Tuesday, March 01, 2005

கதை கதையாம்.

கதை சொல்பவர்கள் பாமர மக்களை தங்கள் பக்கம் கவரக்கூடியவர்களாகத் திகழ்ந்தனர் - திகழ்கிறார்கள். அவர்கள் எதைக்கூறினாலும் அம்மக்கள் அதை அப்படியே நம்பக் கூடியவர்களாக இருந்தனர் - இருக்கிறார்கள்.

இன்றும் பள்ளிவாசல்களில் கதை சொல்லக் கேட்டால் கதையிலுள்ள அபத்தங்களைக்கூட புரிந்து கொள்ளும் சிந்தனை இல்லாமல் மெய்மறந்து, வாய்பிளந்து அந்தக் கதையோடு ஐக்கியமாகிவிடுவார்கள்.

கதை சொல்பவர்களும் கதை கேட்பவர்களின் உணர்வின் போக்கிற்குத் தக்கவாறு கற்பனை சரக்கை மெருகேற்றுவார்கள். இதன் தாக்கத்தை - ''சுபஹானல்லாஹ்'' ''மாஷா அல்லாஹ்'' எனக்கதை கேட்கும் பக்தர்களும் மெய் சிலிர்த்து, புல்லரித்து வெளிப்படுத்துவார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின்...
கொள்கையின் பெயரால் இடைச்செருகல்.
கோஷ்டியின் பெயரால் இடைச்செருகல்.
தலைவர்களின் பெயரால் இடைச்செருகல்.
கதைகளின் பெயரால் இஸ்லாத்தில் இடைச்செருகல்.

பொய்யான ஹதீஸ்களைப் புனைந்து கூறுவதில் கதை சொல்பவர்களும் இடம் பெற்றிருந்தனர். பள்ளிவாசல்களில் அமர்ந்து கதை சொல்லும் பழக்கம் ஆரம்பக் கால முதலே இருந்து வந்துள்ளது. கதை சொல்வதில் திறமை பெற்றவர்கள் பலர் இருந்திருக்கின்றனர்.

இவர்களில் 'தமூமுத்தாரி' என்பவரும் ஒருவராவார். இவர் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலில் கதை சொல்ல அனுமதி கேட்டபோது உமர் (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள். 'அம்ர் பின் ஸர்ரார்' என்பவர் 'அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் காலத்தில் கூஃபாவிலுள்ள பள்ளிவாசலில் அமர்ந்து மக்களுக்குக் கதை சொல்லி வந்தார். அதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தடுத்துள்ளார்கள். (தஹ்தீருல்கவாஸ்)

இப்னு குதைஃபா என்ற பெரியார் சொல்கிறார், கதை சொல்பவர்கள் முற்காலத்திலிருந்தே மக்களின் முகங்களை தங்கள் பக்கம் திருப்புவதற்காக பொய்யான ஹதீஸ்களையும், வெறுக்கப்பட்ட பல சம்பவங்களையும் கூறிவந்தனர். பாமரர்களின் சிந்தனையை சிதற வைக்கும் அறிவிற்கு எட்டாத பல சம்பவங்களையும், அவர்களின் உள்ளத்தை நெகிழ வைக்கும் பல கதைகளையும் சொல்லி வந்தனர்.

சுவர்க்கத்தைப் பற்றிக் கூறினால் அல்லாஹ் தன் நேசர்களுக்காக சுவர்க்கத்தில் முத்துக்கள் பதிக்கப்பட்ட வெள்ளைக் கோட்டையைக் கொடுக்கிறான். அதில் எழுபது மாளிகைகள் இருக்கும். ஒவ்வொரு மாளிகையிலும் ஆயிரம் கூடாரங்கள் இருக்கும்... என்றெல்லாம் பொய்களைக் கூறி, ஆசைகளால் மக்களை தங்கள் பக்கம் கவர்ந்தனர். (தஃவீலுமுக்தலபில் ஹதீஸ்)

பொய்யான கதைகளைப் புனைந்து கூறும் பொய்யர்களின் பித்தலாட்டங்களை அறிந்த அறிஞர்கள் அவர்களின் வேஷங்களைக் கிழித்தெறிய பெரு முயற்சி எடுத்தார்கள். இவ்வறிஞர்களில் 'அஃமஷ்' என்ற பெரியாரும் ஒருவராவார். இவர் ஹிஜ்ரி 147ம் ஆண்டு மரணமடைந்தார்.

இவர் ஒருமுறை பாஸராவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நுழைந்தபோது அங்கே ஒருவர் மக்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். கதை சொல்லிக் கொண்டிருந்தவருக்கு இவர்தான் 'அஃமஷ்' என்று தெரியாது. அப்போது அக்கதை சொல்பவர் ''அஃமஷ் என்பவர் அபூ இஸ்ஹாக் சொன்னதாகச் சொல்கிறார் என்று சொல்லி, ஒரு பொய்யான கதையைச் சித்தரித்துக் கூறினார்.

அப்போது அஃமஷ் அவர்கள், அமர்ந்திருந்த மக்களின் நடுவே சென்று தனது அக்குள் முடியைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு கதை சொல்பவர் அஃமஷை நோக்கி, ''நீர் வெட்கப்படவில்லையா? நாங்கள் ஒரு கல்வி அவையில் இருந்து கொண்டிருக்கிறோம், நீரோ இப்படிச் செய்கிறீரே'' என்றார்.

உடனே ''நான் செய்வது நீர் செய்வதைவிடச் சிறந்தது'' என்று கூறினார். ''அது எப்படி'' என்று கதை சொல்பவர் கேட்டபோது ''நான் ஒரு சுன்னத்தைச் செய்கிறேன், நீர் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர். நான்தான் அஃமஷ், நீர் குறிப்பிட்டது போன்று ஒரு ஹதீஸை நான் உமக்கு சொல்லவில்லையே? நீர் எப்படி நான் சொன்னதாகச் சொன்னீர்?'' என்று சொல்லி மக்கள் மத்தியில் கதை சொல்பவரின் முகத் திரையைக் கிழித்து, அவரது பித்தலாட்டங்களை அடையாளம் காட்டினார்கள். (தஹ்தீருல் கவாஸ்)

ஹதீஸ்களில் பெரும் மேதைகளாகத் திகழ்ந்த இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) இமாம் யஹ்யாப்னு முயீன் (ரஹ்) ஆகிய இருவரும் ''ரஸ்ஸபா'' எனும் இடத்தில் ஒரு பள்ளிவாசலின் உள்ளே சென்றபோது அங்கு ஒருவர் மக்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அவைக்கு அவ்விருவரும் சென்றார்கள். கதை சொல்பவருக்கு அவ்விருவரும் யார் என்பது தெரியாது. அவர் தன் கதையில் அவ்விரு இமாம்களும் சொன்னதாக சுமார் இருபது பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட ஹதீஸை மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

மக்கள் அவருக்கு பல அன்பளிப்புகள் வழங்கினார்கள். அவர் தனது கதையை முடித்ததும் யஹ்யாப்னு முயீன் (ரஹ்) அவர்கள் அம்மனிதரை அழைத்து ''நாங்கள் இருவரும் அறிவித்ததாக ஒரு ஹதீஸை மக்களுக்குச் சொன்னீரே அதை நாங்கள் அறிவிக்கவில்லையே! நீர் எப்படி இதை அறிவித்ததீர்? என்று கேட்டபோது ''யஹ்யாப்னு முயீன் ஒரு மடையர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். யஹ்யா, அஹ்மத் என்ற பெயருடையோர் உங்கள் இருவரையும் தவிர இவ்வுலகில் வேறு யாருமில்லையா? நான் இவர் அல்லாமல் பதினேழு அஹ்மத் பின் ஹம்பலைப் பற்றி எழுதியிருக்கிறேன்'' என்று தான் சொல்லிய பொய்யை சரி செய்ய பல பொய்களைக் கூறினார். இதுவே கதை சொல்லக்கூடியவர்களின் வழக்கமாக இருந்து வந்தது (அல்மஸ்ருஹீன்)

கதைகளின் பெயரால் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறியவர்களை ஹதீஸ் கலையில் தேர்ச்சிப் பெற்ற அறிஞர்கள் இனம் காட்டிய பின்னரும் பல மக்கள் கதை சொல்பவர்கள் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்தனர். காரணம், இவர்கள் மக்களை தங்கள் பக்கம் இழுப்பதும், அவர்களை அழ வைப்பதும் தங்களைப்பற்றி மக்கள் பெருமையாகப் பேசுவதும்தான், கதை சொல்பவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.

எந்த வகைகளிலெல்லாம் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க முடியுமோ அவ்வழிகளையெல்லாம் கையாண்டார்கள். குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகச் சொல்லும்போது, மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே ஹதீஸ்களின் பெயரால் பல கதைகளைச் சித்தரித்துக் கூறினார்கள். (தஹ்தீருல்கவாஸ்)

நபி (ஸல்) அவர்களின் பெயரால், இறைநேசர்களின் பெயரால் இன்னும் - இன்றும் கதை கதையாம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

2 comments:

அபூ முஹை said...

நிர்வாகி அவர்களே!
தொழுகை (பகுதி4) க்கு முன்பே கதை கதையாம் பதிவு செய்யப்பட்டது, இப்போ வரிசைப்படி இல்லையே?

நிர்வாகி said...

சரிசெய்யப்பட்டுவிட்டது.