்கென வேதங்களைக் கொண்டுள்ளன. இந்து மதம் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களையும், மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணங்களையும், சீக்கிய மதம் குருகிரந் என்ற சட்ட நூலையும், கிறிஸ்தவ மதம் பைபிளையும் வேதங்களாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் அருள்மறைக் குர்ஆன் முஸ்லிம்களின் வேதம் என்று கூறுவோரும் உண்டு. முஸ்லிம்களில் சிலரும் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறும் நிலையையும் நாம் காண்கிறோம். ஆனால் வல்ல அல்லாஹ் அருள்மறையில் இவ்வேதம் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்காகவும் அருளப்பட்டது என்பதனை

"ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவுள்ள சத்திய, அசத்தியத்தை பிரித்து அறிவிக்ககூடிய இக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. '' - 2:185 எனக் குறிப்பிடுகின்றான்.

ஆக ஒவ்வொரு மதத்தவரும் தங்களுக்கென அருளப்பட்ட வேதம் என்று கூறிக்கொள்வதைப் போல் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் அருளப்பட்டது என முஸ்லிம்கள் கூறவியலாது மாறாக குர்ஆனிய கோட்பாடுகளை அப்படியே பின்பற்றி வாழ்பவர்களே முஸ்லிம்கள் என்று நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பிறமதத்தவர்களின் வேதங்களை ஆராயந்தால் சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது அவை:

(1) கால சமய சூழ்நிலைகளுக்கேற்ப இவ்வேதங்களில் மனிதக் கரங்களால் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வேதங்களின் சில வசனங்கள் சேர்க்கப்பட்டு மாற்றப்பட்டு, நீக்கப்பட்டு, திருத்தப்பட்டு அருளப்பட்ட உண்மைப் பொலிவினை இழந்து விட்டன.
(2) இவ்வேதங்கள் அருளப்பட்ட மூல மொழியில் இவை பாதுகாக்கப்படவில்லை.
(3) இவ்வேதங்கள் அருளப்பட்ட மூலமொழி பல இன்று உலகில் நடப்பில் இல்லை.
(4) பைபிளில் ''இசக்கியேல்'' என்னும் அதிகாரம் நம் குடும்பத்தார்களுடன் இருந்து படிக்க முடியாத அளவுக்கு ஆபாசம் மிகுந்து காணப்படுவது இறைவேதம் இப்படியும் இருக்குமா? என்று சிந்தக்க வைக்கிறது.
(5)இந்து மத சட்ட நூலாகிய ''மனுஸ்மிருதி'' அதன் வேத வசனங்களை படிப்பது மனனம் செய்வது பிறருக்கு மந்தரிப்பது போன்றவற்றை ஒரு சாரார் மட்டுமே (உயர் சாதியினர்) செய்யவியலும் என்றும் பிறர் அதனை செய்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுமாறும் உத்திரவிடுகின்றது. அதேபோல் ஒரு குற்றத்தைச் செய்தவன் என்ன சாதியில் இருக்கிறான் என்பதனை வைத்து தண்டனையில் வித்தியாசப் படுத்துகின்றது. இவ்வாறு தீண்டாமைக்கு வழிகோலும் அத்தனை அம்சங்களும் மலிந்து காணப்படுகின்றன.
(6) உலகம் விஞ்ஞான கண்டு பிடிப்புகளில் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அதன் தீர்வுகளை அதனால் எழும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவியலாது பிறமத வேதங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன..

அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறைக் குர்ஆனோ மேற்கூறிய அத்தனை பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு பொலிவுடன் திகழ்கிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருள்மறைக் குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே எந்த மாற்றமின்றி மூல மொழியில் (அரபியில்) அப்படியே உள்ளது. மனித கரங்களின் தீண்டுதலுக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை வல்ல அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டதை அருள்மறையின் வசனம் கூறுகிறது

15:9- நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

ஒட்டுமொத்த மனித சமுதாயமும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கண்டு வியந்து கொண்டிருக்கும் போது இஸ்லாம் மட்டும் அல்லாஹ்வின் அற்புதங்கள் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது எனவும் விஞ்ஞான உண்மைகள் குர்ஆன் கூறும் தீர்வுகளுக்கு எவ்வாறு பொருந்திப் போகின்றது என விளக்குகிறது. மனிதனின் படைப்பு, வானம், பூமி, கோள்களின் சுழற்சி என ஒவ்வொன்றின் வரையறைகளையும் அருள்மறை ஒளியில் ஆராயும் அறிவியலார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்துணை செய்திகளைக் கூறும் இந்நூல் உண்மையிலேயே இறைவேதம் தான் என உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை நாம் அறிகிறோம்.

உதாரணமாக ஃப்ரான்ஸைச் சார்ந்த விஞ்ஞானி மாரிஸ் புகைல் அவர்கள் குர்ஆனின் மொழியாக்கத்தைப் படித்து அதன் அறிவியல் அற்புதத்தை முழுமையாக அறிய வேண்டுமானால் அதன் மூல மொழியில் படிக்க வேண்டும் என்றெண்ணி அரபி மொழியைக் கற்று அதன் அறிவியல் உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொன்னது இவ்வுலகம் அறிந்த செய்திதான். ஆக எந்த கால கட்டத்திலும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருப்பதே இறைவேதம் என்பதற்கு முதல் அளவுகோலமாகும். அந்தத் தகுதி முழுக்க முழுக்க அருள்மறைக் குர்ஆனுக்கு மட்டுமே உண்டு என்பது நிதர்சனமான உண்மை.

இறைக்கோட்பாடு
ஒவ்வொரு மதத்தின் அடிப்படையும் அது கொண்டுள்ள இறைக்கோட்பாட்டைப் பொறுத்ததாகும். வேதங்களை அருளிய இறைவன் எத்தகைய தன்மைகளுடன் திகழ்கிறான் என்பதனை இவ்விறைக் கோட்பாடுகளே பறைசாற்றுகின்றன. எப்பொழுதெல்லாம் உலகத்தில் அநீதி தலைவிரித்தாடுகிறதோ அப்பொழுது அங்கு நீதியை நிலைநாட்ட கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்று பகவத்கீதை கூறுகிறது. இவ்வாறு பத்து அவதாரங்கள் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை என்று வினவினால் மூன்றிலிருந்துத் துவங்கி முப்பத்தி முக்கோடி கடவுளர்கள் உள்ளதாக அதற்கு பதில் கூறுவர் ஆனால் சந்தோக்ய உபநிஷம் அத்தியாயம் 6 உட்பிரிவு 2 ஸ்லோகம். "ஏகம் எவதித்யம்" (அவன் ஒருவனே இரண்டல்லாத ஒருவன் மட்டுமே) என உறுதிபடக் கூறுகின்றது.

வேதங்கள் அருளப்பட்ட யூத கிறிஸ்தவர்களோ சத்தியத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர்களாகிய உஜைர்(அலை), ஈஸா(அலை), ஆகியோரை இறைவனின் மகனாக்கி முத்தெய்வ கொள்கைக்கு வித்திட்டனர். ''அன்பே கடவுள்'' என சிலை வணக்கத்தை எதிர்த்துப் போதித்த புத்தரே பௌத்தர்களின் கடவுளானார்.

ஸ்ரீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளப்பதுவும் எந்நாள்? என்று பகுத்தறிவ வாதம் பேசிய நாஸ்திகவாதிகளுக்கோ சிலை வணக்கம் எட்டிக்காயாய் கசந்தது ஒரு காலம். கற்சிலைகளுக்கு நீங்கள் செய்யும் பூஜை புனஸ்காரம் முட்டாள் தனமானது என்று நீட்டிய முழக்கிய பகுத்தறிவுவாதிகள் இக்கொள்கையைப் போதித்த பெரியாரையே சிலை வடித்து அவருக்கு ஆண்டு தோறும் மாலையிட்டு மகிழும் மகிமையை என்ன சொல்வது? இப்படி இறைக்கோட்டுபாடுகள் சிதைந்து சீரழியும் இந்நிலையில் இஸ்லாமிய இறைக்கோட்பாடு என்ன ? என்று பார்ப்போம்.

அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்:

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 112:1
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:2
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. 112:3
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. 112:4

திருமறையின் இவ்வசனங்கள் இறைவனின் இலக்கணத்தை மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்கின்றன.

1) அவன் ஒருவனே
2) அவன் எந்தத் தேவையுமற்றவன். தேவை என்று இருந்தால் பிறரைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.
3) அவனுக்கு சந்ததிகள்(பிள்ளைகள்) இல்லை, (மூதாதையரும்) பெற்றோரும் இல்லை
4)அவனைப் போன்று வல்லமையும் சக்தியும் பொருந்திய வேறு யாரும் , எதுவும் இல்லை.

அவனின் தன்மைகள் குறித்து மற்றொரு வசனம் கூறுவதைப் பாருங்கள்:

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.2:255

இவ்வசனம் வல்ல இறைவனின் தன்மையை நமக்கு விவரிக்கின்றது. அவையாவன
1) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன். தகுதியானவன் வேறுயாருமில்லை.
2) அவன் மரணிக்காத நித்திய ஜீவன்
3) அவனுக்கு களைப்போ தூக்கமோ சிறிதளவும் இல்லை.
4) வானம், பூமியிலுள்ள அனைத்துக்கும் அவனே அதிபதி.
5) அவனின் அனுமதியின்றி எவரின் பரிந்துரையும் இல்லை.
6) படைப்பினங்களின் முன், பின் உள்ளவற்றை (நடந்தை, நடக்க இருப்பவை குறித்து) அவனே நன்கறிந்தவன்
7) அவனின் விருப்பமில்லாமல் எந்தப் படைப்பினமும் அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து எதையும் அறியும் சக்தி பெறவில்லை.
8) அவனின் ஆட்சி அதிகாரம் வானம் பூமியில் விசாலமாய் பரவியுள்ளது.
9) அதனை நிர்வகிப்பதில் எந்தச் சிரமும் அவனுக்கில்லை.

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனோ (எல்லாப்) பார்வைகளை (யும்)அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். 6:103 .

அல்லாஹ்வை நம்மால் காணமுடியாது. இருப்பினும் நம்மை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை விளங்குகிறோம். இதுபோன்று இறைக்கோட்பாட்டை இஸ்லாம் விவரிக்கும் வசனங்கள் பல உள்ளன. இருப்பினும் விரிவஞ்சி ஆதாரங்களைக் குறைக்கிறோம்.

படைத்த இறைவனின் வல்லமையை இவ்வாறு இஸ்லாம் கூற வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களின் பைபிளில் '' வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்து விட்டு இறைவன் களைப்படைந்து ஏழாவது நாள் ஒய்வெடுத்ததாக கூறுகிறது. துயில் கொள்ளும் இறைவனை எழுப்ப அதிகாலையில் ''சுப்ரபாதம்'' பாடி துயில் களையச் செய்யும் துரித ஏற்பாட்டை இந்து மதத்தினர் செய்வதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு இறைவனின் மாபெரும் வல்லமை மதங்களால் மாசுப்படுத்தப்படுகிறது.

சாதாரண மனிதனைப் போல் கடவுள் தேவையுடையவனாக, களைப்புடையவனாக, துயில் கொள்ளக்கூடியவனாக, தாய், தந்தை, மனைவி, மக்களுடன் இருப்பதாகக் கூறி போலி சித்தாந்தங்களைப் போதிக்கின்றன. இந்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இஸ்லாம் கூறிய இறைக்கோட்பாட்டைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இஸ்லாம் இறைவனை நம்பச் சொல்லும் முறையில் கூட அது எடுத்துவைக்கும் வாதம் அறிவுப்பூர்வமானது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். அதனை சற்று சுருக்கமாகக் காண்போம்.

1.படைத்தல்
ஏக இறைவனாகிய அல்லாஹ் எல்லா படைப்பினங்களையும் படைத்தவன் என்று இஸ்லாம் கூறுகிறது. படைப்பது இறைவன் தான் என்பதில் நாத்திகர்கள் தவிர எல்லா மதத்தவர்களும் ஏற்றுக்கொண்ட சித்தாந்தம் தான். இருப்பினும் படைப்பின் வல்லமையை இஸ்லாம் மட்டுமே பிற மதங்களைக் காட்டிலும் தெளிவாகக் கூறுகிறது.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் மனிதனும் படைக்கிறான், இறைவனும் படைக்கிறான். இவ்விருவரின் படைப்புகளும் வித்தியாசப்படுத்தி காட்டுவது இஸ்லாமே. மனிதனின் படைப்புக்கு மூலப்பொருள் தேவைப்படுகிறது. முயற்சி காலஅளவு என பட்டியல் நீளுகிறது. அவன் படைத்த அப்பொருளின் முடிவு எப்படி இருக்கும் என்பதை அவனால் அறியமுடியாது. மனிதன் படைத்த பேனா எவ்வளவு நாள் அவனிடம் இருக்கும் பின்னர் யாரிடம் செல்லும்? பின்னர் அப்பேனாவின் முடிவு எப்படி? என்பதை படைத்த மனிதனுக்கு கூடத் தெரியாது. ஆனால் படைத்த வல்லோனாகிய இறைவனுக்கோ மூலப்பொருள் எதுவும் படைப்புக்குத் தேவையில்லை. அவன் "ஆகுக" என உத்திரவிட்டால் உடனே ஆகிவிடும் படைத்த அப்பொருளின் வாழ்நாள் உறைவிடம் அனைத்தையும் அவனே நன்கறிந்தவன். அல்லாஹ் கூறுகிறான் (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. 2:117.

ஆக படைத்தவன் என்று நம்பினால் மட்டும் போதாது. அவனது பிற தன்மைகளையும் வல்லமைகளையும் சேர்த்தே ஒருவன் நம்பவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

2. வணக்க வழிபாடுகள்
படைத்ததை நம்பியவர் அந்த படைத்த வல்லோனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்ய வேண்டும். அந்த வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே செய்யவேண்டும். அவனைத் தவிர வேறு எவர்க்கும் செய்யக்கூடாது என இஸ்லாம் போதிக்கிறது.

அருள்மறையில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
6:162. நீர் கூறும்; ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அதாவது தொழுகை, பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல் சிரம்பணிதல் போன்ற வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அது அல்லாஹ்வைத் தவிர வேறு எவர்க்கும் நிச்சயமாகச் செய்யக்கூடாது என்று இஸ்லாம் உறுதியாகக் கூறுகிறது. அருள்மறைநெடுகிலும் இறைத்தூதர்கள் தம் சமுதாய மக்களுக்கு வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மட்டும் செய்யுங்கள் என்று போதித்ததால் பட்ட சிரமங்களை அதிகம் காணலாம்.

ஆக படைத்ததை நம்பிய சமுதாய மக்கள் வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வை வணங்கியதோடு அவனுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி வைக்கும் என சில சிலைகளையும் வணங்கினர். இந்நிலை நபி நூஹ்(அலை) அவர்கள் காலம் துவங்கி இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் காலம் வரை தொடர்கிறது. இன்னும் சொல்லப்போனால் இன்னும் உள்ளது. இஸ்லாம் கூறும் சித்தாந்தத்திற்கும் இந்துமதச் சித்தாந்தத்திற்கும் வேறுபாடு வெறும் 'S தான்

இஸ்லாம் கூறுகிறது "Everything is God's" (எல்லா பொருட்களும் இறைவனுக்குறியது).
ஆனால் இந்துமதமோ "Everthing is Gods" (எல்லாப் பொருட்களும் கடவுள்களே) எனக்கூறுகிறது. அதாவது மரம், செடி, கொடி, எலி, புலி, குரங்கு, காற்று, நெருப்பு என படைக்கப்பட்ட ஒவவொரு பொருளையும் வணங்கும் நிலையைக் காண்கிறோம்.

ஆக வணக்க வழிபாடுகளில் இறைவனைத் தவிர எவருக்கும் தகுதியில்லை என்று இஸ்லாம் உரக்க ஒலிக்கிறது. வேதம் கொடுக்கப்பட்ட மதங்களாகிய கிறிஸ்தவமும், யூதமும் முறையே இறைத்தூதர்களாகிய ஈஸா(அலை), உஜைர்(அலை) ஆகியோரை இறைத்தன்மை பொருந்தியோராய்க் கூறுவதை இங்கு குறிப்பிட்ட விரும்புகிறோம். இஸ்லாம் அருள்மறை அருளப்பெற்ற நபி முஹம்மது(ஸல்) அவர்களை இறைத்தூதர் என்றும் அல்லாஹ்வின் அடியார் என்றுதான் நம்புமாறு கூறுகிறதே ஒழிய இறைத்தன்மையின் கடுகளவு கூட நபிக்கு இருப்பதாக கூறவில்லை.

3. பெயர் மற்றும் தன்மைகள்
இறைவனின் தன்மைகள் மனிதன் போன்றே பார்ப்பது, கேட்பது, உணர்வது, கண்காணிப்பது என்று பல்வேறுபட்ட தன்மைகள் இருப்பினும் அவனின் எந்தத் தன்மையையும் உருவகிக்க கூடாது. அவனைப் பற்றிக் கூறப்பட்ட செய்திகளை அவனின் தன்மைகளை அப்படியே நம்பவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான். (அல்குர்ஆன் 20:5)

இவ்வசனத்தில் அல்லாஹ் அர்ஷின் மீது இருப்பதாகக் கூறுகிறான் நாமும் அவன் அர்ஷில் உள்ளான் என்று உருவகிக்காமல் நம்புதல் வேண்டும். மாறாக இப்படி இருக்கிறான். அப்படி அமர்ந்திருக்கிறான். அவனின் கைகள் இப்படி கால்கள் இப்படி என உருவகிக்க கூடாது. மேலும் படைத்தவன் அல்லாஹ்வே எல்லா பணிகளையும் நிர்வகிக்கிறான். இந்து மத சித்தாந்தம் கூறுவதுபோல் படைத்தலுக்கு ஒருவன் காப்பதற்கு ஒருவன் அழிப்பதற்கு ஒருவன், கல்விக்கு ஒரு கடவுள், செல்வத்துக்கு ஒரு கடவுள், வீரதீரத்துக்கு என்று ஒரு கடவுள் என கடவுளின் தன்மைகளைக் கூறுபோட்டு கடவுள் என கடவுளின் தன்மைகளைக் கூறுபோட்டு கடவுள்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதை இஸ்லாம் முற்றிலும் தடைசெய்கிறது. மேலும் கடவுளுக்கு இருப்பது போன்ற வல்லமை அல்லது சிறப்பு வேறு எவர்க்கும் கொஞ்சமாவது உள்ளது என்று கூறுவதைக் கூட இஸ்லாம் முற்றிலும் தடுக்கின்றது. அவ்வாறு செய்வது பெரும்பாவம் என எச்சரிக்கிறது. அப்படிச் செய்யும் செயல்களையே இணைவைத்தல் (ஷிர்க்) என்று கூறி இஸ்லாம் ஏக இறைக்கோட்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

மனிதனுக்கு இருக்கும் தேவை, ஆசை, காமம் போன்ற சிற்றின்ப சில்மிஷங்கள் இறைவனைத் தீண்டுவதேயில்லை என்பதில் இஸ்லாம் உறுதியாய் இருக்கிறது. ஆனால் இந்து மதப்புராணங்களில் வரும் கடவுளோ தனது படைப்பினங்களாகிய பெண்கள் கங்கை நீரில் நீராடும் போது அவற்றின் ஆடையை ஒழித்து வைத்துக் கொண்டு காமலீலைகள் புரிந்ததாக கடவுள் கோட்பாட்டைக் கேலி செய்வதைக் பார்க்கின்றோம்.

ஆயர்பாடியில் வெண்ணை திருடுவது முதல் கோகுலப் பெண்களிடம் கடவுள் புரியும் சரசம் வரை இப்படியும் இறைக்கோட்பாடா? என்று நெகிழவைக்கிறது.

மற்றொருபுறம் கிறிஸ்தவர்கள் தங்கள் மத குருமார்களாகிய பாதிரிகளை தெய்வநிலைக்கு உயர்த்துகிறார்கள். கிறிஸ்தவ சர்ச்சுகளின் உள்ள பாவமன்னிப்பு அறையில் சென்று ஒரு கிறித்தவர் தாம் செய்த அநீதங்களை பாதிரியாரிடம் எடுத்துக் கூறுகிறார். அவர் பிறருக்கு இழைத்த அநீதிகளைச் செவியுற்ற குற்றத்தில் சிறிதும் பாதிக்கப்படாத அப்பாதிரி எந்த தங்கு தடையுமின்றி அக்குற்றவாளிக்கு பாவமன்னிப்பு வழங்கி அன்று பிறந்த பாலகன் போல் பவித்ர புத்திரனாக ஆலயத்தைவிட்டு வெளியேற்றும் அறிவுக்கு பொருத்தமில்லாத இச்செயல்களையும் நாம் காண்கிறோம்.

இஸ்லாமோ சமூகத்தில் நிலவும் எந்தச் குற்றத்துக்கும் தீர்வு மட்டுமே சொல்லாமல் அக்குற்றம் வேரோடும் வேரடி மண்ணோடும் களை எடுக்கப்பட குற்றவியல் சட்டங்களை பணக்காரனிலிருந்து பாமரன் வரை பாகுபாடுகாட்டாமல் வழங்குகிறது. ஆளுக்கு ஒரு நீதி சாதிக்கு ஒரு அநீதி என்ற பாரபட்சம் இஸ்லாத்தில் எள்முனையும் இல்லை. இதனை அருள்மறையின் வசனம் எவ்வாறு விளக்குகின்றது என்று பாருங்கள்

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1).

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் 9:13).

தொட்டால் தீட்டு, பாவி உன் நிழல்பட்டால் தீட்டு என்ற சாதிக்கொடுமை

மனிதன் மிருகத்திலும் கேடாக நடத்தப்படும் இழிநிலை.

சடை வளர்த்த முனிவர்கள் கொடுத்தார்கள் விடை

நாய் நுழையும் வீதியில் மனிதா நீ நுழையத் தடை

இப்படித் தீண்டாமைக் கொடுமை கொடிபட்டிப் பறக்கும் நம் பாரத்தில் தான் படைத்த கடவுளைத் தரிசிப்பதிலே கூட பாகுபாடு. தீண்டாமை வெறி. சாதிக் கலவரம். வீதிக்கொரு, வீட்டுக்கொரு கடவுள். பாரபட்சம் காட்டி விட்டு பகுத்தறிவு வாதம் பேசுவது.

இஸ்லாம் கூறும் இறைவழிபாடாகிய தொழுகையில் ஆண்டி முதல் அரசன் வரை படைத்த இறைவன் முன்பு சரிசமம் என்ற பாகுபாடற்ற நிலைப் பேணப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோமா? இல்லையா? சற்று சிந்தித்து பாருங்கள்.

மனிதனின் படைப்பில் எந்த வித்தியாசமுல்லை. ஆனால் அவன் செய்யும் நல்லறங்களாலும் இறைவனுக்கு அஞ்சி தன் வாழ்வை எவன் புனர் நிர்மாணம் செய்து கொள்கிறானோ அவனே சிறந்தவன் என்றும் மேலே குறிப்பிட்ட இறைவசனம் எத்தனை அழகாகக் கூறுகிறது. ஆக இறைக்கோட்பாடு என்பதே ஒரு மதத்தின் முதுகெலும்பு. பிற மதங்கள் சமயங்களைக் காட்டிலும் இஸ்லாம் கூறும் இறைக்கோட்பாடு அறிவுப்பூர்வமாக தர்க்க ரீதியாக ஆன்மீக ரீதியாக எவ்வாறு அலசினாலும் உயர்ந்து விளங்குவதை நீங்கள் உணரவியலும்.

ஒருவர் முஸ்லிமாக இருந்தால் அவர் இஸ்லாம் கூறும் இச்சித்தாந்தங்களை அப்படியே பின்பற்றுபவராக இருக்கவேண்டும். மாறாக பெயர் தாங்கிகளாக உள்ள சில முஸ்லீம்களின் தர்கா வழிபாடு சந்தனக்கூடு, கொடி எடுத்தல், நேர்ச்சை விநியோகம், தாயத்தது மந்தரித்து கொடுத்தல் போன்றவற்றைப் பார்த்துவிட்டு இஸ்லாம் இப்படித்தான் இருக்கிறது போலும் என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. இனி இஸ்லாம் மேலும் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

இஸ்லாம் பற்றிச் சுருக்கமாக கூறுவதென்றால் அதன் கூற்றை மூன்று விஷயங்களில் அடக்கிவிடலாம்.

1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று உள்ளத்தால் உறுதிபூண்டு நாவால் மொழிந்து செயலால் அமுல்படுத்துவது.

2) முஹம்மது நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துதரும் அவனின் அடியாருமாகும் என்று உறுதியாக நம்புவதோடு நாம் வாழும் வாழ்க்கைக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகிறான்

33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

மற்றொரு வசனத்தில்

33:31. அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
3:31. (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்; ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்.'' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை.

ஆக நபி முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் அல்லாஹ்வின் அடியார் என்றும் சாட்சி கூறி அவர்கள் நடந்து காட்டிய வழியில் அதாவது அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வது.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் விளக்கமாகவும், வாழ்வில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கூறும் வகையிலும் தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். ஆக ஏக இறைவனின் அருள்மறையும், அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உறைகல்லாக ஒப்புநோக்கி நடக்க உதவுகின்றன.

3) வல்ல இறைவன் படைப்பினங்களைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒரு நாள் மரணிக்கச் செய்து பின்னர் உயிர் கொடுத்து எழுப்புகிறான். பின்னர் அவற்றிடம் அவைகள் செய்த நல்ல மற்றும் தீய செயல்களை விசாரித்து நன்மைக்குப் பரிசாக சுவனத்தையும் தீமைக்குத் தண்டனையாக நரக வேதனையையும் தருவான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஒவ்வொரு படைப்பினமும் அந்த கேள்வி கணக்கு நாளில் தீர விசாரிக்கப்பட்டு எள்முனையளவும் அநீதி இழைக்கப்படாமல் தீர்ப்பு பெறுவர்.

இதே சித்தாந்தம் இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ மதங்களிலும் உள்ளது. ஆனால் இந்து மதமோ மரணத்துக்குப் பின் மனிதன் மறுபிறவி எடுக்கிறான். அவரவரின் கிரியைகளுக்கு ஏற்ப அவன் மிருகமாகவோ, பறவையாகவோ இப்படி பல பிறவிகள் எடுப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆக இன்று மனிதன் நாளை மரணித்தால் அவன் நாயாக பிறவி எடுப்பான் அல்லது நாய் மனிதனாக மறுபிறவி எடுக்கிறது. இச்சித்தாந்தப்படி உலக மக்கள் ஜனத்தொகை கோடி கோடியாய் பல்கிப் பெருகிவரும் இந்நாளில் மறுபிறவி தத்துவம் அறிவுப்பூர்வமானதாக இல்லை. மேலும் நாயாய் இருந்தது எதற்காக மனிதனாக பிறவி எடுத்தான் அல்லது மனிதனாக இருந்தவன் எதனால் நாயாய் போனது என்பது பிறவி எடுத்த நாய்க்கோ, மனிதனுக்கோ உணர்த்தப்படாத வகையில் கடவுள் தண்டனையை அல்லது பரிசை வழங்கிவிடுகிறார். இப்படி தர்க்கரீதியாகவும் தவறாக உள்ளது.

ஆக இறைவனின் வேத வசனங்களும், இறைத்தூதரின் அருள் மொழிகளும், மறுமை சிந்தனையையூட்டி கட்டுபாடற்ற மனித வாழ்வுக்கு சிறந்த ஒரு கடிவாளமாக அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் மன அமைதி என்று வீதிவீதியாய் அலையும் மனிதர்களுக்கு சாந்தியும் சமத்துவமும் வழங்கி சரியான பாதையும் காட்டுகிறது இஸ்லாம்.

தீண்டாமைக்குத் தீர்வு இஸ்லாம் மட்டுமே சிறந்த வழி. இறைவன் பிறஜீவராசிகளுக்கு வழங்கியுள்ள அறிவாகிய தொட்டறிதல், ருசித்து அறிதல், முகர்ந்து அறிதல், கேட்டறிதல், பார்த்தறிதல் என்னும் ஐந்து அறிவுடன் நன்மை தீமையை எடைபோட்டுப் பார்த்து அதன் பின்விளைவுகளையும் உணர்ந்து சரியான பாதையைத் தேர்வு செய்யும் பகுத்தறிவினைப் பயன்படுத்தி சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைப் பற்றியும் அது மனிதனின் வாழ்வை எவ்வாறு இம்மை மறுமையில் செம்மையுறச் செய்கின்றது என்பதனை எல்லாம் பிறமதக்கோட்பாடுகள், கலாச்சாரங்கள் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்து சீர்தூக்கிப் பார்த்து சீரிய முடிவெடுக்க வேண்டுகிறோம்.

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். அதன் வாசல்கள் என்றென்றும் உங்களுக்குத் திறந்தேயுள்ளது. ஏகஇறைக்கோட்பாடும், இனிய வாழும் முறையும் உங்கள் வாழ்வில் மணக்கும் தென்றலாக வாசம் வீச சாந்தி நிலவி சமத்துவம் தொடர இஸ்லாம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்:

இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். 2:221.

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. 3:133.

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். 4:124

அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். 33:71

அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சவர்க்கங்களில் விரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான். 48:17.

ஆக்கம்: முஹம்மது ரஃபீக், ஜித்தா
யுனிகோடில் பதிந்தது: அபூ உமர்

2 comments:

இப்னு ஹம்துன். said...

நல்ல கட்டுரை. சற்றே மெருகூட்டி தமிழ்மணத்துக்கு தரலாம்.

Abu Umar said...

இந்த இடத்தில் பதிவு செய்ததன் நோக்கங்கள் பல உண்டு. அதில் ஒன்று இக்கட்டுரையின் கருத்துக்கள், பாதைகள் ஆகிவற்றின் சரி/தவறுகள் பற்றி நமக்குள் பேசப்பட வேண்டும் என்பதாகும்.