Wednesday, March 16, 2005

மத்ஹபுகளின் பெயரால் இடைச்செருகல்கள்.

மத்ஹபுகளை பின்பற்றுகின்றவர்களில், மத்ஹபுகளில் பிடிவாதம் கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் மத்ஹபு கூறும் சட்டங்களுக்கு சாதகமாக பல ஹதீஸ்களை புனைந்து கூறினார்கள்.ஒவ்வொருவரும் தாங்கள் பின்பற்றும் இமாமை புகழ்ந்து கூறி, ஹதீஸ்களை உருவாக்கி கூறிவிட்டு அதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகச் சொல்லி விட்டனர்.

"என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார் அவருடைய பெயர் நுஃமான் பின் ஃதாபித், அவர் அபூஹனீபா என்றப் புனைப்பெயரால் அழைக்கப்படுவார். அவர் தனது கையால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தையும், என் சுன்னத்தையும் உயிர்ப்பிப்பார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு பொய்யைத் துணிந்துக் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் அடுத்த மத்ஹபுடைய இமாமை தாழ்த்தியும் பல ஹதீஸ்களை உற்பத்தி செய்தனர். (தாரீகு பக்தாது)
''என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார், அவருடைய பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் (ஷாஃபீ). அவர் என்னுடைய உம்மத்தைக் கெடுப்பதில் இப்லீஸைவிட மிக மோசமானவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

சிலர் தாங்கள் பின்பற்றுகின்ற மத்ஹபு கூறுகின்ற சட்டங்கள் நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறைக்கு மாற்றமாக இருந்தாலும் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக சில ஹதீஸ்களைப் புனைந்து கூறியுள்ளனர்.

''யார் தனது தொழுகையில் கையை உயர்த்துகிறானோ அவனுக்குத் தொழுகை இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர். காரணம் தொழுகையில் கையை உயர்த்தக் கூடாது என்பதுதான் அவர்களின் மத்ஹப் சட்டம். (அஸ்ஸுன்னத் வமாகானதுஹா)
தொழுகையில் இமாம் பிஸ்மியை சப்தமிட்டு ஓதவேண்டுமென்ற மத்ஹபுடையர்கள் அவர்களின் மத்ஹபுக்குச் சாதகமாக பின்வருமாறு ஒரு பொய்யான ஹதீஸை உற்பத்தி செய்து கூறினர்.

''காஃபத்துல்லாஹ்வில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு இமாமாக நின்று தொழுதார்கள் அப்போது பிஸ்மியை சப்தமிட்டு ஓதினார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகக் கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

மத்ஹபு வெறிபிடித்தவர்கள் இது போன்ற பல ஹதீஸ்களை இடைச்செருகல் செய்துள்ளனர். அவை அவ்வப்போது மக்களுக்கு இனம் காட்டப்பட்டு வந்துள்ளது.

2 comments:

nagoreismail said...

ஸலாம்.. நீங்கள் எழுதியிருப்பதில் எனக்கு தெரிந்த ஒரே உண்மை 'மத்ஹப் வெறிபிடித்தவர்கள்..' என்று எழுதியிருந்தீர்களே.. அது மட்டும் தான்.. அவர்கள் மத்ஹப் வெறி பிடித்தவர்கள் தான் அதாவது மத்ஹப் அழிய வேண்டும் என்று வெறிபிடித்தவர்கள் தான் இத்தகைய காரியத்தை செய்திருக்க முடியும்.
நாகூர் இஸ்மாயில்.

Abu Umar said...

மத்ஹப் பிரிவுகளுக்கு சாதகமான இட்டுக்கட்டப்பட்ட ஹதிஸ்கள் அவரவர் மத்ஹப்களில்தான் புழக்கம். அப்படி இருக்கும்போது,

//அவர்கள் மத்ஹப் வெறி பிடித்தவர்கள் தான் அதாவது மத்ஹப் அழிய வேண்டும் என்று வெறிபிடித்தவர்கள் தான் இத்தகைய காரியத்தை செய்திருக்க முடியும்//

என்ற நாகூர் இஸ்மாயில் அவர்களின் கருத்து ஆழமானது.

இதன்படி மத்ஹப் பிரிவினருக்கே (மத்ஹப் வெறிபிடித்தவர்களுக்கு) மத்ஹப் பிடிக்கவில்லையெனும்போது மீதமுள்ள பொதுமக்கள் மத்ஹபை பிடித்து தாலாட்டுவதை நிறுத்திவிடலாம்.

-அபூ உமர்-