Sunday, March 27, 2005

தொழுகையில் பேணவேண்டியவை

முன்னுரை
நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தொழுகை என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள். நாளை மறுமையில் கேள்வி கணக்கின் போது தொழுகையைப் பற்றித்தான் முதன் முதலில் அல்லாஹ் நம்மிடம் விசாரிப்பான். தொழுகை சீராக அமைந்து விடுமென்றால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே இருக்கும். தொழுகை சீரான நிலையில் இல்லையென்றால் ஏனைய அனைத்துமே சீரற்றதாகவே இருக்கும். எனவே இறைவன் மலக்குகளைப்பார்த்து சொல்லுவான், எனது அடியான் ஏதேனும் உபரியான தொழுகைகளை தொழுதிருந்தால் அதனைக் கொண்டு அவனின் பர்ளான தொழுகையில் ஏற்பட்டிருந்த குறைகளை நிறைவு செய்யுங்கள் என்று. ஒவ்வொறு மனிதர்களின் நிலையும் இதே முறையில்தான் அவர்களின் செயல்களைப்பற்றி கணக்கு பார்க்கப்படும். (திர்மிதி)

(முஸ்லிம்களான) நமக்கும் (காஃபிர்களான) அவர்களுக்கும் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதுதான். யார் அதனை விட்டுவிடுகிறாரோ அவர் நிராகரித்தவர் ஆவார். (நஸாயி, இப்னுமாஜா)

உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா? என பெருமானார் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள். அதற்குத் தோழர்கள், இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது என்றார்கள். 'இதே போன்றுதான் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக் கறைகளைப் போக்குகின்றான் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள். (நஸாயி)

பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம், தொழுகை மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான சிறந்த சாதனம் என தெளிவுபட விளக்கியுள்ளார்கள். இதனை மேற்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் உணர்த்துகிறார்கள். தொழுவதினால் ஒருவனின் உள்ளத்தில் நன்றியுணர்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பயனாக இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டிய பாதையில் சிறப்பாக முன்னேறிச் சென்ற வண்ணம் இருக்கின்றான். இறைவனுக்கு கீழ்ப்படியாமை, மாறுசெய்தல் ஆகியவற்றிலிருந்து அவன் தூர விலகிக்கொண்டே செல்கிறான். எப்பொழுதேனும் அவனிடம் தவறேதுவும் நிகழ்ந்து விட்டால்கூட அது அறிந்தும் புரிந்தும் அவன் செய்ததாய் இருக்காது. அறியாமல் ஏற்பட்ட பிழையாகவே இருக்கும். ஆயினும், அதனை உணர்ந்த உடனே அவன் தனது இறைவனின் முன் தலைகுனிந்து விடுகின்றான். அழுதழுது மன்னிப்புக் கோருகின்றான். அதே நேரத்தில் ஒருவன் தொழுகையாளியாகவும் இருந்து வெட்கப்படாமல் பாவமும் செய்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனின் தொழுகையில் உயிர் இல்லை என்றுதான் அர்த்தம்.

முஸ்லிம் சமுதாயத்தில் பலர் தொழும்போது கீழ்கண்ட சில தவறுகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் தொழுது வருகிறார்கள். இவையனைத்தும் நபி(ஸல்) அவர்களின் தொழுகை வழிக்கு மாறானதாகும். எனவே இத்தவறுகளிலிருந்து நாம் தவிர்ந்து, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் தொழுது இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வோமாக!

01) கீழ் ஆடைகளை கரண்டைக் கால்களுக்குக் கீழே தொங்குமாறு அணிதல்
மறுமை நாளில் மூன்று பேருடன் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் உண்டு, அவர்கள் மிகப் பெரும் நஷ்டவாளிகள். அவர்கள், (1) கீழாடையை கரண்டைக் காலுக்கும் கீழே இறக்கி உடுத்தியவர், (2) செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டியவர், (3) பொய்ச்சத்தியம் செய்து பொருளை விற்றவர் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். நம்மில் பலர் இதை சர்வசாதாரணமாகக் கருதுகிறோம். இன்னும் சிலர் தொழுகையின்போது மட்டும் தன் கீழ் உடுப்புக்களை கரண்டைக் காலுக்கு மேலே சற்று உயர்த்தித் தொழுகின்றனர். தொழுகை முடிந்ததும் அதை மீண்டும் கரண்டைக்காலுக்கு கீழே இறக்கி விடுகின்றனர். சிலர் பெருமையாக நினைத்துதான் கரண்டைக் காலுக்கு கீழே உடுத்தக் கூடாது என்றும் இன்னும் சிலர் இதனை தவறு இல்லை என்றும் கருதுகின்றனர். இது போன்று உடையணிவது தொழுகையின் போது மட்டுமல்லாமல் எப்பொழுதும் தவிர்ந்துக் கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகும்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக, யாருடைய கீழ் ஆடை கரண்டைக்காலுக்குக் கீழ் தொங்குகிறதோ அப்பகுதியானது மறுமையில் நெருப்பைக் கொண்டு வேதனை செய்யப்படும். (புகாரி)

முஸ்லிம் கிரந்தத்தில் வந்துள்ள ஹதிஸின் படி ஒருவர் கீழ் உடுப்பையோ அல்லது மேல் சட்டையையோ மடக்கி விட்டு (நாகரீகம் இல்லாமல்) தொழுவது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதாகும்.

02) அருவெருக்கத்தக்க வாடையுடைய (பூண்டு, வெங்காயம்) ஆகியற்றை உண்ட உடனோ அல்லது புகைபிடித்து விட்டோ தொழுகைக்காக பள்ளிக்குள் வருதல்''
இத்தாவரப் பொருட்களான (வெங்காயம், பூண்டு) ஆகிய துர்வாடையுடையவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலின் பக்கம் நெருங்கக் கூடாது. ஏனெனில் நிச்சயமாக எவற்றால் மக்கள் இம்சை அடைகிறார்களோ, அவற்றால் மலக்குகளும் இம்சை அடைகின்றனர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)புகைபிடித்து விட்டு பள்ளிக்குள் வருவதால் புகைபிடித்தவர் வாயிலிருந்து வரக்கூடிய கருகிய வாடையானது அருகில் இருப்பவரை அருவெருக்கத்தக்தாக மாற்றுகிறது. இதன் மூலம் அருகிலிருப்பவர் தொழுகையில் கவனச்சிதைவோடு தொழும் நிலை உருவாகிறது. மக்கள் வெறுப்பதை மலக்குகளும் வெறுக்கிறார்கள். புகைபிடித்தல் பழக்கமானது இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று. இஸ்லாமிய சமுதாய மக்கள் இத்தீய பழக்கத்தை கைவிடுவதே சாலச் சிறந்தது.

03) இகாமத் கூறப்பட்டவுடன் எட்டுக்களை விரைவுபடுத்தியும், ஓடியும் வந்து தொழுகையின் வரிசையில் சேருதல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்துக்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள். (புகாரி, முஸ்லிம்)

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர். தொழுகையை முடித்ததும், உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், நாங்கள் தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்றனர். அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும் போது அமைதியாக வாருங்கள். தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவ்வாறு ஓடிவந்து தொழுகையில் சேருவது ஏற்கனவே தொழுது கொண்டிருப்போரின் சிந்தனையை சிதறடிக்கச் செய்யும் செயலாக அமைந்து விடுகிறது. இதைவிடச் சிறந்தது தொழுகைக்கான பாங்கு கூறப்பட்ட உடன் பள்ளிக்கு வருதலே ஆகும்.

04) தொழுகைக்கான ஆரம்ப தக்பீரை ருகூவில் கூறுதல்
நம்மில் பலர் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விரைந்து வந்து அத்தொழுகை எந்த நிலையில் இருக்கிறதோ அதோடு சேர்ந்து கொள்கிறோம். இமாம் ருகூவில் இருந்தால் சிலர் ஆரம்பத் தக்பீரை கூறி நெஞ்சில் கைகளை கட்டி பிறகு ருகூவிற்கு தக்பீர் சொல்லி குனிகிறார்கள். தொழுகையின் ஆரம்பத் தக்பீரானது இமாம் நின்ற நிலையில் இருக்கும்போது மட்டுமே கூறவேண்டும்.

05) தொழுகைக்கான நிய்யத்தை தக்பீரின் ஆரம்பத்தில் முணுமுணுத்தல்
எண்ணங்களே செயல்களாக அமைகின்றன. இதற்கு மாற்றமாக தொழுகையின் ஆரம்பத்தில் குறைவான சப்தத்தைக் கொண்டு இந்த நேரத்திற்கான, இத்தனை ரக்ஆத் எண்ணிக்கை கொண்ட தொழுகையை தொழுவதற்காக தக்பீர் கட்டுகிறேன் என்று கூறுதல் நபி(ஸல்) அவர்களின் வழியுமில்லை அல்லது அவரைப் பின் தொடர்ந்து வந்த தோழர்கள் மற்றும் நல்லடியார்களின் வழியுமில்லை.

சில சமயம் ஷைத்தான் லுஹர் தொழுகைகாக அஸர் என்றும் அஸருக்கு இஷா என்றும் நாம் மொழியும் போது மாற்றியமைப்பான். இந்தச் ஷைத்தானின் குழப்பத்திலிருந்து நாம் நம் தொழுகையை பாதுகாத்துக் கொள்ள அமைதியான முறையில் தக்பீர் சொல்லி தொழுவதே நன்று. ஏனென்றால் அந்த நேரத்து தொழுகையை தொழ எண்ணித்தான் தொழும் இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்.

06) தொழுகையில் ஆரம்பத் தக்பீரின் போதும் ருகூவிற்கு செல்வதற்கு முன்னும், பின்னும் மற்றும் மூன்றாவது ரக்அத்திற்காக எழுந்து நிற்கும்போதும் கைகளை உயர்த்தாமல் இருப்பது
நபி(ஸல்) அவர்கள் தொழுகையை துவக்கும்போது தம் தோள் புஜங்கள் வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்குத் தக்பீர் கூறும் போது இவ்வாறு செய்வார்கள். ருகூவிலிருந்து எழும்போதும் இவ்வாறு செய்வார்கள். (புகாரி)

ஜனாஸா, மழைத் தொழுகை மற்றும் ஈத் தொழுகையின் முதல் தக்பீரைத் தொடர்ந்து சொல்லும் மேலதிகமான தக்பீர்களுக்கு கைகளை உயர்த்துதல் அவசியமில்லை. நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் போது (நிற்கும் நிலையில்) தனது கைகளை நெஞ்சின் மீது வைப்பார்கள். (புகாரி, அபூதாவூத்)

07) தொழுகையின் ஆரம்பத்தில் அவூது மற்றும் பிஸ்மில்லாஹ் ஓத தவறுவது
தொழுகையின் ஆரம்ப நிலையில் அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம் மற்றும் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் ஓத வேண்டும்.

(நபியே) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக (அல்குர்ஆன்: 16:98)

நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் பற்றி உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் கேட்டபோது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஒவ்வொரு வசனமாக ஓதுவார்கள் என்று பதிலளித்தார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

08) தொழுகை விரிப்பிற்கு முன் சுத்ரா(தடுப்புப் பொருள்) வைக்காமல் தொழுவது
சுத்ரா என்பது ஒரு பொருள் ஆகும். அது ஒரு சுவராகவும் இருக்கலாம் அல்லது தூணாகவும் இருக்கலாம், தொழுகையின் போது நம்மை முன்னோக்கியிருக்கும் தடுப்பு ஆகும். தொழுகையின் போது நமக்கு முன் யாரும் குறுக்கிட்டுச் செல்லாதவண்ணம் அதை நாம் பயன்படுத்தலாம்.
உங்களில் ஒருவர் (தடுப்பு வைத்து கொண்டு) தொழுது கொண்டிருக்கும்போது யாரேனும் குறுக்கே செல்ல நாடினால் அவரைச் செல்ல விடாதீர்கள். தடுத்ததையும் அவர் மீறினால் அவருடன் சண்டையிடட்டும். ஏனெனில் அவருடன் ஷைத்தான் இருக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு குஸைமா)

உங்களில் ஒருவர் தொழுதால் தடுப்பு வைத்துக் கொள்ளட்டும். மேலும் அதனருகில் நெருங்கி நின்று கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா)

மேற்கண்ட ஹதிஸ்களின் மூலம் சுத்ரா (தடுப்பு) இல்லாமல் ஒருவர் தொழும்போது அவரின் தொழுகையை வீணாக்குவதற்காக ஷைத்தான் குறுக்கே செல்கின்றான். மேலும் ஒருவர் திறந்தவெளியில் தொழுதாலும் சுத்ரா வைத்துக் கொண்டுதான் தொழவேண்டும்.

இதையே அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். (7:27)

09) முதல் வரிசையில் நின்று தொழுவதை அலட்சியம் செய்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், பாங்கு கூறுவதிலும், (தொழுகையின்) முதல் வரிசையிலும் உள்ளதை (சிறப்பை) மக்கள் அறிந்துகொண்டால், அதை அடைய முடியாத நிலை ஏற்பட்டால், சீட்டுக் குலுக்கி போட்டுக் கொள்வார்கள். மேலும் பர்ளான தொழுகைக்கு விரைவாக வருவதின் சிறப்பை அவர்கள் அறிந்து கொண்டால், அதற்காக முந்திக் கொள்வார்கள். மேலும் இஷாவிலும், சுப்ஹிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தாவது அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)

தொழுகைக்காக பாங்கு கூறப்பட்டால் பள்ளிக்கு விரைந்து வருவதிலும், முதல் வரிசையில் நின்று தொழுவதிலும் ஆர்வம் காட்டுவதே சிறந்தது.

10) தொழுகையின் போது வானத்தை நோக்கி முகத்தை உயர்த்துதல் அல்லது இமாமைப் பார்த்தல் அல்லது வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பிப் பார்த்தல்
தொழும்போது முகத்தை வானத்தின்பால் உயர்த்துவோர், அதிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்வார்களாக! இல்லையென்றால் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுப் போய்விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (முஸ்லிம்)

நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழும்போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் இது ஷைத்தான் மனிதனிடமிருந்து (அவனது கவனத்தை) அபகரிக்கும் படியானதோர் செயலாகும் என்றார்கள். (புகாரி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பதானது, முறையாக இறை உணர்வோடு தொழும் ஒருவரின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியாகும். தொழுவோர் இவ்விஷயத்தில் மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்ளவேண்டும்.

11) தொழுகையின் போது வரிசைகளுக்கு மத்தியில் இடைவெளியிட்டு நின்றல்
வானவர்கள் தம் இரட்சகனின் முன் அணி வகுத்து நிற்பது போல நீங்கள் அணிவகுத்து நிற்க வேண்டாமா? என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் வானவர்கள் தம் இரட்சகனின் முன் எவ்வாறு அணிவகுத்து நிற்கின்றார்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் முதல் வரிசையை நிறைவு செய்வார்கள். வரிசையில் சேர்ந்து (இடைவெளியின்றி) நெருக்கமாக நிற்பார்கள் என்று பதில் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்கள் வரிசைகளை நேராக ஆக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் வரிசையை நேராக்கிக் கொள்வது தொழுகையின் பரிபூரணத் தன்மையின் ஓர் அம்சமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

பின்னர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப் புறப்பட்டு வந்து தக்பீர் சொல்லத் தயாரான போது அணியை விட்டும் தனது மார்பை வெளிக் காட்டிக் கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். உடனே அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அல்லாஹ் உங்களிடையே வேற்றுமையை உண்டாக்கி விடுவான் என்று கூறினார்கள். (முஸ்லிம்)

உங்கள் வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் எனது முதுகுக்குப் பின் புறமும் உங்களைக் காணுகின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒவ்வொருவரும் தனது தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும், தனது பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள். (புகாரி)

12) சூரத்துல் ஃபாத்திஹாவை நிறுத்தியும், நீட்டியும் ஓதாமல் விரைவாக ஓதுதல்
நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் வசனம், வசனமாக நிறுத்தியும், நீட்டியும் அழகாகத் தொழுவார்கள். (அபூதாவூத்)

13) தொழுகையின் போது அமைதியில்லாமல் இருப்பதும், கடிகாரத்தில் நேரம் பார்ப்பதும், ஒரு கையைக் கொண்டு ஆடைகளைச் சரிசெய்வதும், கால்களை அசைத்துக் கொண்டு நிற்பதும்
இதுபோன்ற அனைத்து செயல்களும் தொழுகையில் உள்ளச்சத்தை மறந்து தொழும் நிலையை உண்டுபண்ணும். இதையே அல்லாஹ் தனது திருமறையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள் (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். (அல்குர்ஆன் 2:238)

14) ஜமாத்(கூட்டுத்) தொழுகையின் போது இமாமை முந்தித் தொழுதல்
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள், இமாமை முந்தாதீர்கள். இமாம் அல்லாஹுஅக்பர் என்று கூறும் போது நீங்களும் அல்லாஹுஅக்பர் என்று கூறுங்கள். இமாம் வலள்ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள் என்றும் இன்னொரு அறிவிப்பில் நிச்சயமாக இமாமை ஏற்படுத்தியது பின்பற்றப்படுவதற்கே என்று கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களில் ஒருவர் இமாமுக்கு முந்தி (ருகூவு அல்லது ஸஜ்தாவில்) தலையை உயர்த்தினால்(மறுமையில்)அவரின் தலையை கழுதையின் தலையைப் போன்று அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்சக் கூடாதா? அல்லது அவரின் தோற்றத்தைக் கழுதையின் தோற்றத்தைப் போன்று அல்லாஹ் ஆக்கி விடுவதை அவர் அஞ்சக் கூடாதா? என நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

15) ருகூவின் போது தலையை தாழ்த்துதல், உயர்த்துதல் அல்லது பின்பக்கமாக வளைந்து இருப்பது
ருகூவின் போது தலையை சாதாரண நிலையில் வைத்து முதுகுத் தண்டை செவ்வையாக வைத்து கால்களின் நிலை சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் தலையைத் தாழ்த்தவும் மாட்டார்கள், உயர்த்தவும் மாட்டார்கள். மாறாக இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக வைப்பார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)

16) ருகூவிலும் ஸஜ்தாவிலும் கைகளை உடலின் இரண்டு பக்கமும் இடித்தவாறு வைத்தல் அல்லது சஜ்தாவில் தொடைகளின் மேல் வயிற்றைத் தாங்கிக் கொள்ளுதல்.

சஜ்தாவின் போது நடுநிலையை மேற்கொள்ளுங்கள்! தமது கைகளை நாய் விரிப்பதுபோல் உங்களில் எவரும் விரிக்கலாகாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா)

நபி(ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும் போது தமது தொடைகளின் மேல் வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் (ஒன்றுடன் மற்றொன்று சேராமல்) விரித்தவர்களாகவும் ஸஜ்தாச் செய்வார்கள். (அபூதாவூத்)

17) சூரத்துல் ஃபாத்திஹா முடிந்தவுடன் ஆமீன் என்று சப்தமாக சொல்லாமல் இருப்பது
இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவரது ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு சரியாக அமைந்து விட்டால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஆகவே சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்து இமாம் ஆமின் சொல்லும்போது தொழுகையில் நாமும் சப்தமாக ஆமீன் கூறவேண்டும்.

18) ஸஜ்தாவின் போது நெற்றியை தரையில் வைக்கும் முறை
இருபாதங்கள், இரு மூட்டுக்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புக்கள் தரையில் படுமாறு ஸஜ்தாச் செய்யம்படி நான் கட்டளையிடப் பட்டிருக்கின்றேன் என நபி(ஸல்) அவர்கள் கூறும்போது நெற்றியைக் குறிப்பிடுகையில் தமது கையை மூக்கின் மீது வைத்துச் சுட்டிக் காட்டினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

19) அவசர அவசரமாக ருகூவும், சுஜுதும் செய்தல்
நபி(ஸல்) அவர்கள் பூரணமாக ருகூஹ் மற்றும் சஜ்தா செய்யாத ஒரு மனிதரைப் பார்த்து சொன்னார்கள், பரிபூரணமற்ற முறையில் தொழுத நிலையிலேயே இவர் மரணித்தால், முஹம்மதுக்கு வழங்கப்பட்ட மார்க்கத்தை அல்லாது பிற மார்க்கத்தை பின்பற்றிய நிலையில் மரணித்தவரை போன்றவராவார். அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள், எனது நம்பகமான நண்பர் முஹம்மது(ஸல்) அவர்கள், 'கோழி கொத்துவதை போல அவசரமாக தொழுவதையும், நரியைப் போன்று தொழுகையில் கண்களை சுழல விடுவதையும், குரங்கைப் போல (தொழுகையில் தொடையில்) அமருவதையும் தடை செய்தார்கள்'. (அஹ்மத், தயாலிஸி)

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள், திருடர்களில் மோசமானவன் யார் என்றால், எவர் ஒருவர் தன்னுடைய தொழுகையில் திருடுகிறாரோ அவர்தான். அதற்கு ஸஹாபாக்கள் கேட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எவ்வாறு திருடமுடியும்? அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எவரொருவர் தொழுகையில் ருகூவும், ஸுஜுதும் சரிவர பூர்த்தி செய்யாமல் தொழுகின்றாரோ அவரே தொழுகையில் திருடுபவர் ஆவார். (தப்ரானி)

ருகூவிலும், ஸுஜுதிலும் சிறிது நேரம் தாமதித்து உடல் உறுப்புக்கள் அமைதியடையும் வரை அடுத்த நிலைக்கு செல்ல வேண்டாம். ருகூவில் குறைந்தது மூன்று முறை மெதுவாக சுப்ஹான ரப்பியல் அளீம் கூறும் நேரம், ஸுஜுதில் மூன்று முறை சுப்ஹான ரப்பியல் அஃலா கூறும் நேரம் போதுமானது.

20) தொழுகையின் முடிவில் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்' என்று கூறும் போது தன் இரு உள்ளங் கைகளும் உயர்த்துதல்
நபித்தோழர்கள் அவ்வாறு செய்யும் போது நபி(ஸல்) அவர்கள், 'கட்டற்ற குதிரைகளின் வால்களைப் போல் ஏன் கைகளை நகர்த்துகிறீர்கள்' என்றனர். பிறகு அதனைப்போன்று அவர்கள் செய்யவில்லை. (அபூதாவூத், நஸாயி)

21) இடது கை மூலம் தஸ்பீஹ் எண்ணுவது
நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின் தன்னுடைய வலது கைவிரல்களை பயன் படுத்தித்தான் தஸ்பீஹ் எண்ணுபவர்களாக இருந்தார்கள். எனவே இடது கை கொண்டு தஸ்பீஹ் எண்ணுவது உகந்ததல்ல. யஸீரா அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி(ஸல்) அவர்கள் பெண்களை அவர்களின் விரல்களினால் தஸ்பீஹ் செய்ய ஏவினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள், மறுமை நாளில் அவைகள் (அவ்விரல்கள்) பேசவைக்கப்படும் மேலும் அவைகளின் மீது கேள்வி தொடுக்கப்படும் (அதன் செயல்கள் பற்றி). (திர்மிதி)

22) பர்ளான தொழுகைக்கு பிறகு மற்ற தொழுகையாளிகளின் கைகளைப் பற்றி குலுக்கி 'தக்கப்பளல்லாஹ்' (தொழுகை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக) என்று கூறுவது
இதுபோன்ற செயல்கள் பித்அத் ஆகும். இது நபி(ஸல்) அவர்களின் வழியுமல்ல, அவரைப் பின்தொடர்ந்து வந்த ஸஹாபாக்களின் வழியுமல்ல.

23) தொழுகையில் துஆ கேட்கும் நேரம்
அத்தஹியாத் ஓதிய பிறகு (ஸலாம் கொடுப்பதற்கு முன்) தமக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்துத் தன் இறைவனிடம் கேட்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயி)

24) தொழுகை முடிந்ததும் பள்ளிளை விட்டு வெளியேறுதல் மற்றும் திக்ர்(இறைதியானம்) செய்யாமை
தொழுகை முடிந்ததும் பள்ளியைவிட்டு வெயியேறாமல் சுபஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும், அல்லாஹுஅக்பர் 33 முறையும் ஓதி லாஇலாஹா இல்லல்லாஹ் வஹதஹு.., ஆயத்துல் குர்ஸி (அல்குர்ஆன் 2:255) யையும் மற்றும் ஆதாரபூர்வமான திக்ருகளை ஓதுவது.

25) தொழுபவருக்கு முன் குறுக்கிட்டுச் செல்லுதல்
தொழுபவனின் குறுக்கே நடந்து செல்பவன், அவன் மீது உள்ளதை (தண்டனையை) அறிந்தால், அவன் முன் நடந்து செல்வதை விட நாற்பது நாள் கூட (தொழுகையை முடிக்கட்டும் என எதிர்பார்த்து) நிற்பது அவனுக்கு சிறப்பாகி விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஜுஹைம் கூறினார்கள்.

(என்னிடம்) கூறியவர் நாற்பது நாள் அல்லது நாற்பது மாதம் அல்லது நாற்பது வருடம் என்பதில் எதைக் கூறினார் என்பதை நான் அறிய மாட்டேன் என இதன் அறிவிப்பாளரில் ஒருவரான அபூ நஸ்ர் கூறுகின்றார் (புகாரி, முஸ்லிம்)

26) நோயின் காரணமாகவோ, உடல்நிலை சரியில்லாத காரணத்தாலோ தொழுகையை விட்டு விடல்
வியாதி அல்லது இயலாமை ஆகியவற்றின் காரணமாக பர்ளான தொழுகையை நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்து தொழவேண்டும். அதற்கும் இயலாதவர் ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டு தொழவேண்டும். அதற்கும் இயலாதவர் மல்லாந்துப்படுத்துக் கொண்டு ருகூவு, ஸுஜூது ஆகியவற்றைக் சைகை செய்து தொழவேண்டும் என்பதாக மார்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் உளூ எடுப்பதற்கு தண்ணீர் இல்லாதவர்கள் சுத்தமான மணலோ அல்லது தரைப்பகுதியிலோ தமது கைகளை அடித்து தயம்மும் செய்து தொழுதுக் கொள்ளவேண்டும். தொழுகை இஸ்லாத்தின் முக்கியத் தூண்களில் ஒன்று என்பதன் அடிப்படையில் பார்த்தோமானால் அதைத் தவறவிடுவது நல்லடியார்களுக்கு சிறந்ததல்ல. ஏனென்றால் நபியவர்கள் தங்களின் எதிரிகளை போர்முனையில் சந்தித்த போது கூட தொழுகையை பேணித் தொழுதார்கள்.

27) கப்ரு (அடக்கஸ்தலங்)களில் தொழுதல் கூடாது
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள் கப்ருகள் இருக்கும் இடங்களில் தொழுவதும் கப்ருகளின் மேல் அமர்வதும் கூடாது. (முஸ்லிம்)

கப்ருகள் இருக்கும் இடங்கள்தான் பள்ளிவாசல்கள் என பிற சமுதாய மக்கள் நினைக்கும் அளவிற்கு முஸ்லிம் சமுதாய மக்கள் கப்ரு வணங்கிகளாக இருக்கின்றனர். ஆகவே முஸ்லிம் மக்கள் கப்ருகளை வணங்குவதும் அவற்றின் மீது கட்டிடம் (தர்கா) கட்டுவதும் தவிர்த்து இறைவனிடம் மட்டும் கையேந்தி தமது அனைத்து வகை வணக்க வழிபாடுகளிலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழி நடப்பதே இம்மைக்கும், மறுமைக்கும் உகந்தது.

மொழிப்பெயர்த்து தொகுத்தது: மாலிக் மற்றும் அபூ உமர்

3 comments:

Sardhar said...
This comment has been removed by a blog administrator.
Sardhar said...

மிகவும் அருமையான தொகுப்புக்கள். ஆன் லைனில் மட்டும் படித்துப் பயன் பெறுவதோடு அல்லாமல் பிறருக்கும் இச்செய்திகள் கிடைத்திட வழி செய்ய வேண்டும்.

நிர்வாகி-க்கு ஓர் வேண்டுகோள்..

வெகு வேகமாக வளர்ந்து வரும் தமிழ்முஸ்லிம் Blog-ன் சிறந்த கட்டுரைகளை தனியே தொகுக்க ஏதும் ஏற்பாடு செய்யவுள்ளீர்களா? எனில் அது எதிர்காலத்தினருக்கும் நன்மை தரும் செயலாக இருக்கும்.

அன்புடன்,
சர்தார்.

நிர்வாகி said...

உங்களின் ஊக்கத்திற்கு நன்றி.

Offline-க்காக இன்னும் நான் யோசிக்கவில்லை. அடுத்த வெளியீடு மின்னணு நூலகம் வெளிவரும்போது அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Online-ஐ பொருத்தவரை மீண்டும் தொகுக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. அதன் சுட்டிகளை மட்டும் தொகுத்தால் போதும் என நினைக்கிறேன். அதற்காக இரண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

1) அட்டவணையில் 10 பதிவுக்கு பழைய சுட்டிகள் தொகுக்கப்படுகிறது.
2) இஸ்லாம்கல்வி.காம்-இல் அனைத்து இஸ்லாமிய/முஸ்லிம்களின் வலைப்பதிவுகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் சுட்டிகள் மட்டும் தொகுக்கப்படுகிறது.

இதுவல்லாமல் சிலவற்றை எழுத்தாளர்களின் அனுமதியுடன் இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

இதனையே சற்று சிரமம் எடுத்து எழுத்தாளரின் பெயர் வரிசையில் "மரத்தடி.காம்" போன்று தொகுக்கலாம். நியூக்ளியஸை துணைக்கு அழைத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆனால் ஆன்லைனில் உழைக்கவேண்டும். யார் உழைப்பது?